காவல் நிலையங்களில் மாதாந்திர செலவிற்கு ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தி உத்தரவிட்டது தமிழ்நாட்டு அரசு!

- Advertisement -

சென்னை, அக். 22- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் மாதம்தோறும் வழங்கப்படும் எதிர்பாரா செலவு நிதி, ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கைப் பராமரித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குதல், பொது அமைதியை நிலைநாட்டுதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இதற்கான பணிகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

காவல்துறையின் நிர்வாகம் மற்றும் செயலாக்கப் பணிகள் அதிகரித்துள்ளதால், அதற்கான செலவினங்களும் கணிசமாக உயர்ந்துள்ளன.

எனவே, அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கப்படும் எதிர்பாரா செலவு நிதியை உயர்த்த வேண்டியது அவசியமாகிறது.

லஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நோக்கில், காவல்துறையின் நிர்வாகம் மற்றும் செயலாக்கப்பணிகளுக்கான அன்றாடச் செலவுகளை எதிர்கொள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கப்படும் எதிர்பாரா செலவு நிதி உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் அங்கு பதிவாகும் குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஏற்கெனவே மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த எதிர்பாராச் செலவு நிதி ரூ.3,750இல் இருந்து ரூ.30 ஆயிரமாகவும், ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாகவும், ரூ.8,250இல் இருந்து ரூ.50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

மாணவர்களின் போராட்ட நோக்கங்களைத் திசை திருப்ப வேண்டாம்!

மோகன் பாகவத் பேச்சுக்கு பெ.சண்முகம் எதிர்வினை!

சென்னை, அக். 22- ‘பா.ஜ.க. பொற்கால ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பது போலவும், அதைக் கவிழ்க்க நாங்கள் போராடுகிறோம் என்றும் திசை திருப்ப வேண்டாம்’ என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் எதிர்வினையாற்றி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், “நடைபெற்று வரும் போராட்டங்கள் ஆட்சி மாற்றத்துக்கான போராட்டங்கள் என்றும், அது அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்காது” என்றும் விஜயதசமி விழாவில் பேசியுள்ளார்.

‘ஆர்எஸ்எஸ் அமைப்பால் வழிநடத்தப்படும் பாஜக ஆட்சியை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும்’ என்றுதான் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் விரும்புகிறோம். ஆனால், நடைபெறும் போராட்டங்கள் வரையறுக்கப்பட்ட கோரிக்கைகளுக்காக நடைபெறுகின்றன என்பது நாட்டு மக்கள் எல்லோருக்கும் தெரியும்.

எனவே, நீங்கள் ஏதோ பொற்கால ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பது போலவும், அதைக் கவிழ்க்க நாங்கள் போராடுகிறோம் என்றும் திசை திருப்ப வேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில்
824 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலி!

கட்டண உயர்வே காரணம் எனத் தகவல்!

சென்னை, அக். 22- தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இறுதி சுற்று கலந்தாய்வு நிறைவிலும் 824 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதற்கு கட்டணம் உயர்வே காரணமாக சொல்லப்படுகிறது.

உயர்கல்வி படிப்புகளில் மருத்துவப் படிப்புகளுக்கு கடும் கிராக்கி இருக்கிறது. இதற்கு நீட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி அவசியம் என வந்ததும், மேலும் கெடுபிடியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் இதற்காக தங்களை தயாரித்துக்கொண்டு நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவப் படிப்புகளில் சேருகின்றனர்.

அந்தவகையில் நடப்பாண்டில் நீட் தேர்வு முடிந்து அதன் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையும் தொடங்கி தற்போது இறுதி சுற்று கலந்தாய்வையும் நிறைவு செய்ய இருக்கிறது. இந்த கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கப்பட்ட மாணவிகள் கல்லூரிகளில் சேர 26ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இடங்கள் ஒதுக்கப்பட்ட வரைவிலான நிலவரப்படி, நாடு முழுவதும் நடப்பாண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுடன் சேர்த்து 837 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 837 இடங்களில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஓர்  இடம், கருநாடகாவின் கோலாரில் உள்ள செட்டிநாடு நிறுவனத்தில் 12 இடங்கள் தவிர, மீதமுள்ள 824 எம்.பி.பி.எஸ். இடங்கள் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படாமல் உள்ளவை ஆகும்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதியுடன் உள்ள 11 லட்சம் பேர் நடப்பாண்டில் இருந்தும் தற்போது வரை 837 இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்கு கட்டணம் உயர்வு ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

அதிலும், தமிழ்நாட்டில், புதுச்சேரியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஓராண்டுக்கு
எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ரூ.23 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இது இந்தியாவின் பிற பகுதிகளில் சராசரிக் கட்டணம் ரூ.22.68 லட்சமாக உள்ளதும், 4½ ஆண்டுடன் கொண்ட படிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு இடையேயான கட்டண வித்தியாசம் அதிகம் இருப்பதாகவும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், ‘நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கட்டணத்துக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும்’ என்றும், நல்ல மதிப்பு பெற்றவர்கள் இந்தக் கட்டணத்தை செலுத்த முடியாததால் அவர்கள் இடங்களை தேர்வு செய்யவில்லை என்றும், இது நீட் தேர்வின் நோக்கத்தையே தோற்கடிக்கிறது’ என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *