புதுடில்லி நவ. 7- அமெரிக்க இடைத்தேர்தல்களில் தாராளமயமாக்கல், மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை மற்றும் ஜனநாயக உணர்வுதான் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம், சுதந்திரமான மற்றும் ஜனநாயக நாட்டின் குடிமக்களாக இருக்க விரும்பும் அனைவருக்கும் இதில் ஒரு பாடம் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அண்மையில் நடைபெற்ற அமெரிக்க இடைத்தேர்தல்களில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அமெரிக்க நாடாளுமன்ற கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. மேலும், முக்கிய மாநில ஆளுநர் பதவிகளிலும் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்றனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தத் தேர்தல்களின் தாக்கம் அமெரிக்காவைத் தாண்டி உலக அளவிலும் பேசும் பொருளானது.
இந்த நிலையில், அமெரிக்க இடைத்தேர்தல் முடிவு ஜனநாயக உணர்வுக்கு கிடைத்துள்ள வெற்றி என்று ப. சிதம்பரம் தெரிவித் துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
“அமெரிக்கத் தேர்தல்கள், சட்டவிரோத குடியேற்றம், ஆசியர்கள் மற்றும் லத்தீன் அமெரிக்கர்களின் வருகை, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரங்கள் போன்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நடைபெற்றன.
இவை, அன்றாட வாழ்க்கைச் செலவு, விலைவாசி உயர்வு, வேலையின்மை, எரிபொருள் விலைகள், சட்டம்-ஒழுங்கு போன்ற மக்களின் அன்றாட வாழ்வாதாரம் சார்ந்த மிக முக்கியமான பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளிவிடும் சூழலை உருவாக்கின.
இருப்பினும், இறுதியில் தாராளமயக் கொள்கைகள், மதச்சார்பின்மை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவையும், அமெரிக்காவின் அடிப்படை ஜனநாயக உணர்வும் மற்றும் பரந்த மனப்பான்மையே வெற்றி பெற்றுள்ளன.
சுதந்திரமான மற்றும் ஜனநாயக நாட்டின் குடிமக்களாக இருக்க விரும்பும் அனைவருக்கும் இதில் ஒரு பாடம் உள்ளது” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
