கோவை: பாராட்டு விழாவில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்புரை

8 Min Read
- Advertisement -

ஆட்சிகள், அரசுகள் மாறலாம்; அதிகாரம் தற்காலிகமானது!
அறிவுக்காக உருவாக்கப்படும் நிறுவனங்களே நிரந்தரமானவை!
‘பெரியார் அறிவுலக’த்திற்கு அடிக்கல் நாட்டிய அன்றே,
திறப்பு விழாவையும் அறிவித்தார் சமூகநீதிக்கான சரித்திர நாயகர்!

கோவை, நவ.8   ஆட்சிகள், அரசுகள் மாறலாம்;  அதிகாரம் தற்காலிகமானது!  அறிவுக்காக உருவாக்கப்படும் நிறுவனங்களே நிரந்தரமானவை! ‘பெரியார் அறிவுலக’த்திற்கு அடிக்கல் நாட்டிய அன்றே, திறப்பு விழாவையும் அறிவித்தார் சமூகநீதிக்கான சரித்திர நாயகர்! என்றார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்புரை அவர்கள்.

Contents

‘பெரியார் அறிவுலகம்’ கண்ட ‘திராவிட நாயகர்’ தளபதி மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா!

கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ உருவாக்கிய திராவிட நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகம் சார்பில்,  4.11.2026 அன்று  மாலை 6 மணிக்கு கோவை வ.உ.சி. மைதானத்தில் பாராட்டு விழா – பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது. அவ்விழாவில்,  திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்புரையாற்றினார்.

அவரது வரவேற்புரை வருமாறு:

பெருமதிப்பிற்குரிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களே, மேடையில் அமர்ந்துள்ள சிறப்புமிக்க பெருமக்களே, அன்பிற்கினிய தோழர்களே, தந்தை பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி நெறிகளை போற்றும் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்!

பெரியாரின் சிந்தனை
வெறும் எதிர்ப்புச் சிந்தனை அல்ல!

இன்று நாம் கூடியிருப்பது ஒரு சாதாரண நிகழ்விற்காக அல்ல; தந்தை பெரியார் அவர்கள் காண விரும்பிய புதிய உலகத்தை நோக்கி ஒரு வரலாற்றுப் பணியை பாராட்டுவதற்காக. தந்தை பெரியாரின் சிந்தனை வெறும் எதிர்ப்புச் சிந்தனை அல்ல. ஜாதி, மதம், மூடநம்பிக்கை, பெண்ணடிமைத்தனம், பொருளாதார ஏற்றத் தாழ்வு ஆகியவற்றை எதிர்ப்பதோடு, மனிதன் மானத்தோடும், அறிவோடும், சுயமரியாதை சமத்துவத்தோடும் வாழக்கூடிய ஒரு புதிய உலகத்திற்கு வழியையும் அவர் செயலில் காட்டினார். அப்படிப்பட்ட புது உலகத்தை உரு வாக்குவதற்காக மிகப்பெரிய கருவி, அறிவு.

தந்தை பெரியார் கண்ட புது உலகம்!

தந்தை பெரியார் காண விரும்பிய புதிய உலகம். இந்த உலகத்தில் மனிதன் பிறப்பால் உயர்ந்தவன் அல்ல; பிறப்பால் தாழ்ந்தவன் அல்ல; ஜாதியின் பெயரால் அவமதிக்கப்பட மாட்டான் – மதத்தின் பெயரால் ஏமாற்றப்பட மாட்டான் – அறியாமையால் அடிமைப்படுத்தப்பட மாட்டான் – உழைப்பை சுரண்டப்பட விடமாட்டான் – பெண்ணாகப் பிறந்தால் கட்டுப்படுத்த மாட்டான். மனிதனை மனிதனாக மதிக்கப்படும் உலகமே அது தந்தை பெரியார் கண்ட புது உலகம் தோழர்களே!

பெரியார் அறிவுலகத்தின்
வரலாற்றுத் தேவை!

அப்படிப்பட்ட ஓர் உலகம் உருவாக வேண்டுமானால், முதலில் எது தேவை? அறிவு தேவை! அறிவு வளர வேண்டுமானால், எது தேவை? கல்வி தேவை! ஆனால், தந்தை பெரியார் அவர்கள் விரும்பிய அந்தக் கல்வி, வெறும் பட்டம் பெறுவதற்கான கல்வி அல்ல. ஒரு மனிதனை விடுவிப்பதற்கான கல்வி. பிறரை சார்ந்து வாழாமல், தனது அறிவால் சிந்தித்து, முடிவெடுக்கக்கூடிய, கற்றெடுக்கக் கூடிய ஒரு கல்வி. எதையும் கண்மூடித்தனமாக நம்பாமல், கேள்வி கேட்கும் துணிவை வளர்க்கும் கல்வி. மூடநம்பிக்கைகளை ஆராய்ந்து, மறுக்கும் பகுத்தறிவை வளர்க்கும் கல்வி. சுயமரியாதையுடன் வாழும் மனிதனை உருவாக்கும் கல்வி. அப்படிப்பட்ட கல்வி மற்றும் அறிவுப் புரட்சிக்கான ஒரு தளம் உருவாக்கப்பட வேண்டும். அதுதான் பெரியார் அறிவுலகத்தின் வரலாற்றுத் தேவை. அந்த அறிவை வளர்ப்பதற்காக ஒரு மாபெரும் தளமாக உருவாக்கப்பட்டிருக்கிறது கோவை பெரியார் அறிவுலகம். இது வெறும் கட்டடம் அல்ல; ஒரு கருத்தியல் முதலீடு. இது வெறும் ஒரு நினைவுச் சின்னமாக அல்ல. எதிர்காலத்தில் தலைமுறையை உருவாக்கும் அறிவுக் கருவூலகம். இந்த வரலாற்றுப் பணியை  முன்னெடுத்த முன்னாள் முதலமைச்சர் மானமிகு தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை இன்று நாம் மனமார பாராட்டுகிறோம். அவரது ஆட்சிக் காலத்தில் அறிவையும், வாசிப்பதை யும், சிந்தனையையும் மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தில், மதுரையில் உருவாக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் – தமிழ்நாட்டில் அறிவு வளர்ச்சிக் கான ஒரு மாபெரும் அடையாளமாக விளங்குகிறது.

 ‘திராவிட மாடல்’ ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள்!

அதேபோல் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் உருவாக்கப்பட்ட முதலமைச்சரின் படைப்பகங்கள், இளம் தலைமுறையினரின் வாசிப்பு, அறிவு, திறன் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் அதில் உருவாக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, சமூக நீதிக்காகப் போராடிய, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க பணியைச் செய்த சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கும், உலகப் பொதுவுடைமை சிந்தனை வலுவான தத்துவ அடித்தளத்தை அமைத்த தத்துவ மேதை காரல் மார்க்ஸ் அவர்களுக்கும், சிந்துவெளி நாகரிக தத்துவ மேதை –  தொல்லியல் அறிஞர் ஜான் மார்ஷல் ஆகியோரை நினைவு கூர்ந்து, அவர்களுக்குச் சிலையை அமைத்து, வரலாற்றையும், சிந்தனையையும் மதிக்கும் அரசின் சிறப்பான செயலாகும்.

அதிகாரம் தற்காலிகமானது; அறிவுக்காக உருவாக்கப்படும் நிறுவனங்களே நிரந்தரமானவை!

அறிவு, சமூக நீதி, வரலாறு, மனித விடுதலை இவை அனைத்தும் இணைத்துப் பார்க்கும் பார்வையே, திராவிட இயக்கத்தின் பார்வை. அந்தப் பார்வையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பணிகளில் மிக முக்கியமான ஒன்று, இந்தப் பெரியார் அறிவுலகம். ஆட்சிகள் மாறலாம், அரசுகள் மாறலாம்; ஆனால், மக்களின் அறிவுக்காக உருவாக்கப்படும் நிறுவனங்களே தலைமுறையைத் தாண்டி நிற்கும். அதிகாரம் தற்காலிகமானது. அறிவுக்காக உருவாக்கப்படும் நிறுவனங்களே நிரந்தரமானவை.

எனவே, தந்தை பெரியார் அறிவுலகம் வெறும்  கட்டுமானப் பணி அல்ல; தந்தை பெரியார் காண விரும்பும் பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதி நிறைந்த புது உலகத்தை நோக்கி ஓர் அரிய பயணத்தின் முக்கியமான அடிக்கல். இந்த அடிக்கல்லை அமைத்த முன்னாள் முதலமைச்சர் தளபதியார் அவர்களின் அளப்பரிய பணிக்காக இந்தப் பாராட்டுக் கூட்டத்தில், நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும்,  இதயமார்ந்த நன்றிகளையும் அவருக்குக் குவிக்கிறோம்.

பெரியார் அறிவுலகத்திற்கு

அடிக்கல் நாட்டிய அன்றே,
திறப்பு விழாவையும் அறிவித்தார்!

சமூகநீதி திசையிலும் இந்திய துணைக் கண்டத்திலே தமிழ்நாடு முதல் மாநிலமாக இருப்பது திராவிட இயக்கத்தின் அருட்கொடையே! அதில் சிறப்பாக சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அன்றைய ‘திராவிட மாடல்’ அரசு, தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்தும் பெருமை சேர்த்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் கோவையில் தந்தை பெரியார் அறிவுலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை அளித்தது. 4.11.2024  அன்று நம்முடைய தளபதி அவர்கள், அதற்கான அடிக்கல் நாட்டியதுடன், அன்றே துணிச்சலாகத் திறப்பு விழா – ஜனவரி மாதம், 2026  நடக்கும் என்பதை ஓர் அறிவிப்பாகவே வெளியிட்டார். அந்தச் செய்தியை காணொலியில் பார்த்துக் கொண்டிருந்த நமது தலைவர் ஆசிரியர் அவர்கள், உடனடியாக அவரைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நம்முடைய பாராட்டுகளையும் அன்றே அவருக்குத் தெரிவித்தார் என்பதை நினைவு கூறுகிறேன். அதுமட்டுமல்ல அதை வரவேற்று அன்றைய ‘விடுதலை’யில் அறிக்கையும் வெளியிட்டார்கள். பிறகு 15.9.2025 அன்று பெரியார் அறிவுலகத்தை அன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் அண்ணன் எ.வ.வேலு அவர்களுடன், அன்றே நாங்கள் பார்த்து மகிழ்ந்தோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெருமகிழ்ச்சியடைந்த
ஆசிரியர்!

அதைவிட மேலும் சிறப்பு என்னவென்றால், ஆசிரியர் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக, தளபதியார் அவர்களுடன் இன்று (4.11.2026) காலை வந்து அறிவுலகத்தைப் பார்த்தது என்பது, அவர் தன் வாழ்க்கையிலேயே பெரும் மகிழ்ச்சியாக கருதுகிறேன் என்று கூறினார் என்பது மேலும் சிறப்பு.

மனமார்ந்த மகிழ்ச்சியுடன்
அனைவரையும் வரவேற்கிறோம்!

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்விற்குத் தலைமை ஏற்று நன்றி பாராட்டுரை வழங்கிட உள்ள, கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களையும், இவ்விழாவின் நாயகர் தமிழ்நாடு மக்கள் முதலமைச்சர் உலகத் தமிழர்கள் போற்றக்கூடிய வகையில், பல்வேறு சரித்திரச் சாதனைகளைச் செய்த நம்முடைய மானமிகு தளபதியார் அவர்களையும், ‘திராவிட மாடல்’ அரசின் நாயகரைப் பாராட்டி சிறப்புரையாற்ற வருகை தந்திருக்கக்கூடிய கழகத் துணைத் தலைவர் அண்ணன் கவிஞர் கலிபூங்குன்றன் அவர்களையும், இங்கே முன்னிலை வகிக்கக் கூடிய, பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திராவிடர் கழ கத்துக்குப் பெருந்துணையாக இருக்கும் எம் அருமைச் சகோதரரும், கோவை மண்டல தி.மு.க. பொறுப்பாளரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டப்பேரவை உறுப்பி னரான மானமிகு வி.செந்தில் பாலாஜி அவர்களையும், மேனாள் அமைச்சர்கள் கே.என்.நேரு அவர்களையும், அண்ணன் எ.வ. வேலு அவர்களையும், கண்ணப்பன் அவர்க ளையும், சுவாமிநாதன் அண்ணன் அவர்களை யும், அய்யா முத்துசாமி அவர்களையும், சக்க ரபாணி அவர்களையும், மானமிகு கயல்விழி செல்வராஜ் அவர்களை யும், நமது ஈரோடு நாடாளுமன்ற உறுப்பி னர் அய்யா பிரகாஷ் அவர்களையும், திரா விட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் அவர்களையும், கோவை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக தெற்கு மாவட்டச் செயலாளர் மானமிகு தளபதி முருகேசன் அவர்களையும், கோவை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக மாநகர மாவட்ட செயலாளர் துரை. செந்தமிழ் செல்வன் அவர்களையும், கோவை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ஆர்.ரவி அவர்களையும், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி பா.ராஜ்குமார் அவர்களையும், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அய்யா கே.ஈஸ்வர சாமி அவர்களையும், வணக்கத்திற்குரிய கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்களையும், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சுதாகரர் அவர்களையும்,

நமது கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயகுமார் அவர்களையும், கோவை மாவட்டச் செயலாளர் பிரபாகரன் அவர்களையும், கோபி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சென்னியப்பன் அவர்களையும், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சண்முகம் அவர்களையும், நமது மருத்துவ குழுத் தலைவர் டாக்டர் கவுதமன் அவர்களையும், இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி மற்றும் மேட்டுப்பாளையம், திருப்பூர், நீலமலை, பொள்ளாச்சி, தாராபுரம், ஈரோடு, கோவை மாநகர செயலாளர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்று, இங்கே நன்றியுரை ஆற்ற இருக்கக்கூடிய கோவை மாவட்டத் தலைவர் சகோதரர் ம.சந்திரசேகர் அவர்களையும், இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கிற துணைப் பொதுச்செயலாளர் சகோதரர் பிரின்சு என்னாரெசு பெரியார்  அவர்களையும், சிறப்பு விருந்தினர்களையும், மேடையில் அமர்ந்துள்ள அனைத்துப் பெருமக்களையும், அன்பான தோழர்களையும், தமிழ்நாடு முழுவதுமிருந்து வந்திருக்கக் கூடிய அனைத்துத் தோழர்களையும் வருக! வருக! என மனமார்ந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

வாழ்க, தந்தை பெரியார் சிந்தனை!

வளர்க, பகுத்தறிவு!

வெல்க, சுயமரியாதை!

வெல்க, சமூகநீதி!

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *