பிஞ்சுகளைச் சீரழிக்கும் மதவெறி!

- Advertisement -

பாணன்

இந்தியாவில் கல்வி நிலையங்கள் என்பவை அறிவு, ஒழுக்கம், சகிப்புத்தன்மை மற்றும் சமத்துவத்தைப் போதிக்கும் இடங்களாகவே கருதப்பட்டு வந்துள்ளன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஹிந்துத்துவ அமைப்புகள் பள்ளிக் கல்வி அமைப்பில் ஊடுருவி மதவெறியை பிஞ்சுகளின் உள்ளத்தில் விதைத்ததால் பள்ளிச் சிறுவர் களிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்களும், பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

பஞ்ச்குலா பள்ளிக் கொடூரம்

அரியானா மாநிலம் பஞ்ச்குலா, செக்டார் 20-இல் அமைந்துள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு, பள்ளிச் சிறுவர்களின் மனநிலை பற்றிய தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

பஞ்சகுலா சமஸ்கிருதப் பள்ளி

கடந்த 28.10.2026 அன்று அரியானா மாநிலம் பஞ்ச்குலா, செக்டார் 20-இல் அமைந்துள்ள ‘எஸ்.எம்.ஏ. ராஜ்புத்  சமஸ்கிருத பள்ளியில் வகுப்புகள் முடித்துவிட்டு, ஆசிரியர்கள் தங்களின் அலுவலக அறையில் அமர்ந்திருந்தனர். பிள்ளைகள் வகுப்பறையில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது  8 வயதுடைய 3-ஆம் வகுப்புப் படிக்கும் சிறுவன் ஒருவன், 6 வயதுடைய எல்.கே.ஜி. வகுப்புச்  சிறுமியை ‘உன் அப்பா வந்துள்ளார்’  என்று அழைத்துள்ளார். அந்தச் சிறுமியும் அவனோடு சென்றுள்ளார்.

அவன் அருகில் உள்ள ஒரு வகுப்பறையில் அச்சிறுமியை அழைத்துச்சென்று முதலில் தலையைப் பிடித்துச் சுவரில் இடித்து 4 முறை தாக்கி உள்ளார்.

பின்னர் அச்சிறுமியின் முகம் மற்றும் வயிற்றிலும் கடுமையாகத் தாக்கினார். தாக்குதல் தாளாது அச்சிறுமி மயங்கி விட்டார். அச்சிறுவன் வெளியே சென்று தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் உள்ளே வந்து அச்சிறுமி மீது 27 முறை கைகளால் குத்துகிறார். பின்னர் எதுவுமே தெரியாதது போல் அவர் சென்று அவரது வகுப்பறையில் மற்ற சிறுவர்களோடு உட்கார்ந்து கொள்கிறார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

அதிர்ச்சியில் அலறிய தந்தையின் கதறல்

சிறிது நேரத்தில் அச்சிறுமியின் தந்தை அங்கு வரவே அந்தச் சிறுவன் அவரது தந்தையை அழைத்துக்கொண்டு சிறுமி மயங்கி இருக்கும் வகுப்பறைக்கு அழைத்துச்சென்று காண்பிக்கிறார். அதிர்ச்சி அடைந்த தந்தை கதறியபடி சிறுமியைத் தூக்கிக்கொண்டு பள்ளி வளாகத்தில் ஓடிவருகிறார். பிறகுதான் பள்ளியின் ஊழியர்கள் அங்கு வருகிறார்கள்.

உடனடியாக அச்சிறுமியை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். சிறிது தாமதானாலும் சிறுமி இறந்திருப்பார். மார்பு எலும்பு உடைந்துள்ளது, மண்டையோட்டில் சிறிய கீறல் விழுந்துள்ளது, சிறுமியின் தொடை கிழிந்துள்ளது, இரண்டு விரல்களில் எலும்பு முறிவு, கன்னம் மற்றும் தோள்பட்டையில் கடுமையான உள்காயத்தோடு அச்சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். சமஸ்கிருதப் பள்ளியில் நடந்த இந்தக் கொடூரம் குறித்து ஆய்வு செய்த போது சிசிடிவி கேமராவில் இவை அனைத்தும் பதிவாகி உள்ளது.

அரட்டையில் ஆசிரியர்கள்

கண்காணிப்புக் படக் கருவியைக் கண்ட காவல் துறையே உறைந்துபோனது. 8 வயது சிறுவன் இப்படிச் செய்வான் என்று யாருமே கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

சரி, இவ்வளவு நடக்கும்போது ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், இதர பள்ளி ஊழியர்கள் எங்கே? கண்காணிப்புப் படக் கருவியை யார் கண்காணிப்பார்கள்?  ஆசிரியர்கள் அனைவரும் அருகில் உள்ள ஓய்வறையில் அரட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

பெரிய படக் கருவியின் மானிட்டர் பள்ளி முதல்வரின் அறையில் உள்ளது. அவர் மதியமே சொந்த வேலை ஒன்றிற்காக வெளியே சென்றுவிட்டார். அவர் தனது அறையைப் பூட்டிச் சாவியை தன்னுடனே கொண்டு சென்றுவிடுவார். இதனால் இந்த நிகழ்வு யாருக்குமே தெரியாமல் போனது.

குற்றவாளிச் சிறுவன் ஒரு நாள் குழந்தைகள் மனநல ஆலோசகர்களின் கண்காணிப்பில் இருந்துவிட்டு அன்று மாலையே அந்தச் சிறுவன் வீடு திரும்பிவிட்டார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

தீவிர தண்டனை கிடையாது

சிறுவர் நீதிச் சட்டத்தின்படி (Juvenile Justice Act), குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் செய்யும் குற்றங்களுக்கு தீவிரக் காவல் தண்டனைகள் வழங்க முடியாத சூழல் உள்ளதால், அவர்களை மனநல ஆலோசனை மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கே உட்படுத்த முடியும்.

2017 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதல் முதலாக இந்த மாநிலத்தில் தான் அன்றாடம் பள்ளி காலை வணக்க நேரத்தில் கீதை, உபநிடதம் மற்றும் வேதங்கள் உரைக்கவேண்டும் என்று அந்த மாநில பாஜக அரசு உத்தரவு பிறப்பித்தது.

ஒருவர் ஒரு ஸ்லோகம் வாசிக்க அனைவரும் அதனைத் திருப்பிச் சொல்ல வேண்டும். இது மட்டுமல்லாது,  வாரத்திற்கு ஒருமுறை சாமியார் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தில் இருந்து வந்து யோகாவுடன் ஆன்மிகப் பாடமும் நடத்துவார்கள்.

ஏன் இது நடக்கிறது? இதற்கும் நாள்தோறும் பள்ளியில் காலையில் போதிக்கும் கீதா உபதேசம், வேத உபாசனத்திற்கும் தொடர்பு உண்டா? என்றால் அதற்கு நிபுணர்கள் தான் பதில் கூறவேண்டும்.

இந்த நிகழ்விற்கும், வேத உபாசனங்களுக்கும் தொடர்பு உண்டா – இல்லையா என்பனவெல்லாம் மிகவும் நீண்ட விவாதத்திற்கு உரியனவாகும்.

ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக இந்தியாவின் அடித்தளத்தில் நடந்த பெரிய மாற்றத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குழுவாகச் சென்று மதவெறி ஊட்டும் கொடுமை!

குறிப்பாக வட மாநிலங்களில் ஹிந்துத்துவக் குழுக்கள் ஊர் ஊராக கிராமம் கிராமமாகச் சென்று மதவெறியை ஊட்டி வருவது கண்கூடாகத் தெரிகிறது.

அவர்களின் நடவடிக்கைகளை அங்குள்ள எந்த ஒரு மனித நேய அமைப்புகளோ அல்லது அரசியல் கட்சிகளோ தட்டிக் கேட்பதில்லை. அரசியல் கட்சிகள் தட்டிக்கேட்டால் ஹிந்துக்களின் வாக்கு சிதறிவிடுமாம்.

இவர்களின் நடவடிக்கையைப் பள்ளி அல்லது அமைப்புகள் தட்டிக்கேட்டால், அவற்றின் மீது அமலாக்கத்துறை, சிபிஅய், இன்ன பிற அனைத்து அரசு ஏவல் அமைப்புகளும் நெருக்கடி கொடுக்கும்.

கட்டுரை, ஞாயிறு மலர்

ஏன் இந்தக் கொடூர சிந்தனை
குழந்தைகள் மனதில் வருகிறது?

தற்போது ஏ.அய். காலம். “குழந்தைகளை நல்வழிப் படுத்துகிறேன்” என்ற பெயரில் பள்ளிகளில் நடத்துகின்ற ‘ஆன்மிக அறவுரை’ நிகழ்ச்சிகளில் முதலில் ஏ.அய். மூலம் மிகவும் பயங்கரமான காட்சிகள் காட்டப்படுகின்றன. அதாவது சிறுவர்களை அடித்தல் உள்ளிட்ட பல காட்சிகள் காட்டப்படுகின்றன. பின்னர் நல்வழி குறித்த காட்சிகள் காட்டப்படுகின்றன.

சிறுவர்களின் கையில் வாள், திரிசூலம்

பொதுவாகச் சிறுவர்களுக்குத் தொடக்க நிமிடங்களில் வரும் காட்சிகள் அவர்களின் மனதில் பதிந்துவிடும். அதன் பிறகு வருபவைகள் எல்லாம் உள்ளத்தில் தங்காது. அதாவது ஆரம்ப கால வன்முறை கார்ட்டூன் நிகழ்வுகளைச் சிறுவர்கள் மனதில் பதியவைத்துக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் ஹிந்து அமைப்பினர் வீடு வீடாகச் சென்று சிறுவர்கள் கைகளில் திரிசூலம், வாள் போன்றவற்றைத் தருகின்றனர். அப்படித் தரும்போது “ஹிந்துக்களின் பாதுகாப்பிற்காக இதைத் தருகிறோம்” என்று கூறி கூட்டாக உறுதிமொழி எடுக்கின்றனர். நல்லவேலை, பஞ்சகுலா பள்ளிச் சிறுவன் கையில் இவர்கள் கொடுக்கும் திரிசூலமோ, வாளோ இல்லை. ஒருவேளை இருந்திருந்தால் நினைத்துப் பார்க்க முடியாத கொடூரத்தை நிகழ்த்தி இருப்பான்.

அண்மைக்காலமாக நாட்டின் சில பகுதிகளில், பள்ளிகளுக்குள் சமூக ரீதியான உணர்வுகள், அமைப்புகளின் தலையீடுகள் அதிகரித்து வருகின்றன. இது மாணவர்களிடையேயான நட்புறவையும், பள்ளியின் பொதுவான கற்றல் சூழலையும் பாதிப்பதாக பல்வேறு செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

அண்மைய காலத்தில் (முக்கியமாக 2025-2026) இந்தியாவில் பள்ளிகளில் (முதன்மை/உயர்நிலைப் பள்ளிகள்) தொடர்பாக இந்து அமைப்புகள் பெரும்பாலும் வன்முறை/சேதப்படுத்தல்  போராட்டம் அல்லது மிரட்டல் அதிகரித்துள்ளது.

மத்தியப் பிரதேசம், ஜபல்பூர் – ‘புனித’ அக்னோசியஸ் மேல் நிலைப்பள்ளியில் (ஜூலை 2026) காலை வழிபாட்டின் போது வேதாகமம் பகுதி வாசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது இப்பள்ளி நிர்வாகம்.

இதை மதமாற்ற முயற்சி என்று கூறி பஜ்ரங்தள் மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்புகள் பள்ளியில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். கற்கள் வீசி ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன, சிலைக்குச் சேதம் ஏற்பட்டது. இந்தப்பள்ளி சுமார் 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள பல முக்கிய காவல்துறை உயரதிகாரிகள் இப்பள்ளியில் படித்தவர்கள். ஆனால் புகார் அளித்தும் காவல்துறை மவுனம் சாதித்தது.

கட்டுரை, ஞாயிறு மலர்

பள்ளிச் சீருடையை காவியில் மாற்று

மத்தியப் பிரதேசம் போபாலில் 7ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதக் காவடி யாத்திரையின் போது சீருடை அணியாமல் காவி வேட்டி, துண்டு அணிந்து வகுப்பிற்கு வந்துள்ளார்.

அது கிறிஸ்தவ மிசினரிப் பள்ளி. ஆசிரியர்கள் “பள்ளிக்குச் சீருடை அணிந்து வரவேண்டும்,  இல்லை என்றால் விடுப்பு எடுத்துவிடு” என்று கூறியுள்ளனர்.

உடனே அங்குள்ள ஹிந்து அமைப்பினர் ஒன்று சேர்ந்து பள்ளி நிர்வாகத்தை மிரட்டி உள்ளனர். மேலும் பள்ளியின் பெயர்ப்பலகையை உடைத்து வீசிவிட்டனர். பள்ளியில் சீருடையைக் காவியாக மாற்று என்று மிரட்டல் விடுத்தனர்.

இவ்வளவு கலவரச் சூழலில் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் ஆசிரியர்களை மிகவும் மோசமாகப் பேசியுள்ளனர்.  அந்தக் காணொலி இன்றும் சமூகவலைதளத்தில் உள்ளது.

மத்தியப் பிரதேசம், 2026

சாகர் மாவட்டம் ஹோலி பேமினி உயர்நிலைப்பள்ளி  மற்றும் விதிஷா மாவட்டம் ‘புனித’ ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபி, பஜ்ரங்தள், விசுவ ஹிந்து பரிஷத் அமைப்புகள் மதமாற்றக் குற்றச்சாட்டில் போராட்டம் நடத்தின. கற்களை வீசி வகுப்பறைக் கண்ணாடிகளைச் சேதப்படுத்தினர். இதில் கொடுமை என்னவென்றால் கலவரத்தில் பள்ளி மாணவர்களையும் சேர்த்துகொண்டதுதான்.

சிறுவர்களை தனித்தனியே
உட்காரவைத்து மிரட்டல்

ராஜஸ்தான் மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்து சிறுவர்கள் அதிகம் படிப்பதால் பள்ளியில் யாரும் இறைச்சி உணவு கொண்டு வரக்கூடாது என்றும், இஸ்லாமிய மாணவர்களை  ஹிந்து சிறுவர்களோடு உட்கார வைக்கக் கூடாது என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.  மேலும் ஹிந்து சிறுவர்களுக்கு கையில் காவி கைக்குட்டையைக் கட்டி விட்டுள்ளனர்.

அசாம், நல்பாரி ‘புனித’ மேரி உயர்நிலைப்பள்ளியில் (டிசம்பர் 2025, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஹிந்து அமைப்பினர் வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தினர்.

பொதுவாக கிறிஸ்தவப் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் நாள் அன்று அலங்காரம் செய்வார்கள். அதேபோல் தான் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நாளன்றும் அலங்காரம் செய்தனர்.

“இது ஹிந்துக்களின் தேசம், இங்கே கிறிஸ்துமஸ் கொண்டாடக்கூடாது, அப்படிக் கொண்டாட வேண்டுமென்றால் இங்கிலாந்து சென்று கொண்டாடுங்கள்” என்று கூறி முதலில் மிரட்டல் விடுத்த ஹிந்துத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் பின்னர் பேரணியாகப் பள்ளி நோக்கிச் சென்றனர். பள்ளி நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்தும் காவல்துறையினர் பாதுகாப்பிற்கு வரவில்லை.

பேரணியாக வந்த ஹிந்து அமைப்பினர் பள்ளியில் பயின்ற மாணவர்களையும் சேர்த்துக்கொண்டு கிறிஸ்துமஸ் அலங்காரங்கள், குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் உள்ளிட்ட வற்றை அடித்து உடைத்தனர். பின்னர் அனைத்தையும் பள்ளிவளாகத்தில் போட்டு எரித்தனர். “ஜெய் சிறீ ராம்” போன்ற கோஷங்களை எழுப்பினர். அருகிலுள்ள கடைகளிலும் கிறிஸ்துமஸ் பொருட்கள் எரிக்கப்பட்டன.

கட்டுரை, ஞாயிறு மலர்

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு செப்டம்பர்-அக்டோபர் 2026 மாதங்களில் ஹிந்து ஜாகரன் மஞ்ச், ஏபிவிபி உள்ளிட்ட அமைப்புகள் கிறிஸ்தவ பள்ளிகளைக் குறிவைத்து காரணமே இல்லாமல்  அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களைக் கொண்டே பள்ளியில் தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்கள், கம்புகளுடன் நடத்திய தாக்குதலில் சில அருட்சகோதரிகள் காயமுற்றனர்.

பள்ளிகளுக்குள் மதவெறி அமைப்புகளின் தலையீடுகளும், வெறுப்புப் பேச்சுகளும் நுழையும் போது, மாணவர்கள் மத்தியில் சக மாணவர்களைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்களும், சகிப்புத்தன்மையற்ற மனநிலையும் உருவாக வாய்ப்புள்ளது.

குழந்தைகள் மனநலமும் சமூகத்தின் பொறுப்பும்

குழந்தைகள் தாங்கள் பார்க்கும், கேட்கும் மற்றும் உணரும் விஷயங்களை எளிதில் உள்வாங்குபவர்கள். அவர்களின் வன்முறை மனநிலைக்கும், சகிப்புத் தன்மையற்ற போக்கிற்கும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

வன்முறை நிறைந்த காட்சிகள், இணைய வழி விளையாட்டுகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வெறுப்புப் பிரச்சாரங்கள் குழந்தைகளின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பிற மதங்கள்/சமூகங்கள் மீதான மரியாதையைக் கற்பிக்கத் தவறும்போது, சிறுவர்களிடையே பிரிவினைவாத எண்ணங்கள் வளர்கின்றன.

மதவெறி ஆட்சியாளர்கள்
சட்டங்களைச் செல்லாக் காசாக்குவர்

கல்வி நிலையங்களுக்குள் எந்தவொரு மதவாத அல்லது அரசியல் அமைப்புகளின் தலையீடுகளும் அனுமதிக்கப்படக் கூடாது. சீருடை, கட்டுப்பாடு மற்றும் சமத்துவம் ஆகிய கொள்கைகள் உறுதியாகப் பின்பற்றப்பட வேண்டும். பல்வேறு பண்பாடுகள், மதங்கள் மற்றும் சமூகங்களைப் பற்றிய புரிதலையும், மனிதநேய அடிப்படையிலான மதிப்பீடுகளையும் பாடத்திட்டத்தின் முக்கிய அங்கமாக மாற்ற வேண்டும்.

சிறுவர்கள் செய்யும் வன்முறைகளோ அல்லது அவர்கள் மத்தியில் விதைக்கப்படும் வெறுப்புணர்வுகளோ நாட்டின் எதிர்காலத் தூண்களையே பலவீனப்படுத்தும். பஞ்ச்குலா சம்பவம் போன்ற துயரங்கள் பிஞ்சுகளின் மனங்களில் விதைத்த மதவெறி நச்சால் உருவாகி உள்ளவையாகும்.

சட்டங்கள் பல உள்ளன; ஆனால் மதவெறி அமைப்புகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது இந்தச் சட்டங்கள் அனைத்தும் செல்லாக்காசாக போய்விடும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *