‘சி.எம். என்றால், ஸ்டாலின்’ அது மக்களுடைய குரலாக இருக்கிறது;
அந்த அளவிற்கு மக்கள் நெஞ்சத்திலே அவர் ஊறி இருக்கிறார்!
காலத்தால் அழிக்க முடியாத நினைவுச் சின்னங்களை ஏற்படுத்தி இருக்கிறார்!
திராவிடர் கழகம் எதைச் செய்தாலும் அதிலே ஓர் ஆழமான பொருள் இருக்கும்!
‘பெரியார் அறிவுலகம்’ கண்டார் தளபதி மு.க.ஸ்டாலின்!
நம்முடைய ஆசிரியர் அவர்கள், சிறுகனூரில் ‘பெரியார் உலகம்’ காண இருக்கிறார்!
வாழ்விலும், தாழ்விலும் என்றைக்கும் துணையாய் இருப்பது கருஞ்சட்டைப் படை!
கோவை, நவ.7 ‘சி.எம். என்றால், ஸ்டாலின்’ அது மக்களு டைய குரலாக இருக்கிறது; அந்த அளவிற்கு மக்கள் நெஞ்சத்திலே அவர் ஊறி இருக்கிறார்! காலத்தால் அழிக்க முடியாத நினைவுச் சின்னங்களை ஏற்படுத்தி இருக்கிறார்! திராவிடர் கழகம் எதைச் செய்தாலும் அதிலே ஓர் ஆழமான பொருள் இருக்கும்! பெரியார் அறிவுலகம் கண்டார் தளபதி மு.க.ஸ்டாலின்! நம்முடைய ஆசிரியர் அவர்கள், சிறுகனூரில் ‘பெரியார் உலகம்’ காண இருக்கிறார்! வாழ்விலும், தாழ்விலும் என்றைக்கும் துணையாய் இருப்பது கருஞ்சட்டைப் படை என்றார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.
‘பெரியார் அறிவுலகம்’ கண்ட ‘திராவிட நாயகர்’ தளபதி மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா!
கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ உருவாக்கிய திராவிட நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகம் சார்பில், 4.11.2026 அன்று மாலை 6 மணிக்கு கோவை வ.உ.சி. மைதானத்தில் பாராட்டு விழா – பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது. அவ்விழாவில், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயருக்கு நன்றி பாராட்டு விழா ஆகிய இருபெரும் விழாவுக்குத் தலைமையேற்று நன்றி பாராட்டுரை வழங்க இருக்கின்ற – வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி 94 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கவிருக்கின்ற கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே,
இங்கே நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியவராக இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கக்கூடிய நமது பெரும் மதிப்பிற்குரிய மேனாள் முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மரியாதைக்குரிய மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களே,
முன்னிலை வகிக்கக்கூடிய சட்டப்பேரவை உறுப்பினர் வி.செந்தில் பாலாஜி அவர்களே, நன்றி கூற இருக்கக்கூடிய சந்திரசேகர் அவர்களே, எனக்கு முன்னாலே வரவேற்புரையாற்றிய நம்முடைய கழகத்தினுடைய பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் அனைவரையும் பெயர் சொல்லி வரவேற்ற நிலையில், காலத்தினுடைய அருமையைக் கருதியும், அவரவர்களையும் தனித்தனியாக கூறாமல், வந்திருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் பெருமக்களே, இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, வெள்ளம் போல் கூடி இருக்கக்கூடிய கழகத் தோழர்களே, தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
திராவிடர் கழகம் எதைச் செய்தாலும்
அதிலே ஓர் ஆழமான பொருள் இருக்கும்!
அதிலே ஓர் ஆழமான பொருள் இருக்கும்!
இது வெறும் பாராட்டு விழா அல்ல! திராவிடர் கழகம் எதைச் செய்தாலும் அதிலே ஓர் ஆழமான பொருள் இருக்கும். ‘நன்றி பாராட்டு விழா!’ அதிலே பொருள் இருக்கிறது. நாட்டிலே எத்தனையோ அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அய்ந்து ஆண்டுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றங்கள் நிகழ்கின்றன; ஆனால், அந்த அரசியல் கட்சிகளுக்கும் – திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அடிப்படையிலே ஒரு மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் சொல்வார்கள், ‘‘சமுதாயக் கொள்கை உள்ள அரசியல் கட்சி தி.மு.க.’ என்று சொல்லுவார்.
எழுத்திலும் சரி, பேச்சிலும் சரி, சட்டமன்றத்திலும் சரி, சமுதாயக் கொள்கை உள்ள அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்று சொல்வார். அந்தத் தனிச் சிறப்பு என்றைக்கும் நிலைக்கும் என்பதற்கு அடையாளமாக நம்முடைய தளபதி அவர்கள் இங்கே வருகை தந்திருக்கிறார்கள்.
வெறும் அரசியல் முழக்கங்கள் அல்ல;
இவை சமுதாய சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட நோக்கங்கள்!
இவை சமுதாய சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட நோக்கங்கள்!
அண்ணா அவர்கள் குறுகிய காலத்தில் தான் ஆட்சியில் இருந்தார். ஆனால், அவர் செய்த மூன்று சாதனைகள் – சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம்! சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டல்! ஹிந்திக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை! இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்கு காணிக்கை! இவையெல்லாம் வெறும் அரசியல் முழக்கங்கள் அல்ல. இவை சமுதாய சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட நோக்கங்கள். பின்னாளில், நம்முடைய முத்தமிழ் அறிஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தார்கள். அவருடைய ஆட்சியிலே எத்தனையோ சாதனைகள். பொதுவாக ஆட்சிக்கு வரக்கூடிய எந்தக் கட்சியிலும் சாலை போடுவார்கள், குடிநீர் கொடுப்பார்கள், தெருவிளக்குப் போடுவார்கள் இவையெல்லாம் வழக்கமாக அரசுகள் செய்யக்கூடிய காரியம்தான். ஆனால், காலத்தை வென்று நிற்கக்கூடிய, சமூக சிந்தனையோடு கூடிய, என்றும் நிலைத்திருக்கக்கூடிய, சமுதாய பணிகளைச் செய்யக்கூடிய ஓர் ஆட்சி இருக்குமானால், அது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியாகத்தான் இருக்கும். அதேபோல நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியிலே இருந்த பொழுது, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்.
பெரியார் நினைவு சமத்துவபுரம் கொண்டு வந்த முத்தமிழறிஞர் கலைஞர்!
அடுத்து பெரியார் நினைவு சமத்துவபுரம்; யாரா லும் சிந்திக்க முடியாத ஒன்று. நாட்டிலே ஜாதி ஒழிய வேண்டும், ஒழிய வேண்டும் என்பதற்காக – நூறு ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமும் பாடுபட்டு வருகின்றன. இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தையே கூட ஜாதியை பாதுகாக்கின்ற பகுதியை எரித்து, மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனைப் பெற்றவர்கள் திராவிடர் கழகத் தோழர்கள். அதனுடைய அறிகுறியாகத்தான், நம்முடைய முத்தமிழ் அறிஞர் அவர்கள் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். மிக உயர்ந்த சிந்தனை அது. பெரும்பகுதி சமத்துவபுரங்களைத் திறந்து வைத்த பெருமைக்கு உரியவர் அன்றைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த நம்முடைய மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்.
நாலாம் ஜாதி மக்களுக்காக ஆளக்கூடிய சூத்திரர்களின் அரசு!
அதேபோல, பெண்களுக்குச் சொத்துரிமை. அண்ணா அவர்கள், எப்படி இந்த ஆட்சியே பெரியா ருக்குக் காணிக்கை என்று சொன்னாரோ, அதேபோல் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் ஓர் அறிவிப்பைக் கொடுத்தார். எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் திமுக ஆட்சி, This is a third-rate Government என்று சொன்னார். உடனே நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், துப்பாக்கி வெடிப்பது போல் எழுந்து நின்று, ‘‘மன்னிக்க வேண்டும், தந்தை பெரியார் மொழியில் சொல்லுகிறேன்; பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரர் என்று சொல்லக்கூடிய, அந்தச் சூத்திரரான நாலாம் ஜாதி மக்களுக்காக ஆளக்கூடிய சூத்திரர்களின் அரசு இது’’ என்றார்.
மகளிருக்கு நம்முடைய தளபதி அவர்கள் ஆற்றிய தொண்டு சாதாரணமான ஒன்றல்ல!
இது எதோ அரசியல் முழக்கம் அல்ல; ஒரு சமூகப் புரட்சி முழக்கம். அதேபோல நம்முடைய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள். அவர், திடீரென்று முதல மைச்சராக வந்துவிடவில்லை; திராவிட முன்னேற்றக் கழகத்தினுடையத் தலைவராக திடீரென்று குதித்து விடவில்லை. ‘தூக்கிவிடும் பூனை எலி பிடிக்காது.’ அவருடைய உழைப்பு, அவருடைய உழைப்பு, உழைப்பு என்ற ஏணியாலேதான் அவர் உயர்ந்த இடத்திற்கு வந்திருக்கிறார். தந்தை பெரியார் பிறந்த நாளை ‘சமூக நீதி நாள்’ என்று அறிவித்து, எல்லோரையும் அதற்கான உறுதி மொழி எடுக்கச் செய்தார். அது நம் எதிரிகள் கூட எழுந்து நின்று, மனதில் ஒன்று இருந்தாலும், தந்தை பெரியாரைப் பற்றிய உறுதிமொழியை எடுத்துத் தீர வேண்டும். அதேபோல, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை ‘சமத்துவ நாள்’ என்று அறிவித்தார்கள். மகளிருக்கு நம்முடைய தளபதி அவர்கள் ஆற்றிய தொண்டு சாதாரணமான ஒன்றல்ல.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், மகளிர் விடியல் பயணத் திட்டம், அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40 விழுக்காடு இட ஒதுக்கீடு; இந்தியாவிலே எங்கும் கிடையாது. தோழி விடுதிகள் – இப்படி அடுக்கடுக்காக அவர்கள் பணியாற்றி இருக்கிறார்கள்.
நாம் படித்தவரை, அறிந்தவரை…
அவர் மேயராக இருந்த நேரத்திலே சென்னையிலே பல மேம்பாலங்களைக் கட்டினார். நாம் படித்தவரை, அறிந்தவரை – ஒரு மேயர் மேம்பாலங்களைக் கட்டி னார் என்றால், இந்தியாவிலேயே, தமிழ்நாட்டிலே, சென்னையிலே நம்முடைய தளபதி அவர்கள்தான் அதைச் சாதித்தார் என்பதை நன்றி உணர்ச்சியோடு சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
அவர் கழகத் தொண்டராக இருந்தார்; கழகக் கொடி பிடிக்கும் வீரனாக இருந்தார். ஒரு கிளைக் கழக இளைஞரணித் தலைவராக இருந்தார். பின்னாளில், மாநில இளைஞரணிச் செயலாளராக இருந்தார். கட்சியினுடைய பொருளாளராக இருந்தார். கட்சியினுடைய செயல் தலைவராக இருந்தார். இன்றைக்குக் கட்சியினுடைய தலைவராக வந்திருக்கி றார்.
‘சி.எம். என்றால், ஸ்டாலின்’ அது மக்களுடைய குரலாக இருக்கிறது; அந்த அளவிற்கு நெஞ்சத்திலே அவர் ஊறி இருக்கிறார்!
அதேபோல, பல்வேறு பணிகள். சட்டமன்ற உறுப்பினராக இருந்தார், அமைச்சராக இருந்தார், துணை முதல் அமைச்சராக இருந்தார். முதலமைச்சராகவும் இருந்தார். ஓர் உண்மை என்னவென்றால், இப்பொழுதும் பார்க்கின்ற பொழுது முதலமைச்சர் என்றால் ஸ்டாலின் பெயர்தான் நினைவிற்கு வருகிறதே தவிர, நம்மை அறியாமலே, ‘சி.எம். என்றால், ஸ்டாலின்’ அது மக்களு டைய குரலாக இருக்கிறது. அந்த அளவிற்கு மக்கள் நெஞ்சத்திலே அவர் ஊறி இருக்கிறார் என்றால், அவருடைய சாதனைகள்தான் அதற்குக் காரணம்.
‘மிசா’ கைதியாகச் சிறைக்குச் சென்றவர்!
திருமணமாகி சில நாட்களிலேயே ‘மிசா’ கைதியாகச் சிறைக்குச் சென்றார். அவரை அடித்துச் சிறைக் கொட்டடியில் போட்டார்கள். அவர் விழுந்த இடம், நம்முடைய தலைவர் ஆசிரியர் இருந்த சிறைக் கொட்டடிதான். அப்பொழுது ஆசிரியர் சொன்னார், ‘‘தம்பி உன்னுடைய பொது வாழ்க்கைக்கு இது ஒரு பயிற்சி. இந்த அனுபவம் எல்லாம் தேவை’’ என்று ஆற்றுப்படுத்தினார் என்பதையும் இந்த நேரத்திலே நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
காலத்தால் அழிக்க முடியாத நினைவுச் சின்னங்களை ஏற்படுத்தி இருக்கிறார்!
அ.தி.மு.க. ஆட்சியிலே 13 முறை சிறைக்குச் சென்றி ருக்கிறார். சாதாரணமாக முதலமைச்சராக வந்துவிட்டார் என்று யாரும் நினைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இன்றைக்கு இங்கே பெரியார் அறிவுலகத்தை – ஆசிரியர் அவர்களும், நம்முடைய தளபதி அவர்களும் பார்த்தார்கள். உண்மையிலேயே மலைத்துப் போனோம். அடிக்கல் நாட்டியது முதல் பெரியார் அறிவுலகம் உருவானவரை, எல்லாம் செய்தவர் ஒருவர்; ரிப்பனை மட்டும் கத்திரித்துவிட்டு, பெரியாரைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் சென்றவர் இன்னொருவர். அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், நாட்டு மக்கள் – வரலாறு என்றைக்கும் மறக்கமாட்டார்கள். அந்த நிலையிலே, நம்முடைய தளபதி அவர்கள், காலத்தால் அழிக்க முடியாத நினைவுச் சின்னங்களை ஏற்படுத்தி இருக்கிறார். அது சாதாரணமான ஒன்றல்ல. ஒருமுறை ‘ஜனசேவா’ என்கின்ற ஒரு மலையாள பத்திரிகை எழுதியது, ‘‘தமிழ்த் தேசத்தின் தலைக்கணம் இல்லாத தலைவர் மு.க.ஸ்டாலின்!’’ இது கேரளா பத்திரிகை – எங்கும் நிறைந்திருக்கிறார்.
ஒரு கட்டத்திலே ‘இண்டியா கூட்டணி’ என்று வந்த பொழுது, அவர் தலைமை தாங்க வேண்டும் என்று சொன்ன நேரத்தில் கூட. அவர் பெருந்தன்மையாக இன்னொருவருடைய பெயரைச் சொன்னார் என்பதையும் இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட கட மைப்பட்டிருக்கின்றேன். ஒரே ஒரு செய்தியைச் சொல்லி நான் முடிக்கின்றேன்.
பெரியார், அண்ணா வழியில், கலைஞர் முத்திரையுடன் வெற்றி சூடி வாழ வேண்டும்!
நம்முடைய தலைவர் ஆசிரியர் அவர்கள் நம்முடைய தளபதியுடைய 58 ஆம் பிறந்த நாளிலே, ஒரு வாழ்த்துச் செய்தியைச் சொன்னார். ‘‘எதிலும் செயற்கைத்தனம் இல்லாத, செந்தமிழ் மறவராக, செயல் வீரர்களின் வழிகாட்டியாக, கலைஞர் அவர்களின் புகழையும், திராவிட இயக்கத்தின் தீரமிக்க சாதனைகளையும், சரித்திரமாக்கிடும் தளபதியாம் சகோதரர், மேலும் பல்லாண்டு வாழ்ந்து, பெரியார், அண்ணா வழியில், கலைஞர் முத்திரையுடன் வெற்றி சூடி வாழ வேண்டும்’’ என்று வாழ்த்தினார் நமது தலைவர் ஆசிரியர்.
வாழ்விலும், தாழ்விலும் என்றைக்கும் இருப்பது கருஞ்சட்டைப் படை!
அதை இந்த நேரத்திலே நினைவுப்படுத்தி, இங்கே பெரியார் அறிவுலகம் கண்டார் தளபதி மு.க.ஸ்டாலின். நம்முடைய ஆசிரியர் அவர்கள், சிறுகனூரில் ‘பெரியார் உலகம்’ காண இருக்கிறார். அதற்கும் உங்களுடைய ஒத்துழைப்பை எல்லாம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி, வாழ்விலும், தாழ்விலும் என்றைக்கும் துணையாக இருப்பது கருஞ்சட்டைப் படை என்பதை மட்டும் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, விடைபெறுகின்றேன்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார்.
