ஜாதியக் கொடுமையால் மறைந்த அகிலன் இல்லத்தில் ஆசிரியர்!

- Advertisement -

திராவிடர் கழகம்

கோயம்புத்தூர் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் படித்து வந்த 11 ஆம் வகுப்பு மாணவர் அகிலன் என்பவர், ஜாதியக் கொடுமையினால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். “வகுப்பில் அரசு உதவித் தொகை பெறக் கூடியவர்கள் யார்? யார்?”, என ஆசிரியர் கேட்ட போது, மாணவர் அகிலனும் எழுந்துள்ளார்.

“நீ பட்டியல் ஜாதியா? மாட்டுக்கறி சாப்பிடுவாயா?’’ என்கிற தொடர் கேள்விகள் மாணவரை மனதால் நிலைகுலைய வைத்துள்ளன.

இச்செய்திகளை அகிலன் தம் பெற்றோரிடம் கூறவும், அவர்கள் பள்ளிக்கூடம் சென்று நிர்வாகம் மற்றும் தலைமையாசிரியரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் அகிலன் வகுப்பு நண்பர்கள் அவரைத் தனிப்படுத்தல், பேச, பழக மறுத்தல், கேலி செய்தல் உள்ளிட்டவை தொடர்ந்த நிலையில், அகிலன் தன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

இதற்கு நியாயம் கேட்டு ஒரு வார காலமாகக் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் போராடிய நிலையில், எந்த சிறு அசைவும் ஏற்படவில்லை. இந்நிலையில் போராட்டத்தைக் கைவிடுங்கள், மருத்துவமனையில் இருக்கும் அகிலன் உடலைப் பெற்றுக் கொள்ளுங்கள் என மாவட்ட நிர்வாகத்தால் நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

இந்தப் போராட்டத்தின் போது சமூகத் தின் மீது அக்கறை கொண்ட பல்வேறு மனிதர்களும் அதில் பங்கேற்று தங்கள் ஆதரவைக் கொடுத்துள்ளனர். திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், அகிலனின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். தமிழ்நாடு எவ்வளவோ முன்னேறி வரும் நிலையில், சிலரின் மனநிலை ஜாதித் தீவிரம் பிடித்து அலைகிறது. அதிலும் ஆசிரியர் பணி என்பது  சமூகம் காக்கும் பணி. அவர்களாலே இக்கொடுமைகள் நடப்பது கேவலமான செயலாகும்.

இந்நிலையில் “பெரியார் அறிவுலகம்” நிகழ்ச்சிக்காக கோயம்புத்தூர் வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி,  மோகனா அம்மையார் மற்றும் கழகத் தோழர்கள் பீளமேடு பகுதியில் உள்ள அகிலன் இல்லத்திற்குச் (05.11.2026) சென்றனர். அகிலன் பெற்றோர் மற்றும் அவரது தங்கைக்கு ஆறுதல் கூறியதோடு, “நடந்த சம்பவம் என்னைப் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாக்கிவிட்டது என்று  கழகத் தலைவர் ஆசிரியர் கூறினார். பெற்றோர்கள் தைரியமாக இருங்கள் எனக் கேட்டுக் கொண்டு, அகிலனின் தங்கையிடம் ‘‘நன்றாகப் படிக்க வேண்டும், உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும், என்ன உதவி வேண்டுமோ தயங்காமல் கேளுங்கள், நாங்கள் இருக்கிறோம், இந்த ஜாதிக் கொடுமைகளை, சமூகத்தில் இருந்து அழிக்கும் வேலையில் தான் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்”, என ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.‌ அகிலன் படத்திற்கு மோகனா அம்மையாரும், ஆசிரியரும் மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினர்.

திராவிடர் கழகம்

அகிலன் வீட்டில் இருந்து புறப்பட்டு வரும் வேளையில், மகளிர் மாணவர்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களைச் சந்தித்த ஆசிரியர் கண்கலங்கிவாறே சிறிது நேரம் பேசினார். “என்ன படிக்கிறீர்கள் எனக் கேட்டுவிட்டு, நன்றாகப் படிக்க வேண்டும்’’ எனக் கூறிய நிலையில், ‘‘ஜாதியை வேரோடு ஒழிக்க வேண்டும், அந்த உணர்வோடு இருங்கள்’’ எனக் கேட்டுக் கொண்டார். ‘‘இதுபோன்ற சம்பவம் இதுதான் கடைசியாக இருக்க வேண்டும், அதை மனதில் வையுங்கள். மாணவர் சமூகத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன். உங்களுக்குச் சோர்வு ஏற்படக் கூடாது. அகிலன் முடிவு மிகுந்த கவலையளிக்கிறது. முன்பே தகவல் தெரிந்திருந்தால் அனைவரும் சேர்ந்து போராடியிருக்கலாம். இதுபோன்ற முடிவுகளை எப்போது எடுக்கக் கூடாது. குறிப்பாக சமூகச் சிந்தனையுடன் பெண்கள் இருக்க வேண்டும். நீங்கள் நினைத்தால் எதையும் மாற்ற முடியும்”, என ஆசிரியர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *