மாறும் அரசியல் காலநிலை: முற்போக்கு இயக்கங்கள் செய்யவேண்டியவை

- Advertisement -

அட்லாண்டிக் பெருங்கடலுக்கோ, பசிபிக் பெருங்கடலுக்கோ தன்னுடைய பெயரைச் சூட்டிவிட வேண்டும் என்ற தணியாத ஆர்வம் கொண்டிருப்பவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப்; எப்படியாவது அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்றும் அவர் மேற்கொண்ட முயற்சிகளை உலகறியும். முதலில் வெற்றி பெற்று அதிபராகி அடுத்த முறை தோற்று, பின்னர் இரண்டாம் முறையாக அதிபர் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் உலகின் பல நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தின. குறிப்பாக, ஈரான், சிரியா நாடுகளின் மீது அவர் தொடுத்த போர்கள், உலக நாடுகளின் மீதான வரி விதிப்பில் அமெரிக்கா மேற்கொண்ட திடீர் மாற்றங்கள், பல நாடுகளின் மீது அவர் விதித்த பொருளாதாரத் தடைகள் மற்றும் ‘சில நாடுகளிலிருந்து பொருட்கள் வாங்கக் கூடாது’ என்று மற்ற நாடுகளுக்கு அவர் விதித்த கட்டுப்பாடு என்று உலக அமைதியைக் கெடுத்ததில் அண்மைக் காலத்தில் கணிசமான பங்கு அவருடையது. மேலும், பிற நாடுகளில் இருந்து அமெரிக்கா வந்து குடியேறியவர்கள் மீது அவர் எடுத்த நடவடிக்கைகளும் பெரும் விமர்சனத்தைச் சந்தித்தன. அமெரிக்காவில் வாழ்வோரே அச்சத்தில் வாழ வேண்டிய நிலையை அவர் உருவாக்கினார். இன்னொரு புறம், பாலஸ்தீனத்தின் மீது வம்படியான தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு டிரம்ப் அளித்த ஆதரவுதான் வெகுமக்களைக் கொன்றொழிக்கக் காரணமாகவும் அமைந்தது என்பது உலக அமைதி வேண்டுவோரின் குற்றச்சாட்டு.

இந்நிலையில் அமெரிக்காவிலும், இஸ்ரேலிலும் வந்திருக்கும் தேர்தல் முடிவுகள், இவர்களின் நடவடிக்கைகளால் அம்மக்கள் எவ்வளவு வெறுப்புக் கொண்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றன. கடந்த 2010-க்குப் பிறகு பல நாடுகளிலும் வலதுசாரி அரசியல் எழுச்சியைக் கண்டுகொண்டிருந்தது. பிரான்ஸ், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில்கூட இத்தகைய போக்கால் ஆட்சிகள் மாறின. தற்போது பிரான்சில் வலதுசாரி அரசுகளால் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கெதிரான போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது.

செர்பியாவிலும், அங்கேரியிலும் நடைபெற்ற தேர்தல்களில் வலதுசாரிக் கட்சிகள் தோல்வியுற்றி ருக்கின்றன. நெடுங்காலமாகப் பிரேசிலில் போராடி வந்த இடதுசாரித் தலைவர் லூலா டா சில்வா-வின் வெற்றி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தென்னமெரிக்க நாடுகளில் இடதுசாரி அரசுகள் அமைந்துவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா எப்போதும் கவனமாக இருக்கும். அதையும் தாண்டி, தொழிலாளர் சார்பான, சுரண்டலுக்கு எதிரான இடதுசாரி அரசுகள் அமைந்தால், அதைக் கலைப்பதற்கான எல்லாப் பணிகளையும் மேற்கொள்வது யார் என்பதைக் கடந்த நூற்றாண்டிலும், இந்த நூற்றாண்டிலும் உலகமே கண்டிருக்கிறது.

மேலும்,  ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சிக்கு வந்த வலதுசாரித் தலைவர்கள், அந்த ஜனநாயகத்தையே அழிப்பதற்கான வேலைகளில் அந்தந்த நாடுகளில் ஈடுபட்டிருப்பதைக் கடந்த சில ஆண்டுகளில் காண முடிகிறது. அங்கேரி, துருக்கி, பிரேசில், தென்கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பார்த்ததுடன், நம் கண்ணெதிரே இந்தியாவில் உள்ள வலதுசாரி ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு என்ன செய்தது என்பதையும், கடந்த 10 ஆண்டுகளில் தேர்தல் முறையிலும், தேர்தல் ஆணையத்திலும் செய்யப்பட்டிருக்கும் மோசடிகளையும் கண்டு மக்கள் கொதிப்படைந்திருப்பதைப் போலவே, உலகம் முழுமையும் அந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் இத்தகைய தேர்தல் முடிவுகள்.

ஆனால், இத் தேர்தல் முடிவுகளால் மட்டுமே எல்லாம் மாறிவிடும் என்று சொல்ல முடியாது என்பதையும் அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர். பல நேரங்களில் அன்றாடப் பிரச்சினைகளும், விலைவாசியும், உணர்ச்சிப் பூர்வமான ஊடகங்களின் கருத்துருவாக்கங்களும் கூட மக்களின் முடிவுகளுக்குக் காரணமாகலாம். கிடைத்துள்ள இந்த இடைவெளியில் இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக சக்திகள், மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதும், மீண்டும் ஆதிக்க, கார்ப்பரேட் கொள்ளை, சுரண்டல் மிகுந்த வலதுசாரி பிற்போக்கு அரசுகள் அமைந்துவிடா வண்ணம் மக்களுக்குத் தெளிவூட்டுவதுமே சிறிது காலத்திற்காவது உலகில் அமைதியைக் கொண்டுவரும்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *