நெய்வேலி, நவ. 8- என்.எல்.சி., இந்தியா நிறுவனம் கடந்த செப்.30ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் அரையாண்டில், நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய மொத்த லாபமாக ரூ. 1,764.34 கோடியாக உயர்ந்து, சாதனை படைத்துள்ளது.
என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் (2026–2027) முதல் 6 மாதங்களுக்கான நிதி நிலை முடிவுகளை அந்நிறுவனத்தின் சேர்மன் பிரசன்னகுமார் ஆச்சார்யா தலைமையிலான இயக்குநர்கள் குழு அறிவித்துள்ளது. கடந்த செப்.30ஆம் தேதியுடன் முடிவடைந்த 6 மாதங்களில் நிலக்கரி உற்பத்தி 78.78 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. அனல் மின்சாரம் வாயிலாக மொத்த மின் உற்பத்தி, 8,306.66 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது.
முதல் அரையாண்டிற்கான செயல்பாடுகள் மூலம் கிடைத்த மொத்த வருவாய், ரூ. 5,562.61 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் ஒப்பிடுகையில், இது 19.37 சதவீதம் அதிகமாகும். கடந்த செப்.30ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் அரையாண்டில், செயல்பாடுகளின் மூலம் கிடைத்த வருவாய் ரூ. 9,449.10 கோடியாக உயர்ந்துள்ளது; இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஒப்பிடுகையில், 18.05 சதவிகித வளர்ச்சியாகும்.
முடிவடைந்த முதல் அரையாண்டில், நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய மொத்த லாபம் ரூ. 1,764.34 கோடியாக உயர்ந்து, இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச லாபத்தை எட்டியுள்ளது; இந்த நிதி ஆண்டிற்கு 15 சதவிகிதம் இடைக்கால ஈவுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
