போதைப் பொருள் சாம்ராஜ்யம் நடக்கிறதா? தமிழ்நாடு முழுதும் ஒரே நாளில் 344 போதைப் பொருள் குற்றவாளிகள் கைது!

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 5- தமிழ் நாட்டை போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் ஒரு நாள் சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. இதில் 344 பேர் கைது செய்யப் பட்டனர்.

காவல்துறை துணைத் தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்கள், 9 மாநகரங்களில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை நேற்று (4.11.2026) மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு காவல் துறை குழுவினர் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

இதில் மொத்தம் 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 344 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த 64 குற்றவாளிகளும் பிடிபட்டனர். மேலும், 44 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டன.

இந்த சோதனையில் 242.2 கிலோ கஞ்சா, 2,143 போதை மாத்திரைகள் உட்பட ஏராளமான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மாநிலம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை நடைபெறும் 3,242 முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டன.

இதில் 1,367 இடங்கள் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இருப்பது தெரிய வந்தது. அப்பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் உட்பட 357 ரயில்களில் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே காவல் துறையினர் இணைந்து மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தினர்.

இதில் 104.361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 890 மாணவர் விடுதிகளிலும் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுதவிர, 1,770 போதைப் பொருள் வழக்குகளில் புலன் விசாரணை நிறைவு செய்யப்பட்டுள்ளது. 804 வழக்குகளில் குற்றவாளிகளின் சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் ஏற்கெனவே பறிமுதல் செய்யப் பட்ட 6,958 கிலோ கஞ்சா, 250 கிராம் மெத்தம்பெட்டமைன் ஆகியவை அழிக்கப்பட்டன. மேலும், 175 மறுவாழ்வு மய்யங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்காக பள்ளி, கல்லூரிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் 3,972 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. எல்லை சோதனைச் சாவடிகளில் 23,744 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் கஞ்சா, 62.1 கிலோ குட்கா, 73.960 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது தடுப்புக் காவல், சொத்து முடக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *