சிவகங்கை, நவ.7- மதுக்கடைக்கு எதிராக போராடும் வாலிபரை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்க முயற்சிப்பதாகவும், இதற்கு காவல் துறையினரும் உடந்தையாக இருப்பதாகவும் சி.சி.டி.வி. காட்சிகளுடன் புகார் கொடுக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்களப்பட்டியில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அரசு மதுபானக் கடையும், அதனுடன் தனியார் பார் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடையால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பாதிக்கப்படுவதாகவும், அதனை அகற்ற கோரியும் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பும் சாலைமறியல் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ராஜ் குமார் தலைமையில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக மதுபானக் கடைக்கு எதிராக ராஜ்குமார் இந்தப் போராட்டங்களை ஒருங் கிணைத்ததாக தெரிகிறது. மேலும் ராஜ்குமார் தனது வீட்டின் அருகில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அவரது கடைக்கு மது பாரில் வேலைசெய்யும் நபர் ஒருவர் வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர், ராஜ்குமாரை பழிவாங்கும் நோக்கில் அவரது கடையின் அருகில் போதைப் பொருள் பொட்டலத்தை மறைத்து வைத்துவிட்டு அங்கிருந்து சென்ற தாகத் தெரிகிறது.
அவர் சென்ற சில நிமிடங்களி லேயே அங்கு சாதாரண உடையில் வந்த 2 பேர், தங்களை மதுவிலக்கு காவல் துறையினர் எனக் கூறியுள்ளனர். பின்னர் ராஜ்குமாரின் கடையில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் சோதனை செய்ய வந்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதையடுத்து ஏற்கெனவே வைக்கப்பட்ட இடத்தில் இருந்து போதைப்பொருள் பொட்டலத்தை அவர்கள் எடுத்து காண்பித்தனர். பின்னர் கடையில் வைத்து போதைப்பொருள் விற்றதாக ராஜ்குமார் மீது வழக்குப் போட முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் தனது கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் ஒரு நபர் வந்து அங்கு போதைப்பொருள் பொட்டலத்தை மறைத்து வைப்பதும், அதன் பின்பு அந்த இடத்தில் இருந்து போதைப் பொருட்களை காவல் துறையினர் எடுப்பதும் பதிவாகி இருந்தது.
பின்னர் ராஜ்குமார், இந்த சி.சி.டி.வி. காட்சிகளை பதிவு செய்து கிராம மக்களுடன் இணைந்து சிவகங்கை மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்றார். போதைப்பொருள் வழக்கில் ராஜ்குமாரை சிக்க வைக்க காவல் துறையினரும் உடந்தையாக இருந்து செயல்படுவதாக கூறி புகார் அளித்தனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
