16 ஆயிரம் பெண்களைத் திருமணம் செய்த கிருஷ்ணன்! நரகாசுரன் கதையும் தீபாவளி புஸ்வானமும்

- Advertisement -

சிறப்புக் கட்டுரை

தீபாவளி கொண்டாடப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் சில,

  1. நரகாஸுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த தகப்பன் கிருஷ்ண பகவான், எண்ணெய் தேய்த்துத் தலை முழுகினார். அந்த நாளே தீபாவளியாக இன்றளவும் கடைபிடிக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது. அதாவது, நரகாஸுரனின் தாயான பூமாதேவி (விஷ்ணுவின் மனைவி) தனது மகனின் இறந்த நாளைத் துக்க நாளாக இல்லாமல், சந்தோஷமாகக் கொண்டாட வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.
  2. ராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால் அந் நாட்டில் உள்ள மக்கள் ராமனை வரவேற்பதற்குத் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.
  3. சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகௌரி விரதம் முடிவுற்றதும் அந்த நாளன்று சிவன் சக்தியைத் தனது பாதியாக ஏற்றுக் கொண்டு “அர்த்த நாரீஸ்வரர்” ஆக உருவெடுத்ததால் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.
  4. வர்த்தமான மகாவீரர் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழா கொண்டாடும்படி ஏற்பாடு செய்தனர். அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; தீபாவளி ‘லி’ என்பது ‘ளி’ ஆகத் திரிந்தது) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது.

மேலுள்ள காரணங்கள் தவிர வேறு சில காரணங்கள் உள்ளதை இணையம் வாயிலாக அறிய முடிகிறது. ஆனால் 1933 நவம்பரில் வெளிவந்த ஸ்திரீ தர்மம் எனும் காலாண்டு இதழ் கூறும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான காரணம் நரகாஸுரனின் கதையிலேயே சற்று வித்தியாசமானது. 1970 களுக்குப் பிறகே தீபாவளியானது பரவலாக எல்லா பிரதேசங் களிலும் ஹிந்து சனாதனிகளால் கொண்டாடப்படும் பண்டிகையாக மாறிப்போனது. தீபாவளிக்கான காரணத்தை 1933 ஆம் ஆண்டு வெளிவந்த சனாதன இதழ் கூறுவது கவனிக்கத்தக்கது. “ஸ்ரீக்ருஷ்ணன், ஸத்யபாமையின் உதவியால் நரகன் என்ற அஸுரனை வதைத்து, அவ்வஸுரன் சிறைபிடித்து வைத்திருந்த 16 ஆயிரம் ராஜ கன்னிகைகளை விவாஹம் செய்துகொண்டதைக் கொண்டாடுவதற்காக யாவரும் அன்று மங்கள ஸ்நானம் செய்து, கலியாணம்போல் கொண்டாடுகிறார்கள்” என ஶ்ரீமத் பாகவத்திலுள்ள நரகாஸுரனின் கதையினை மேற்கோளிட்டுக் கூறுகிறது ஸ்தரீ தர்மம் கட்டுரை.

1933களில் தீபாவளி நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட பண்டிகையல்ல என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். ஶ்ரீமத் பாகவதத்தில் உள்ள நரகாஸுரன் கதையினையும்,ஸ்திரீ தர்மம் இதழில் வெளிவந்த தீபாவளி கட்டுரையையும் கீழே தருகிறோம்.

சிறப்புக் கட்டுரை

தீபாவளி:

விமலா: “அம்மா! சென்ற அக்டோபர் மாசத்தில் நாடெங்கும் தீபாவளி பண்டிகை நடைபெற்றதே, இந்த பண்டிகை எதை உத்தேசித்து நடத்துவது? இது நம் ஹிந்து மதத்தின் ஓர் அம்சமா! அல்லது ஓர் தமாஷ்தானா?

பாரதத்தாய்: நம் நாட்டில் செய்யும் எவ்வித விசேஷங்களையும், ஈசனது ஸேவையாகவே கொண்டாடுவது நம் தூயமுறை, ஆகவே ஸ்ரீக்ருஷ்ணன், ஸத்யபாமையின் உதவியால் நரகன் என்ற அஸுரனை வதைத்து, அவ்வஸுரன் சிறைபிடித்து வைத்திருந்த 16ஆயிரம் ராஜ கன்னிகைகளை விவாஹம் செய்துகொண்டதைக் கொண்டாடுவதற்காக யாவரும் அன்று மங்கள ஸ்நானம் செய்து, கலியாணம்போல் கொண்டாடுகிறார்கள்.

விமலா: அதென்ன கதை! அதை எங்கே படித்தறியலாம்?

பாரதத்தாய்: அதை ஸ்ரீமத்பாகவதம், 10-வது ஸ்கந்தம், 59-வது அத்யாயத்தில் காணலாம். அதைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன், கேள்I முன்காலத்தில் நரகன் என்று ஓர் அஸுரன் இருந்தான்.

விமலா: அஸுரன் என்றால் என்ன?

பாரதத்தாய்: எதைக்கண்டாலும் “எனக்கு, எனக்கு” என்று கைப்பற்றி தனக்குள் அடக்க முயலுபவர் அஸுரர், இவர் முரண்டாக தனக்குத் தோன்றியபடிதான் செய்வார்கள்: மெய் ப்பொருள் எது என்று பணிவுடனும் தவிப்புடனும் விசாரித்தறிந்து, அதற்கேற்க நடக்க முயலமாட்டார்கள், இவர்களுக்கு முன் மனமே சட்டம், இவர்கள் நினைவில் உலகு அனைத்தும் உலகத்தோர் அனைவரும் தனறு ஸுகத்துக்கே ஏற்பட்டன.

விமலா: நமக்குள்ளும் இந்த ஸ்வபாவம் இருக்கிறதே! நாமும் அஸுரர்தானா?

பாரதத்தாய்: இந்த குணம் மிகுதியாயிருக்கு மட்டும் நாம் அஸுரரே.

விமலா: ஸரி: நரகன் விஷயம் என்ன?

பாரதத்தாய்: அந்த அஸுரன் பூமிதேவியின் மகன். தாயிடமிருந்து பொறுமை, அன்பு என்ற குணங்களைப்பெறாமல், “மண்போன்ற” மூடத்தன்மையையே அடைந்தான். ஆனால் மிகப்பலமுடையவன். உலகினுள் பற்பல அரசர்களைத் தோற்கடித்து, அவர்களது பெண்கள் 16 ஆயிரம் பேரை தன் நகரத்துக்கு கொண்டுபோனான். தன்னை மணம்புரியச் சொன்னான், அவர்கள் சம்மதிக்கவில்லை. ஆகையால் அவர்களைக் காவலில் வைத்தான். அப்பெண்கள் ஈசனையே ஏகமனதுடன் சரணமடைந்தனர்.

விமலா: ஈசன் காப்பாற்றினாரா?

பாரதத்தாய்: ஆமாம்! ஆனால் ஈசன் காப்பாற்றுவது நாம் நினைத்தபடியெல்லாம், காப்பாற்றமாட்டான். உரியகாலத்தில், யாவருக்கும் உத்தமக்ஷேமம் வரும்படி அனுக்ரஹம் செய்வான். அப்பெண்களுக்கு உடனே விடிவு காலம் வரவில்லை, முதலில் அவனது பீடையும், துன்பமுமே அதிகரித்தன. ஆயினும் அவர்களுக்கு ஈசன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை மலை போலிருந்தது. ஆகையால், படும் துயரங்கள் மனதுக்குத் தெரியவேயில்லை.

நம்பிக்கையின் வலிமை அத்தகையது: முடிவில் அடையவேண்டிய இன்பத்தை தற்காலமே மனதில் உதிக்கச்செய்து, காலத்தை மறக்கச் செய்யும்.

விமலா: பிறகு என்ன நடந்தது?

பாரதத்தாய்: நரகன் உலகையெல்லாம் துன்பப்படுத்திவிட்டு, தேவலோகம் சென்றான்.

அங்கு தேவர்களைப் பிடித்து இந்திரன் என்ற தேவ அரசனை துரத்திவிட்டு அவன் பதவியைக் கைக்கொண்டான். ‘தேவர்கள்’ என்பவர் ஈசன் முறைப்படி தாம் நடக்கவும், உலகத்தோரை நடக்கச் செய்யவும் முயலுபவர். அவர்களது நற்செய்கைகளுக்குத் தடை வரவே ஸ்ரீக்ருஷ்ணன் நரகாஸுரனை அடக்குவதற்குச் சென்றான், அவர் போருக்குச் சென்றபோது, ஸத்யபாமை அவருக்கு உதவியாய்ச் சென்றாள். ஸ்ரீக்ருஷ்ணன் நரகாஸுரனை வென்று, அவனால் அடைபட்ட 16 ஆயிரம் ராஜகன்னிகைகளையும் விடுவித்தான். அவர்கள் அவன் மீதே பேரன்பு நிலைகொண்டனர். ஆகவே அவர் ஐக்யம் செய்துகொண்டார்.

