பெரியார் பேணிய பல்கலைப்புலவர் கா. சுப்பிரமணிய பிள்ளை பிறந்த நாள் இன்று (5-11-1888)
கா.சுப்பிரமணிய பிள்ளை என்ற கா.சு. பிள்ளை திருநெல்வேலியில் (5.11.1888) பிறந்தார். இவர் ஒரு சிறந்த தமிழறிஞர், தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர், வழக்குரைஞர், மற்றும் பேராசிரியர் எனப் பன்முகத் திறமைகள் கொண்டவர்.
திருநெல்வேலியில் காந்திமதிநாதப் பிள்ளை – மீனாட்சியம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தவர் கா.சுப்பிரமணியப் பிள்ளை. இவருடைய, தந்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக பி.ஏ. பட்டம் பெற்று, ‘பி.ஏ. பிள்ளை’ என்று அழைக்கப்பட்டவர். அவருடைய வாரிசாக உருவான கா.சு.பிள்ளை,
திருநெல்வேலியில் திண்ணைப் பள்ளிக்கூடம் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் தமது கல்வியைத் தொடங்கினார்.
1906 ஆம் ஆண்டில் மெட்ரிக்குலேசன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதல் மாணாக்கராகத் தேறினார். 1908 இல் கலை உறுப்பினர் (Fellow of Arts) தேர்வில் வெற்றி பெற்றதுடன், மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய புலவர் தேர்விலும் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். பின்னர், இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். சட்டக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். சென்னை சட்டக்கல்லூரியில் ஒன்பது ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். அதனால் எம்.எல். பிள்ளை என்று அழைக்கப்பட்டவர்.
சில காலம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். நாவலர் இரா. நெடுஞ்செழியன், இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் போன்றோர் இவரிடம் மாணவர்களாகப் பயின்றவர்கள் ஆவர்.
1925ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக் கழகத்தில் ‘குற்றங்களின் நெறிமுறைகள்’ என்ற தலைப்பில் பன்னிரு சொற்பொழிவுகள் நிகழ்த்தி, “தாகூர் சட்ட விரிவுரையாளர்” என்ற உயரிய பரிசினைப் பெற்ற ஒரே தமிழர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
கா.சு. பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணி மிகவும் மகத்தானது.
இவர் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்ற நூல் இன்றளவும் மிகவும் குறிப்பிடத்தக்க தொரு ஆய்வு நூலாகத் திகழ்கிறது.
இந்நூலில், திருக்குறளின் காலத்தை கி.மு. 5 ஆம் நூற்றாண்டு என நிறுவியது, தொல்காப்பியப் பாயிரம் கூறும் நான்மறை என்பது ரிக், யசுர் வேதங்கள் அல்ல, தமிழிலேயே நான்கு மறைகள் தோன்றியுள்ளன போன்ற ஆய்வுப் பூர்வமான கருத்துகளைத் துணிச்சலுடன் எடுத்துரைத்துள்ளார்.
பல்கலைப் புலவர் என்னும் பட்டம் 1940 ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாகாணத் தமிழ்சங்கக் கூட்டத்தில் கா. சு. பிள்ளைக்கு வழங்கப்பட்டது. நீதிக்கட்சி என்னும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரும் செட்டிநாட்டின் இளவரசருமான மு.அ. முத்தையா செட்டியார் 1940 ஆம் ஆண்டில் கா.சு. பிள்ளையின் பணிகளைப் பாராட்டி செப்புப் பட்டயம் ஒன்றினை வழங்கினார்.
தமிழ் அறிஞர் கா.சு.பிள்ளை அவர்கள் பணியாற்றி ஓய்வு பெற்று திருநெல்வேலியில் இருந்து போது அவர் மிகவும் வறுமையில் வாடினார் என்று கேள்விப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் கா.சு.பிள்ளை அவர்களுக்கு அவர் மறையும் வரை மாதா மாதம் அய்ம்பது ரூபாய் கொடுத்து வந்தார் (இன்றைய ரூபாய் மதிப்பு எழுபதாயிரம்). இதை “குடிஅரசு”, விடுதலை இதழ்களில் — எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை எந்த இடத்திலும் பேசவும் இல்லை என்ற செய்தியை மறைமலையடிகள் குறிப்பிட்டு இருக்கிறார். ‘மறைமலையம்’ என்ற புத்தகத்தில் இந்த செய்தியை பதிவு செய்துள்ளார்.
தகவல் : பாணாவரம் பெ.வீரமணி
