*பெரியார் அறிவுலகத்தை வடித்த வரலாற்று நாயகர் நமது ‘திராவிட நாயகர்’ மு.க.ஸ்டாலின்!
* தளபதி அவர்களே, உங்களை நாங்கள் பெருமையோடு தூக்கிச் சுமக்கிறோம்!
* அண்ணா, கலைஞர், நாங்களும் அமர்ந்திருப்பது பெரியாரின் தோள்களில்! எங்கள் தோள்களின் மீது நீங்கள் இருக்கிறீர்கள்!
* இன்று ஆட்சியில் நீங்கள் இல்லாதிருக்கலாம் – ஆனால், உலகத் தமிழர்களின் உள்ளங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளீர்கள்!
இது வெறும் பாராட்டு விழா அல்ல;
கோவை, நவ.5 கோவையில் ரூ.300 கோடி செலவில், காலத்தால் அழிக்க முடியாத, என்றும் நிலைத்து நிற்கக் கூடிய பெரியார் அறிவுலகத்தை ஏழடுக்கு மாளிகையாக உருவாக்கிய தளபதி மு.கஸ்டாலின் அவர்களுக்கு நன்றி பாராட்டு தெரிவித்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
‘பெரியார் அறிவுலகம்’ கண்ட
‘திராவிட நாயகர்’ தளபதி மு.க.ஸ்டாலினுக்கு நன்றி பாராட்டு விழா!
கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ உருவாக்கிய திராவிட நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகம் சார்பில், நேற்று (4.11.2026) மாலை 6 மணிக்கு கோவை வ.உ.சி. மைதானத்தில் பாராட்டு விழா – பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது. அவ்விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
உலக மக்களுடைய
இதய சிம்மாசனத்தை என்றைக்கும் நிரந்தரமாகக் கொண்டிருக்கக் கூடியவர்!
இந்தக் கோவை மாநகரத்தில், இப்படி ஒரு வரலாற்றுச் சாதனை – காலத்தை வெல்லக்கூடிய ஒரு வரலாற்றுச் சாதனையாக இருக்கக்கூடிய ‘பெரியார் அறிவுலகம்’ என்பதை 300 கோடி ரூபாய் திட்டத்திலே சிறப்பாக அமைத்து, காலமெல்லாம் மாறும்; ஆனால், அறிவுலகம் என்றைக்கும் நிலைத்திருக்கும் என்று சொல்லக்கூடிய மகத்தான ஒரு சாதனையினுடைய நாயகர் எங்கள் சகோதரர், அவரை மேனாள் முதலமைச்சர் என்று அழைக்க நான் விரும்பவில்லை; மாறாக பதவி சிம்மாசனத்திலே இருந்தாலும், இல்லை என்றாலும் உலகத் தமிழர்களுடைய இதய சிம்மாசனத்தை என்றைக்கும் நிரந்தரமாகக் கொண்டிருக்கக் கூடியவர் எங்கள் சகோதரர் திராவிட நாயகர்.
தமிழ்நாட்டை பூங்காவாக்கினீர்கள்; சிலர் இப்போது, புயலாக ஆக்க முயற்சிக்கிறார்கள்!
அவருடைய சாதனையை, அவரேதான் முறியடிக்க முடியும், மீண்டும் வந்து. வேறு எவரும் முறியடிக்க முடியாது. அப்படிப்பட்ட தயாரிப்பு. அறிவாசான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் – எல்லாவற்றையும் கலந்த கலவையினுடைய பெயர்தான் மு.க.ஸ்டாலின் என்பதாகும். அப்படிப்பட்ட ஓர் அரிய சகோதரர் – சாதனைகள் மேல் சாதனைகள். இந்தத் தெருக்களின் வழியே வந்தேன்; நான் தங்கிய விடுதியில் இருந்து வெளியே வருகிறேன். இந்தப் பக்கம் பார்த்தால், ‘பெரியார் அறிவுலகம்’ அந்தப் பக்கம் பார்த்தால், செம்மொழிப் பூங்கா. தமிழ்நாட்டை பூங்காவாக்கினீர்கள்; சிலர் இப்போது, புயலாக ஆக்க முயற்சிக்கிறார்கள். அதற்கு ஒருபோதும் மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். அத்தகைய பெருமைக்குரிய திராவிட நாயகர் அவர்களே, உங்களை நாங்கள் தலைதாழ்ந்து வரவேற்கிறோம்!
தாய்க்கழகம், உச்சி மோந்து கட்டி அணைக் கிறது! தாயின் மடியில், நீங்கள் இன்றைக்கு இருக்கிறீர்கள். இந்த மடி நிரந்தரமானது; இது வரும், போகும் என்று சொல்வது அல்ல. இது ‘மாண்புமிகு’ அல்ல; ‘மானமிகு’ என்பதுதான் மிக முக்கியமான ஒன்றாகும். அப்படிப்பட்ட ஓர் அருமையான தருணம் இது.
‘இதுபோல தருணம்
எப்போதும் வாய்க்காது!’
ஜப்பான் மொழியிலே ஒரு சொல் உண்டு – அதாவது, ‘இச்சியாகோ’ என்று சொல்வார்கள். ‘இச்சியாகோ’ என்று சொன்னால், ‘இதுபோல தருணம் எப்போதும் வாய்க்காது’ என்று சொல்லக்கூடிய ஓர் அருமையான தருணம். அந்தத் தருணத்தை இப்போது நாங்கள் பெற்றிருக்கிறோம். கோவையிலே ரூ.300 கோடி மதிப்பில் நூலகம்; அதை அமைப்பதற்கு அவருக்குத் துணையாக இருந்த எ.வ.வேலு அவர்கள் இங்கே இருக்கிறார்கள்.
அதுபோலவே இந்தச் சிறப்பு விழாவிற்கு, நாங்கள் எல்லாம் முயற்சி செய்த நேரத்தில், ‘‘இதோ நாங்கள் இருக்கிறோம்’’ என்று சொன்ன செந்தில்பாலாஜி அவர்கள் இங்கே இருக்கிறார்கள்.
இவ்வளவு பெரிய மகிழ்ச்சியைப் பெறுவதற்காகத் தான் வந்திருக்கிறேன்!
இப்படிப்பட்ட நிலையி்ல், இவர் மிசாவில் சிறைக்குப் போகவில்லை என்று சொன்ன பொய்யர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்குக் கண்ணெதிரே இருக்கக்கூடிய எங்கள் காரோட்டி கண்ணப்பன் அவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். இந்த விழாவிற்கு நான் வரும்போது, மருத்துவமனையிலிருந்து வந்திருக்கிறேன். ஆனால், மருத்துவம் எங்கே கிடைக்கும் என்பதற்காக வந்தேன் தெரியுமா? இந்த மருத்துவத்துக்காகத்தான் – இந்த மருத்துவத்துக்காகத்தான்! இதைப் பார்த்த உடனே இவ்வளவு பெரிய மகிழ்ச்சியைப் பெறுவதற்காகத் தான் வந்திருக்கிறேன்.
அப்படிப்பட்ட எங்கள் இதய நாயகராக இருக்கக்கூடிய, நம்முடைய தளபதி அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே வரவேற்புரையாற்றிய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களே, ஆதாரங்களோடு சாதனைகளைப் பட்டியலிட்ட நம்முடைய கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, அதுபோல முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய கோவை மண்டல தி.மு.க. பொறுப்பாளர் செந்தில் பாலாஜி அவர்களே, மேனாள் அமைச்சர்களாக இருக்கக்கூடிய மானமிகு எ.வ.வேலு அவர்களே, மானமிகு கண்ணப்பன் அவர்களே, மானமிகு சாமிநாதன் அவர்களே, மானமிகு முத்துச்சாமி அவர்களே, மானமிகு கயல்வழி செல்வராஜ் அவர்களே, கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் துரை.செந்தமிழ்ச்செல்வன் அவர்களே, தெற்கு தளபதி முருகேசன் அவர்களே, வடக்கு தொண்டாமுத்தூர் ரவி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் கோவை கணபதி ராஜ்குமார் அவர்களே, பொள்ளாச்சித் தோழர் ஈசுவரசாமி அவர்களே, ஈரோடு பிரகாஷ் அவர்களே, வணக்கத்திற்குரிய கோவை மாநகர மேயர் ரங்கநாயகி அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் அவர்களே மற்றும் சிறப்பான வகையிலே ஏற்பாடு செய்திருக்கின்ற எங்கள் பெருமைமிகு செயல்வீரர் கோவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், இந்நிகழ்விற்கு நன்றியுரை கூற இருக்கக்கூடியவருமான சந்திரசேகர் அவர்களே,
முன்னிலை வகிக்கக்கூடிய தோழர்களே, நேரத்தின் நெருக்கடியினால் எல்லோருடைய பெயர்களை விளிக்கவில்லை. தோழர்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். அப்படிப்பட்ட தோழர்களே, வெள்ளம் போல் திரண்டிருக்கக்கூடிய எனது அருமை கொள்கை உறவுகளே! தாய்மார்களே, பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் நன்றி!
நெஞ்சமெல்லாம் பூரித்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு பூரிப்பு – இப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சி – இப்படிப்பட்ட ஒரு காட்சி – என்றைக்கும் எங்களைச் சிறப்புப்படுத்தும்; இளமையாக்கும்; வளமையாக்குவது என்பது முக்கியமல்ல; இளமையாக்கும், அதுதான் மிக முக்கியம். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான ஒரு நிலை!
இதுவரை நாடு காணாத…
இந்த விழா இரண்டு நோக்கங்களைக் கொண்டி ருக்கிறது. ஒன்று, தந்தை பெரியாருடைய 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா. இன்னொன்று, 300 கோடி ரூபாய் மதிப்பில், இதுவரை நாடு காணாத, ஏன் ஒரு வகையிலே, உலகத்தின் பல்வேறு பல்கலைக் கழகங்களுடைய நூலகங்களை நான் பார்த்திருக்கிறேன்; பீகிங் பல்கலைக்கழகத்துக்கு, நான் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் என்ற முறையிலே அழைக்கப்பட்ட நேரத்தில், அங்கே உள்ள ஒரு நூலகத்தைத்தான் முதலில் பார்த்தேன். அந்த நூலகத்திலே, நூலகராக இருந்தவர்தான் மாசே துங் அவர்கள்.
அறிவுலகத்தை, எந்த அழிவுலகமும்
அழித்துவிட முடியாது!
அந்தப் பல்கலைக்கழகத்தையும் பார்த்தோம்; இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம். அதுபோல கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் – பல நூல்களைப் பார்த்திருக்கிறோம். பல நூலகங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்று காலை, இந்த மகத்தான மாமனிதர் செய்திருக்கிற அந்தச் சாதனையினுடைய வடிவம் இருக்கிறதே, அது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. அது வெறும் நூலகம் அல்ல; அருமையாகப் பெயர் வைத்திருக்கிறீர்கள் சகோதரர்களே! ‘பெரியார் அறிவுலகம்’ – அறிவுலகத்தை, எந்த அழிவுலகமும் அழித்துவிட முடியாது. அப்படிப்பட்ட அந்த அறிவுலகத்தைக் காண்பதற்காக வந்தபோது, நான் கொஞ்சம் சற்று சோர்வோடு வந்தேன். உண்மையைச் சொல்லுகிறேன்; உண்மையைத் தவிர எங்களுக்கு வேறு சொல்லிப் பழக்கம் இல்லை. ஆகவே, அப்படிப்பட்ட நேரத்திலே, என்னை அவர் கவனத்தோடு என் கையைப் பிடித்தவர் கடைசி வரை விடவில்லை. சிலர் நினைக்கலாம், இப்போதுதான் அந்தக் கை பிடித்தது என்று. அல்ல, 50 ஆண்டுகளுக்கு முன்னால், மிசா சிறையில், அவர் அடித்துத் தள்ளப்பட்ட நேரத்திலே, என் மீதுதான் விழுந்தார். அந்தக் கையை இரத்தக் கறையோடு விழுந்த அவரைத் தாங்கிப் பிடித்த கைகள் இருக்கிறதே, இந்தக் கரங்கள் என்றைக்கும் பிடித்திருக்கும்; எந்த நிலைகளிலும் மாறாது, என்றைக்கும் எங்களுக்கு தற்காலிகம் என்ற ஒன்றே கிடையாது. நிரந்தரம்தான். கொள்கையா? நிரந்தரம். நட்பா? நிரந்தரம். ஆனால், கொள்கையில் சமரசம் கிடையாது. நட்பில் சமரசம் இருக்கலாம் என்ற உணர்வோடு, தந்தை பெரியாருடைய கொள்கைக்கு, இங்கே பட்டியல் போட்டு காட்டிவிட்டார் கழகத் துணைத் தலைவர் அவர்கள். அன்றைக்கும் நெருக்கடி; இப்போது வேறு வகையான நெருக்கடி. அவர் விமான நிலையத்திற்குப் போக வேண்டும். ஆகவே, எனக்குப் பேச நெருக்கடி, நேர நெருக்கடி. எனவேதான், சிறப்பாக ஒரு கருத்தை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
அழகுக்காக அலங்காரத்துக்காக
திராவிடர் கழகத்துக்காரன் பேச மாட்டான்!
நண்பர்களே, நன்றாக நினைத்துப் பாருங்கள். எப்படிப்பட்டவர் அவர் – அழகுக்காக அலங்காரத்துக்காக திராவிடர் கழகத்துக்காரன் பேச மாட்டான். பேரறிஞர் அண்ணா அவர்கள், 18 ஆண்டு காலம் பிரிந்த நிலையிலே, திருச்சியிலே அய்யாவும், அண்ணாவும் ஊர்வலமாக வருவதற்காக, நான்தான் ஓடிப்போய், பெரியாரிடம் தயக்கத்தோடு கேட்டேன். ‘‘அய்யா, அண்ணா வருகிறார் நாளைக்கு; நீங்கள், அவரோடு ஒன்றாக ஊர்வலத்திற்கு வரவேண்டும் என்று நினைக்கிறோம்’’ என்று. அண்ணாவிடம் கேட்டுவிட்டீர்களா? என்றார் அய்யா.
அண்ணா, நாளைக்குத் தான் வருகிறார் என்றேன்.
அண்ணா, எப்போதுமே ஊர்வலத்திற்கு ஒப்புக் கொள்ள மாட்டார். மறுநாள் காலையில், அண்ணா அவர்களை வரவேற்றுவிட்டு, அண்ணாவோடு அரசினர் மாளிகைக்கு அழைத்துச் சென்றேன்.
‘அய்யா எப்படி இருக்கிறார்?’ என்று அண்ணா கேட்டார்.
‘‘நன்றாக இருக்கிறார், உற்சாகமாக இருக்கிறார்’’ என்று சொல்லிவிட்டு, ‘‘அண்ணா, ஓர் அன்பான வேண்டுகோள்; தோழர்களின் வேண்டுகோள்’’ என்றேன்.
என்ன? என்றார் அண்ணா.
‘‘நீங்கள் இரண்டு பேரும் ஊர்வலத்தில் ஒன்றாக வரவேண்டும்’’ என்றேன்.
அப்படி நான் சொன்ன உடனே, ஏதாவது காரணம் சொல்லி மறுப்பாரோ என்று நான் நின்றிருந்தேன். அய்ந்த நிமிடம் என்று கையைக் காட்டினார்.
எதைப்பற்றியும் கவலைப்படாதவர், அய்ந்து நிமிடம் என்று எதற்காகச் சொன்னார் என்றால், ‘ஷேவ்’ செய்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொன்னார்.
கூர்த்த மதியோடு செய்திருக்கிறார் என்பதற்கு அடையாளம்!
அன்றைக்கு அவர்களைப் பார்த்த காட்சி இருக்கிறதே, அது சாதாரணம் அல்ல. அது மாதிரி, அந்த அண்ணா அன்றைக்குப் பேசிய ஒரே கருத்து, பெரியார் விழா என்பதற்காகச் சொல்லுகிறேன். பெரியார் சமத்துவபுரம் – இந்தியாவிலே எங்கும் கிடையாது, ஜாதி ஒழிப்புக்காக. அதேபோல, வைக்கம் நூற்றாண்டு – அவர் ஏற்படுத்திய வரலாறு இருக்கிறதே, மிகப்பெரிய ஒரு வரலாறு. உலக மக்கள் எல்லாம் புத்தகத்திலே பதிவு செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அவர்களைப்பற்றி அண்ணா சொன்ன ஒரே ஒரு கருத்தைச் சொல்லுகிறேன். பெரியாருடைய அறிவு புரட்சி – அவர்கள் எப்படி அறிவு உலகம் என்று பெயர் வைத்தார்கள் – எவ்வளவு நுண்ணறிவோடு அவர்கள் செய்திருக்கிறார்கள் –கூர்த்த மதியோடு செய்திருக்கிறார் என்பதற்கு அடையாளம்.
எந்த லட்சியத்தை அடைய வேண்டுமோ,
அதை அடைந்தே தீரும்!
அண்ணா பேசுகிறார் கேளுங்கள்:
‘‘பெரியார் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அறிவுப் புரட்சி, காலத்தால், சுலபத்தில் நிற்கப் போவதில்லை. அது போக வேண்டிய தூரத்துக்குப் போய், அடைய வேண்டிய சக்தியை, இலக்கை தொட்டுத்தான் நிற்கும். எப்படி, வில்லை விட்டுக் கிளம்பிய கணை, அடைய வேண்டிய இடத்தில் பாய்ந்தால்தான், எப்படி அதன் வேகம் நிற்குமோ, அதைப்போல பெரியார் அவர்களிடத்தில் இருந்து பிறந்த அறிவுக்கணை எந்த லட்சியத்தை அடைய வேண்டுமோ, அதை அடைந்தே தீரும். அதில் யாருக்கும் அய்யமில்லை என்று சொன்னார்கள்.
‘திராவிட மாடல்’ ஆட்சியில், சாதனைகளுக்கு மேல் சாதனை; இன்றைய ஆட்சியில்
வேதனைகளுக்கு மேல் வேதனை!
அந்த அறிவுக்கணைதான், இங்கே பெரியார் அறிவுலகத்தை உருவாக்கி இருக்கிறது. ஆயிரம் கோடி நன்றிகள்! நன்றி என்ற வார்த்தை எங்களுக்குப் போதாது. அப்படிப்பட்ட சாதனையை நீங்கள் செய்து இருக்கிறீர்கள். சில பேர் நினைக்கிறார்கள் – உங்களைப் பதவியால் அளக்க முடியாது; உழைப்பால் அளக்க முடியுமா? என்றால், அப்படியும் அளக்க முடியாது. அளவிட முடியாத உழைப்பு உங்களுடையது. அப்படிப்பட்ட உங்களுடைய ஆட்சி என்றைக்கும் ஆட்சியாகத்தான் இருக்கும். ஒருபோதும் காட்சியாக இருந்ததில்லை. இனத்தின் மீட்சியாக இருக்கக்கூடிய ஓர் ஆட்சியாகத்தான் நீங்கள் நடத்தி இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட ஆட்சியில், சாதனைகளுக்கு மேல் சாதனை. ஆனால், இன்றைக்கோ வேதனைகளுக்கு மேல் வேதனை என்று போய்க்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையிலே, நிச்சயமாக அறிவுலகம்தான் – அதை இனிமேல் கணகண்காணிக்க வேண்டும்.
நாடு, சமுதாயம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய நேரத்திலே, இதைத்தான் நினைக்க வேண்டும்.
எப்படி உங்களைப் பாராட்டுவது
என்று தெரியவில்லை!
‘பெரியார் அறிவுலகம்’ என்று அவர்கள் பெயர் வைத்தது, எவ்வளவு சிறப்பானது என்பதற்கு அடையாளம் சொன்னால், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், மிலேனியன் என்று சொல்லக்கூடிய ஆயிரமாவது ஆண்டு வருகிற நேரத்திலே, அற்புதமான ஒரு கவிதையைக் ‘குடிஅரசில்’ எழுதினார்கள்.
“ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டியவள்
அவர் அறிந்திராத அறிவாவார்
அணிந்திராத அணியாவார்! கழறவோ அவர்தான் பெரியார்!’’ என்று சொன்னார்.
அப்படிப்பட்ட பெரியாரை அறிந்து, அதே அறிவுலகத்தை நீங்கள் செய்திருக்கிறீர்கள். எப்படி உங்களைப் பாராட்டுவது என்று தெரியவில்லை.
வரலாற்றை உருவாக்குகிற, வரலாற்றுக்கே உரிய வரலாற்று நாயகரான உங்களைத் தாய்க் கழகம் பூரிப்போடு அணைத்து மகிழ்கிறது!
இன்றைய சூழ்நிலையிலே, எங்கு பார்த்தாலும் ஜாதிக்கலவரங்கள்; எங்கு பார்த்தாலும் மதவெறியர்கள்; எங்கு பார்த்தாலும் மூட நம்பிக்கைகள் புயல்விரித்து ஆடிக்கொண்டிருக்கின்றன. இந்தக் காலகட்டத்திலே, பெரியாரின் சேவை, எப்போதும் தேவை! அதை உணர்ந்துதான், ‘‘அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு – விசாலப் பார்வையால் விழுங்கு உலகத்தை’’ என்று ஆக்கி கொண்டிருக்கக்கூடிய அந்த வாய்ப்பை நீங்கள் தந்திருக்கிறீர்கள். எனவே, இது வரலாறு! சில தலைவர்கள், வரலாற்றில் இடம்பெறுவார்கள்; ஆனால், நீங்கள் வரலாற்றை உருவாக்குகிற, வரலாற்றுக்கே உரிய வரலாற்று நாயகர். அப்படிப்பட்ட உங்களைத் தாய்க் கழகம் பூரிப்போடு அணைத்து மகிழ்கிறது.
கூட்டணி உறவுல்ல;
இது கொள்கை உறவு!
தாய்க் கழகத்தினுடைய மகிழ்ச்சி எல்லையற்ற மகிழ்ச்சி! தாய் எந்த நிலையிலும் ஒன்றாகவே இருப்பார்கள். எந்த நிலையிலும் தாய் என்ன செய்தாலும், பிள்ளைகள் ஒன்றி இருப்பார்கள். எனவேதான், நமக்கு இருப்பது கூட்டணி உறவுல்ல; இது கொள்கை உறவு. அதுதான் மிக முக்கியம். எனவேதான், எப்போதும் இருக்கக்கூடியவர்கள், எப்போதும் ஒன்றாக இருக்கிறார்கள். இங்கே கவிஞர் அவர்கள் சிறப்பாகச் சொன்னார். அவர் செய்ததினுடைய அடையாளம்தான். கவிஞர் எல்லாம் பாடினார் – புரட்சிக் கவிஞர் பாடினார் – அவர் பாடினார் என்பது அல்ல; அண்ணா பேசினார் என்பதல்ல; அதைச் செய்கின்ற களத்திலே இருக்கக்கூடியவர்கள் வந்திருக்கிறார்கள். இது ஏதோ ஆட்சி வேடிக்கைக்காக என்பதற்கு அல்ல; கேளிக்கைக்காக என்பதற்கு அல்ல. அதிகார ஆணவம் இருக்கிறது என்பதற்காக நீங்கள் ஒருபோதும் ஆட்சி அமைத்துக் கொண்டதில்லை. ஆகவேதான், நெஞ்சத்தில் நீங்கள் நிலைத்திருக்கிறீர்கள். அது இருதயத்துக்குள்ளே இருக்கிறது என்பதை உங்களுக்கு உற்ற சிறப்பாக நினைத்துக் கொள்ள வேண்டும்.
புரட்சிக் கவிஞர் அவர்கள் மிக அழகாகச் சொன்னார்,
“சாதிமத பேதங்கள் மூட வழக்கங்கள்
தாங்கி நடைபெற்றுவரும் சண்டை யுலகிதனை
ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்; பின்னர்
ஒழித்திடுவோம் புதியதோர் உலகம் செய்வோம்”
என்று எவ்வளவு அழகாகச் சொன்னார்.
ஆகவே, பேதமிலா அறிவுடைய அவ்வுலகத்திற்கு ‘பேசு சுயமரியாதை உலகு’ என்று சொன்னார். சுயமரியாதை உலகு என்றாலும், அறிவுலகு என்றாலும் சிறப்பானதே!
‘‘இதேகாண் சமூகமே! முன்னேறு, முன்னேறு, முன்னேறு!’’ என்று சொல்லி, அவர்களை முன்னேற்றினார்கள். அதைத்தான் இந்த அறிவுலகத்தின் மூலம், ஆயிரம் ஆயிரம் சாதனைகளைக் குவிப்பதன் மூலமாக செய்து வந்திருக்கிறீர்கள்.
எந்தச் சாதனையையும் விட்டு வைத்ததில்லை அவர்!
எனவேதான், உங்களை எப்படிப் பாராட்டுவது? உங்களை ஆயிரக்கணக்கான இதயங்கள் இணைந்து பாராட்டுகின்ற, லட்சக்கணக்கான மக்கள், கோடிக் கணக்கான மக்கள் பாராட்டக்கூடிய ஓர் அற்புதமான சூழ்நிலை வந்திருக்கிறது. எனவேதான், அவர் செய்ததைத்தான், திறந்திருக்கிறார்கள். எதைச் செய்தாலும், அவர் போட்ட பாதையைத்தான் திறப்பார்கள். அவர் போட்ட திட்டமான பேருந்து நிலையத்தைத்தான் திறப்பார்கள். ஏனென்றால், அவர் எந்தச் சாதனையையும் விட்டு வைத்ததில்லை. ஆகவேதான், இவை அத்தனையும் பெருமிதத்தோடு இருக்கக்கூடிய உங்கள் வாழ்க்கையிலே சிறப்பாக இருக்கும்.
பெரியார் அறிவுலகத்தில் மொத்தம் 53 படி;
இவை அத்தனையும் அவருக்கு அத்துப்படி!
நண்பர்களே! மிக முக்கியமான அந்த நூலகத்திலே ஒரு சிறப்பான இடத்திற்கு அழைத்துப் போனார். அங்கே செல்வதற்கு நாங்கள் மின்தூக்கியில் போய்விட்டோம். திரும்பி வரும்போது படிக்கட்டில்தான் இறங்கி வந்தோம். அப்படி வரும்போது, அங்கே இருந்த பிள்ளைகள் எல்லாம் மகிழ்ச்சியோடு இருந்தார்கள்; மாணவச் செல்வங்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். அந்த அமைப்பு முறை இருக்கிறதே, ‘‘படி, படி, படி, படி, படி’’ என்று எத்தனை படிகள். நூலகத்துக்குள்ளே வருவதற்கு முன்பே ‘‘படி, படி, படி,’’ மொத்தம் 53 படி,நான் எண்ணிப் பார்த்தேன். எனவேதான், இவை அத்தனையும் அவருக்கு அத்துப்படி.
இந்தச் சூரியன் ஒருபோதும் மறையாது!
இவ்வளவு சிறப்பான ஒரு வாய்ப்பை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். எனவே, இந்தச் சூரியன் ஒருபோதும் மறையாது.
‘‘ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை!
ஆயிரம் பொய்கள் உரைத்து வந்தாலும், திராவிடம் அழிவதில்லை!’’
பிடித்த கரங்கள், என்றைக்கும் விழாத,
விடாத கரங்களாக இருக்கும்!
இதை நன்றாக நினைத்துப் பாருங்கள். எனவே, எங்கள் திராவிடத் தளபதியே! நீங்கள் ஆட்சியில் இருந்ததை விட, மீட்சிக்குச் செய்ய வேண்டிய பணிகள் அதிகம். எனவே, உங்கள் காலம் பொன்னானது; நிறுத்திக் கொள்கிறேன் – வாழ்த்துகிறேன்! மகிழ்ச்சி அடைகிறேன்! இந்தப் பிடித்த கரங்கள், என்றைக்கும் விழாத, விடாத கரங்களாக இருக்கும்.
உங்களை நாங்கள் பெருமையோடு தூக்கிச் சுமக்கிறோம். புதிய வரலாற்றை உருவாக்குங்கள்!
உங்களைத் தூக்கிச் சுமப்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம்; காரணம், நாங்கள் அமர்ந்திருப்பது சாதாரணமானத் தோள்கள் அல்ல; அண்ணா அமர்ந்திருப்பது, பெரியாரின் தோள்கள்; கலைஞர் அமர்ந்திருப்பது பெரியாரின் தோள்கள். நாங்கள் அமர்ந்திருப்பதும் பெரியாரின் தோள்கள். எங்கள் தோள்கள் மீது நீங்கள் இருக்கிறீர்கள்; உங்களை நாங்கள் பெருமையோடு தூக்கிச் சுமக்கிறோம். புதிய வரலாற்றை உருவாக்குங்கள்!
வாழ்க! வளர்க!
நன்றி! நன்றி!! நன்றி!!!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