விமலா: பல மனைவிகளை மணம் புரிவது நாகரீகமா? அவ்வாறே ஓர் ஸ்திரீ பல கணவர்களை மணம்புரிந்து கொண்டால் அநியாயம் என்று சொல்லவில்லையா! இதென்ன ஸ்ரீக்ருஷ்ணனது துவாரகலீலை உலகத்தோருக்கு தூயதர்ம நிலையைக் காட்டும் விரதம் பூண்டது என்பார்களே! இந்த கலியாணத்தையா யாவரும் கொண்டாடுகிறார்கள்.

பாரதத்தாய்: விவாஹம் என்பதின் மெய்நோக்கத்தையும், ஈசனது மெய்நிலையையும் நீ இப்படிக் கேட்கிறாய், விவாஹத்தின் மெய் நோக்கம், இருபுறத்தோரும் ஆத்ம ஐக்யத்துடன், ஈசனுடன் லயித்தலே. சரீரப்புணர்ச்சியால் மெய்விவாஹத்துக்கு ஸாதக முமில்லை: பாதகமுமில்லை, பெரியோர் உணர்ச்சியில் ஈசன் ஒருவனே உலகனைத்துக்கும் ஓர் புருஷன். ஜீவர் யாவரும் இவ்வாறு அவனுடன் ஆத்ம ஐக்கியமடையவேண்டிய மனைவிகள். அந்த 16 ஆயிரம் ஸ்த்ரிகளும் பேரன்பால் இவ்வித ஆத்ம ஐக்கியம் பெற்றதால், அது முனிவர்களும், யோகிகளும் யாவரும் அன்புடன் போற்றிக் கொண்டாட வேண்டிய உத்தமச்செய்கையே, ஆகையால் தீபாவளி விரதத்தன்று இந்த ராஜகன்னியர் போல், நாம் யாவரும் அஸுர குணத்துக்கு ஈடுபடுவதை எதிர்த்து தூய பேரன்பால் ஈசனிடம் ஈடுபட முயலவேண்டும். இதுவே தீபாவளி பண்டிகையின் மெய்நோக்கம்.

மேலுள்ள கட்டுரை குறிப்பிடும் ஸ்ரீமத்பாக வதம், 10-வது ஸ்கந்தம், 59-வது அத்யாயத்தில் உள்ள நரகாஸுரன் கதை இதோ,

மத்ர தேசத்தரசனுக்கு லக்ஷ்மணையென்று ஒரு புதல்வி இருந்தாள். அவள் ஸாமுத்ரிகலக்ஷணங்க ளெல்லாம் அமைந்தவள். முன்பு கருடன் அம்ருதத்தைப் பறித்துக்கொண்டு வந்தாற் போல் ஸ்ரீக்ருஷ்ணன் அவளை ஸ்வயம்வரத்தில் பறித்துக் கொண்டுவந்தான். ஸ்ரீக்ருஷ்ணனுக்கு இத்தகைய மற்றும் பலவாயிரம் பார்யைகளும் இருந்தார்கள். அவர்கள் நரகாஸுரனைக் கொன்று அவனுடைய அந்தப்புரத்தினின்று ஸ்ரீக்ருஷ்ணனால் கொண்டுவரப்பட்டவர்கள்.

நரகாஸுரவத விருத்தாந்தம்;

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்: எவன் உலகத்திலுள்ள ராஜர்களை யெல்லாம் வென்று அந்தந்த ராஜகன்னிகைகளைப் பறித்துக் கொண்டு வந்தானோ, அப்படிப்பட்ட நரகாஸுரனை ஸ்ரீக்ருஷ்ணன் எப்படி வதித்தான்? சார்ங்கமென்னும் வில்லைத் தரித்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய பராக்ரமத்தை வெளி யிடுவதாகிய இந்த நரகாஸுரவதத்தை எனக்கு விவரித்துச் சொல்வீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்: நரகாஸுரன் வருணனுடைய சத்ரத்தையும் (அஸாதாரண மான குடையையும்) இந்த்ரனுடைய மாதா வாகிய அதிதியின் குண்டலங்களையும் மேரு பர்வதத்திலுள்ள மணிபர்வதமென்கிற இந்த்ரனுடைய ஸ்தான விசேஷத்தையும் பறித்துக் கொண்டு போனான். (இந்த்ரன் லோக பாலர்களில் முக்யனாகையால் வருணனுக்கு நேர்ந்த பரிபவத்தையும் தன்னுடையதாகவே நினைத்தான்). இங்ஙனம் பௌமனென்னும் நரகனால் பரிபவிக்கப்பட்ட தேவேந்த்ரன் த்வாரகைக்கு வந்து அங்கு ஸத்யபாமையின் க்ருஹத்தில் இருக்கின்ற ஸ்ரீக்ருஷ்ணனுக்குப் பெளமன் செய்த சேஷ்டையை விண்ணப் பஞ் செய்தான். ஸ்ரீக்ருஷ்ணனும் பார்யை யாகிய ஸத்யபாமையுடன் கருடன் மேல் ஏறிக்கொண்டு கிரிதுர்க்கங்களாலும் சஸ்த்ர துர்க்கங்களாலும் ஜலதுர்க்கம் அக்னிதுர்க்கம் வாயுதுர்க்கம் ஆகிய மற்றும் பல துர்க்கங் களாலும் நுழையமுடியாதிருப்பதும் பயங்காமா யிருப்பவைகளும் உறுதியுள்ள வைகளுமாகிய அனேகமாயிரம் முரபாசங்களால் நாற்புறத்திலும் சூழப்பட்டிருப்பதுமாகிய ப்ரரக்ஜ்யோதிஷ புரத்திற்குப் போனான். அந்த ஸ்ரீக்ருஷ்ணன் கிரிதுர்த்கங்களைக் கதையினாலும் சஸ்த்ரதுர்க் கங்களைப் பாணங்களாலும் பிளந்தான். அக்னி துர்க்கம் ஜலதுர்க்கம் வாயுதுர்க்கம் இவைகளைச் சக்ரத்தினால் அழித்தான் முரபாசங்களைக் கத்தியினால் சேதித்தான். மன உறுதியுடைய முரன் முதலிய வீரர்களின் ஹ்ருதயங்களையும் யந்த்ரங்களையும் சங்கநாதத்தினால் பிளந்தான். கதையைத் தரித்திருக்கின்ற அந்தப் பகவான் பெரிய கதையை விடுத்து அப்பட்டணத்தின் கோட்டையைப் பிளந்தான். ஜலத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த ஐந்து தலையுடைய முரனென்னும் அஸுரன் ப்ரளயகாலத்திலுண்டாகும் இடிபோல் பயங் கரமாயிருக்கிற பாஞ்சஜன்யத்தின் த்வனியைக் கேட்டு ஜலத்தினின்று எழுந்திருந்தான். ப்ரளய காலத்து ஸூர்யனோடொத்த ஒளியுடையவனும் பொறுக்க முடியாதவனும் கண்ணெடுத்துப் பார்க்க முடியாதவனுமாகிய அந்த முராஸுரன் த்ரிசூலத்தை ஏந்திக்கொண்டு ஐந்து முகங்களால் மூன்று லோகங்களையும் விழுங்குபவன் போன்று ஸர்ப்பம் கருடனை எதிர்ப்பது போலக் கருட வரஹனனாகிய ஸ்ரீக்ருஷ்ணனை எதிர்த்து வந்தான். அவ்வஸுரன் த்ரிசூலத்தைப் பலமுள்ளவளவும் கழற்றிக் கருடன் மேல் எறிந்து ஐந்து முகங்களாலும் ஸிம்ஹநாதஞ் செய்தான். பெரிதாயிருக்கின்ற அந்த ஸிம்ஹநாதம் பூலோகத்தையும் அந்தரிக்ஷலோகத்தையும் அந்த லோகத்திற்கு மேலுள்ள ஆகாசத்தையும் ஸமஸ்த திசைகளையும் ப்ராணிகளின் காதுரந்த்ரங் களையும் நிறைத்து ப்ரஹ்மாண்டம் முழுவதும் நிரம்பி விட்டது. ஸ்ரீக்ருஷ்ணன் கருடன் மேல் வருகின்ற அந்த த்ரிசூலத்தைப் பலத்தினால் இரண்டு பாணங்களை விடுத்து மூன்று துண்டங்களாகச் சேதித்தான்; அந்த முரனையும் முகங்களில் பாணங்களால் அடித்தான். அந்த முரனும் கோபமுற்று ஸ்ரீ க்ருஷ்ணன் மேல் கதையை ப்ரயோகித்தான். ஸ்ரீக்ருஷ்ணன் தன்மேல் வருகின்ற அந்தக் கதையைத் தன் கதையால் ஆயிரந்துண்டங்களாகும்படி துண்டித்து  விடுகையில், அவ்வஸுரன் புஜங்களை உயரத் தூக்கிக் கொண்டு ஸ்ரீக்ருஷ்ணன்மேல் எதிர்த்துவந்தான். ஸ்ரீக்ருஷ்ணனும் அங்ஙனம் தன்னை எதிர்த்து வருகின்ற அம்முராஸுரனுடைய தலைகளைச் சக்ராயுதத்தினால் அறுத்து விட்டான். தலையறுப்புண்ட அவ்வஸுரன் ப்ராணன்களை இழந்து இந்த்ரன் ப்ரயோகித்த வஜ்ராயுதத்தினால் சிகரங்கள் அறுப்புண்ட பர்வதம் போல ஜலத்தில் விழுந்தான்.

அந்த முரனுக்கு ஏழு பிள்ளைகள். அவர்கள் தாம்ரன், அந்தரிக்ஷன், ஸ்ரவணன், விபாவஸு, வஸு, நபஸ்வான், அருணன் என்னும் பெயருடையவர்கள். அவர்கள் தந்தையின் வதத்திற்கு வருந்தி அதற்கு ப்ரதிகாரஞ் செய்ய விரும்பிக் கோபா வேசமுற்றுப் பெளமனால் அனுப்பப்பட்டு ஆயுதங்களை ஏந்திப் பீட னென்னும் ஸேனாபதியை முன்னிட்டுக் கொண்டு யுத்தத்திற்குப் புறப்பட்டார்கள். வீரர் களாகிய அந்தத் தாம்ரன் முதலியவர்கள் வந்து கோபத்தினால் ஸ்ரீக்ருஷ்ணன்மேல் பாணங் களையும் கத்திகளையும் கதைகளையும் சக்தி களையும் இரும்புத்தடிகளையும் சூலங்களையும் ப்ரயோகித்தார்கள். வீணாகாத வீர்யமுடைய ஸ்ரீக்ருஷ்ணன் அந்தப் பாணம் முதலிய ஆயுதங்களின் ஸமூஹத்தைத் தன் பாணங்களால் எள்ளளவு துண்டங்களாகத் துண்டித்து விட்டான். பீடனை முன்னிட்டுக் கொண்டுவந்த தாம்ரன் முதலிய அந்த முரபுத்ரர்களையும் தலை துடை புஜம் கால் தேஹம் இவை அறுப்புண்டவர்களாகச் செய்து யமன்வீட்டிற்கு அனுப்பினான். அங்ஙனம் தன்னுடைய ஸேனாபதிகள் ஸ்ரீ க்ருஷ்ணனுடைய சக்ராயுதத்தினாலும் பாணங்களாலும் முடிக்கப் பட்டுத் தள்ளுண்டிருக்கக் கண்டு நரகாஸுரன் மதம் பெருகப்பெற்றவைகளும் ஸமுத்ரத்தினிடைத் தீவுகளில் உண்டானவைகளுமாகிய யானைகளுடன் கூடி ஒருவராலும் எதிர்க்க முடியாதவனாகிப் புறப்பட்டான்.

அவன் ஸூர்யன்மேல் மின்னலோடு கூடிய மேகம் இருப்பதுபோலப் பார்யையுடன் கருடன்மேல் வீற்றிருக்கின்ற ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டு அவன்மேல் சதக்னியென்னும் சக்தியாயுதத்தை ப்ரயோகித்தான். அவனுடன் வந்த மற்ற வீரர்களும் தத்தம் ஆயுதங்களை ஒரேதடவையில் அந்த ஸ்ரீக்ருஷ்ணன்மேல் ப்ரயோகித்தார்கள். மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன் அந்த க்ஷணமே விசித்ரமான இறகுகள் கட்டப்பெற்ற கூருள்ள பாணங்களால் அந்த வீரர்களின் புஜங்களையும் துடைகளையும் தலைகளையும் கால்களையும் சரீரங்களையும் அறுத்துக் குதிரைகளையும் யானைகளையும் முடித்து அந்நரகனுடைய ஸைன்யத்தையெல்லாம் பாழ் செய்தான். குருகுலாலங்காரனே! சிறகுகளால் யானைகளை வதிக்கின்ற கருடன் மேல் வீற்றிருக் கின்ற பகவான் அந்த வீரர்கள் ப்ரயோகித்த ஆயுதங்கள் தன்மேல் வருவதற்கு முன்னமே அந்த ஸைன்யத்தையெல்லாம் வதித்து அப்பால் அந்த ஆயுதங்களை ஒவ்வொன்றையும் மும்மூன்று பாணங்களால் அறுத்துத்தள்ளினான். யானைகள் அனைத்தும் கருடனால் மூக்காலும் இறகுகளாலும் நகங்களாலும் ஹிம்ஸிக்கப்பட்டு வருந்திப் பட்டணத்திற்கே திரும்பிப்போயின. பிறகு நரகனொருவன் மாத்ரமே யுத்த பூமியில்  இருந்து யுத்தஞ்செய்தான்.

அந்த நரகன் தன்பலமெல்லாம் கருடனால் பீடிக்கப்பட்டு வருந்தி ஓடுவதைக்கண்டு வஜ்ராயுதத்தையும் தடுத்த மிகுந்த உருகியுள்ள சக்தியாயுதத்தினால் அந்தக் கருடனை அடித்தான். கருடன் அந்தச் சக்தியினால் அடிக்கப்பட்டுப் பூமாலையால் அடிக்கப்பட்ட யானைபோலச் சிறிதும் சலிக்காதிருந்தான். நரகன் தன் முயற்சி வீணானதைக் கண்டு ஸ்ரீக்ருஷ்ணனை அடிக்கச் சூலாயுதத்தை எடுத்தான். அந்த நரகன் அச்சூலத்தை ப்ரயோகிப்பதற்கு முன்னமே கத்தியின் நுனிபோன்ற நுனியுடைய சக்ராயுதத்தினால் யானையின்மேலிருக்கின்ற அவ்வஸுரனுடைய தலையை அறுத்தான்.

குண்டலங்களோடு கூடியதும் அழகிய கிரீடத்தினால் அலங் கரிக்கப்பட்டதுமாகிய அந்நரகனுடைய சிரஸ்ஸு ஜ்வ லித்துக்கொண்டு பூமியில் விழுந்தது. அதைக் கண்டு நாகனைச் சேர்ந்தவர்கள் ‘ஆ! ஆ!” என்று முறையிட்டார்கள். ரிஷிகள் நல்லது நல்லதென்றார்கள். தேவதைகள் ஸ்ரீக்ருஷ்ணன்மேல் புஷ்பங்களை இறைத்து அவனைத் துதித்தார்கள்.

அப்பால் நரகனுடைய மாதாவாகிய பூமிதேவி உருக்கியழுக்கெடுத்த பொன்னில் இழைக்கப்பட்ட ரத்னங்களால் ஜ்வலித்துக்கொண்டிருக்கிற குண்டலங்களையும் வைஜயந்தியென்னும் வனமாலையையும் வருணனுடைய குடையையும் மஹாமணியையும் கொண்டு வந்து ஸ்ரீக்ருஷ்ணனிடம் கொடுத்தாள். ராஜனே! அப்பூமிதேவி தேவர்க்குந் தேவராயிருக்கத் தகுந்த மேன்மையுடைய ப்ரஹ்மாதிகளால் பூஜிக்கப்பட்டவனும் ஜகதீஸ்வரனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனை வணங்கிக் கைகளைக் குவித்துக் கொண்டு பக்தியினால் வணக்கமுற்ற மதியுடன் ஸ்தோத்ரஞ் செய்தாள்.

பூமிதேவி சொல்லுகிறாள்: தேவதேவர்களான ப்ரஹ்மருத்ராதிகளுக்கும் நியாமகனே! சங்க சக்ரகதாதரனே!

பகவனே! இந்தப் பூமி முதலியவற்றை ஸ்வதந்த்ர வஸ்துக்களென்று நினைப்பது ப்ரமமே. மற்றும், இவை தேஹங்களாகப் பரிணமித்து ஜீவனென்னும் அபிமானத்தை விளைக் கின்றனவாகையால் ப்ரமமென்று கூறப்படுகின்றன. நாதனே! இவன் பகதத்தனென்னும் பெயரு டையவன்; அந்த நரகாஸுரனுடைய புதல்வன். தன்னையே சரணம் அடைந்தவர்களின் வருத்தங்களைப் போக்குந் தன்மையனே! இவன் பயந்து உன் பாதார விந்தங்களைச் சரணம் அடைந்தான். இவனைப் பாதுகாப்பாயாக, ஸமஸ்த அசுபங்களையும் போக்கவல்ல உன் தாமரைக்  கையை இவன் தலைமேல் வைப்பாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்: பக்தியுடன் வணக்க முற்றிருக்கின்ற பூமிதேவியால் இனிய உரைகளை மொழிந்து இங்ஙனம் பூஜிக்கப்பட்ட ஸ்ரீக்ருஷ்ண பகவான் அவனுக்கு அபயங்கொடுத்து ஸமஸ்த ஸம்ருத்திகளும் அமைந்திருக்கப்பெற்ற பௌமனுடைய க்ருஹத்திற்குள்(வசிப்பிடம்) ப்ரவேசித்தான். அங்கு நாகாஸுரன் அரசர்களிடத்தினின்று பராக்ரமித்துக் கொண்டுவந்த பதினாறாயிரம் பெண்மணிகளைக் கண்டான். அப்பெண்மணிகள் விரும்பி வரிக்கத்தகுந்த குணமுடையவர்களில் சிறந்தவனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன் அவ்விடம் வந்திருக்கக் கண்டு மோஹித்து ‘நம்முடைய பாக்யம் இவனை நமக்கு ப்ரியமுள்ள கணவனாகக் கொண்டு வந்து விட்டது’ என்று நினைத்து மனத்தினால் அவனையே தங்களுக்குக் கணவனாக வரித்தார்கள். அம்மடந்தையர்கள் அனைவரும் ‘இந்த ஸ்ரீக்ருஷ்ணன் எனக்குப் பதியாவானாக. கடவுள் அதை அனுமோதனஞ் செய்வாராக’ என்னும் பெரிய விருப்பத்துடன் தனித்தனியே ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மனங் கொண்டார்கள்.

ஸ்ரீக்ருஷ்ணன் அவர்களுக்கு ஸ்னானஞ் செய்வித்து அழுக்கின்றி நிர்மலமா யிருக்கின்ற ஆடை ஆபரணம் முதலியவைகளால் அலங்காரமும் செய்வித்துச் சிவிகைகளில் ஏற்றி த்வாரகைக்கு அனுப்பினான். விலையுயர்ந்த ரதங்களையும், அளவற்ற பொக்கிசத்தையும் நான்கு தந்தங்கள் அமைந்து மிகுந்த பலமுடையவைகளும் ஐராவதமென்னும் திக்கஜத்தின் வம்சத்தில் பிறந்தவைகளும் வெண்மை நிறமுடையவைகளுமாகிய அறுபத்து நான்கு யானைகளையும் த்வாரகைக்கு அனுப்பினான். அந்த ஸ்ரீக்ருஷ்ணன் பார்யையுடன் ஸ்வர்க்கத்திற்குச் சென்று குண்டலங்களை அதிதியிடம் கொடுத்துத் தேவேந்த்ரனாலும் பெருமையுள்ள இந்தராணியாலும் பூஜிக்கப் பட்டான். அப்பால் தன்பார்யையினால் தூண்டப் பட்டுப் பாரிஜாத வ்ருக்ஷத்தைப் பிடுங்கிக் கருடன்மேல் வைத்துக்கொண்டு புறப்படுகையில் அதைக் கொண்டு போகலாகாதென்று தடுத்து யுத்தத்திற்கு வந்த இந்த்ரன் முதலிய தேவதை களை வென்று பாரிஜாத வ்ருக்ஷத்தைப் பட்டணங் கொண்டு சேர்த்தான். அந்தப் பாரிஜாத வ்ருக்ஷம் ஸத்யபாமையின் க்ருஹத்தினுடைய உத்யானவனத்தில் வைக்கப்பட்டு அவ்வனத்திற்கு மிகவும் சோபையை விளைத்துக்கொண்டிருக்தது. அதன் பரிமளத்தையும் மகரந்தத்தையும் விரும்பி ஸ்வர்க்கத்தினின்று வண்டுகள் அதைத் தொடர்ந்து வந்தன.

விகாரங்களற்றவனும் மஹானுபாவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன் அப்பால் ஒரே முஹூர்த்தத்தில் அந்தப் பெண்மணிகள் எத்தனை பேர்களோ அத்தனை க்ருஹங்களில் அத்தனை உருவங்களை ஏற்றுக் கொண்டு அந்தப் பதினாறாயிரம் பெண்மணிகளையும் விதிப்படி விவாஹஞ் செய்து கொண்டான். பிறர்க்கு நெஞ்சிலும் நினைக்கமுடியாத செயல்களையும் நிறை வேற்றுந் திறமையுடைய அப்பகவான் தான் மானிட உருவம் பூண்டும் தனக்கு அஸாதாரணமான மஹிமையைக் கைவிடாமல் நிறைவாளனாகவேயிருந்தானாயினும் ஸமஸ்த ஸம்ருத்திகளும் நிறைந்திருக்கையால் இணை யெதிரில்லாதவைகளான அம்மடந்தையர்களின் மாளிகைகளில்’ ஒரு நொடியும் பிரியாதிருந்து, ப்ராக்ருதஜனம்போல் க்ருஹஸ்தர்மங்களை அனுஷ்டித்துக்கொண்டு அழகியர்களான அப்பெண்மணிகளுடன் விளையாடலுற்றிருந்தான்.

பக்தர்களின் மனத்தைத் தொடர்ந்து நடக்குங் தன்மையனும் அளவற்ற மஹிமைகளுடையவனும் இணையெதிரில்லாதவனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன் தன் பார்யைகளிடத்தில் அவரவர் விரும்பினபடி உருவங்களை ஏற்றுக்கொண்டிருந் தமை என்ன அற்புதம்?

அவனுடைய பெருமைக்கு இது ஒரு அற்புத மன்று . யோகேஸ்வரர்களுக்கும் ஈஸ்வரனாகிய ஸ்ரீக்ருஷ்ணன் இப்பொழுதும் தன் பக்தர்களுக்கு உள்ளேயும் வெளியிலும் நாற் புறத்திலும் நூறாகவும் ஆயிரமாகவும் தோற்றுகிறான். அப்பெண்மணிகள் ப்ரஹ்மாதிகளாலும் அறியமுடியாத மஹிமையு டைய ஸ்ரீக்ருஷ்ணனைக் கணவனாகப் பெற்று இடைவீடின்றி வளர்ந்துவருகின்ற ஆனந்த முடையவர்களாகி அனுராகம் அமைந்த புன்னகையோடு கூடின கண்ணோக்கத்தை முன்னிட்டுக் கொண்டிருக்கின்ற புதியகலவிகளில் பரிஹாஸ வசனங்களைப் பேசிக்கொண்டு இடையிடையில் வெட்கத்தை அடைந்தார்கள். அம்மா தரசிகள் தாங்கள் நினைத்தபடி நடக்க ஸித்தமாயிருக்கின்ற அநேகமாயிரந் தாஸிகளையுடையவர்களாயினும் அந்த ஸ்ரீக்ருஷ்ணனை எதிர்கொள்வது, சிறந்த ஆஸனம் அளிப்பது, பாதங்களை விளக்குவது, தாம்பூலங்கொடுப்பது, பாதங்களைப் பிடிப்பது முதலிய உபசாரங்களால் ஸ்ரமந்தீர்ப்பது, சாமரம் வீசுவது, கந்தம்பூசுவது, பூ மாலை சூட்டுவது, தலைவாரி முடிப்பது,படுக்கை அமைப்பது, உபஹாரங்களைக் கொடுப்பது இவை முதலியனை களால் அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்குத் தாங்களே நேரில் பணிவிடை செய்தார்கள்.

நரகாஸுரனின் அரண்மனையில் சிறைப் பிடிக்கப்பட்டிருந்த 16 ஆயிரம் ராஜ குமாரிகளை ஶ்ரீக்ருஷ்ணன் விவாஹம் செய்த கதை ஶ்ரீமத் பாகவதத்தில் கூறப்படுகிறது. இராமாயண சீதை ராமன் விவாஹம் உட்பட அனைத்து சனாதன வைதீக புராணங்களில் கூறப்படும் விவாஹங்களில் பால்ய விவாஹமே சிலாஹித்துக் கூறப்படுகிறது. அதன்படி ஶ்ரீமத் பாகவதத்தில் கூறப்படும் 16 ஆயிரம் பெண்மனிகளும் எட்டு வயதைத் தாண்டாத சிறுமிகளாகவே இருக்க வேண்டும். கதையென்றால் காது கிழிய கிழிய பொய்களை புரட்டுக்களை எழுதி வைப்பதை சனாதனிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பதற்கு மேலுள்ள நரகாஸுரன் கதையும் ஓர் உதாரணம்.

நன்றி: ‘சனாதனம் அறிவோம்’,
செ. தினகர ஞானகுருசாமி

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *