டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அய்.அய்.டி.களில் 75 சதவீதம் பணியிடங்களை உயர்ஜாதியினர் ஆக்கிரமிப்பு – இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு பெரும் அநீதி! 17 அய்அய்டிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களில் 71 சதவீதத்திற்கும் மேல் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினரிடம் இருந்து வந்தும், அவர்களுக்கான பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக உள்ளது; பல துறைகளில் எஸ்.டி. ஆசிரியர்களே இல்லை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “பாசிச சக்திகளுடன் விசுவாசமா? டில்லி பேரணியில் தவெக பங்கேற்காததற்கு திமுக கண்டனம் –!” வாக்குத் திருட்டு மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான இண்டியா கூட்டணியின் டில்லி பேரணியில் த.வெ.க. பங்கேற்காததை திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா விமர்சித்தார். ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளில் மவுனம் காப்பதன் மூலம் தவெக பாசிச சக்திகளுக்கு விசுவாசம் காட்டுவதாகவும், காங்கிரஸ் தனது சுயமரியாதையை இழந்து விட்டதா என்றும் கேள்வி எழுப்பினார்.
* அரசு அலுவலகங்கள், மதசார்பற்ற வளாகங்கள், மோடி அரசு வாக்குமூலம்: கிருஷி பவனில் உள்ள மசூதி அகற்றப்படும் – டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல். ஒன்றிய அரசு அலுவலக வளாகங்களில் நிரந்தர மத வழிபாட்டுக் கட்டமைப்புகளுக்கு இடமில்லை; அவை மதச்சார்பற்ற தன்மைக்கு முரணானவை என ஒன்றிய அரசு டில்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. கிருஷி பவன் மற்றும் மத்திய செயலகம் அரசு நிர்வாகப் பணிகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட மதச்சார்பற்ற வளாகங்கள் என்றும் கூறியது.
தி இந்து:
* “தேசவிரோதிகள்” என்ற குற்றச்சாட்டு – மோடிக்கு ராகுல் காந்தி மீண்டும் பகிரங்க விவாத சவால்! எதிர்க்கட்சிகள் தேசவிரோதிகள் என்பதை நிரூபிக்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இருந்தால், எந்த இடத்திலும் பகிரங்க விவாதத்திற்கு வரலாம் என ராகுல் காந்தி சவால் விடுத்தார். வெளிநாட்டு சக்திகளுடன் யாருக்கு தொடர்பு உள்ளது, அந்தத் தொடர்புகளின் தன்மை என்ன என்பதையும் விவாதிக்கத் தயார் எனக் கூறி, “பயப்படாதீர்கள்” எனத் தெரிவித்தார்.
* “குறுகிய மனப்பான்மை” – தியா மிர்சாவின் விழிப்புணர்வு காணொலி நீக்கப்பட்டதற்கு உயர் நீதிமன்றம் கண்டனம்! சுற்றுச்சூழலுக்கு உகந்த, பட்டாசு இல்லாத தீபாவளியை கொண்டாட வலியுறுத்திய நடிகை தியா மிர்சாவின் காணொலியை நீக்கிய மும்பை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மத அடிப்படையில் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததை விமர்சித்த நீதிமன்றம், அந்த விழிப்புணர்வுக் காணொலியை உடனடியாக மீண்டும் பதிவேற்ற உத்தரவிட்டது.
* நலத்திட்டப் பயன்கள் ஆதார் அடிப்படையில் அல்ல; வாக்காளர் அடையாள அட்டை அடிப்படையில் வழங்கப்படும் – ஒன்றிய அமைச்சர் தகவல். தற்போது ஆதார் அடிப்படையில் பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இனி பயனாளிகள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண் (EPIC) மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை வழங்க வேண்டும் என பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் தெரிவித்தார்.
தி டெலிகிராப்:
* நாங்களா தேசவிரோதிகள்”, “வெளிநாட்டு நிதியுதவி பெறுபவர்கள்”? வாங்சுக் எதிர்ப்பு: அருணாச்சலப் பிரதேச சியாங் அணை எதிர்ப்புப் போராட்டத்திற்கு சோனம் வாங்சுக் ஆதரவு – குடியரசுத் தலைவரிடம் தலையீடு கோரிக்கை. சியாங் பல்நோக்கு அணை திட்டத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் லடாக்கின் அரசியல் முடக்க நிலையைப் போன்றது என சோனம் வாங்சுக் தெரிவித்தார். எல்லைப் பகுதி மக்களை “தேசவிரோதிகள்”, “வெளிநாட்டு நிதியுதவி பெறுபவர்கள்” எனக் குற்றம்சாட்டுவது வருத்தமளிப்பதாக கூறி, குடியரசுத் தலைவர் முர்மூவின் தலையீட்டை கோரினார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* அருணாச்சல ஜனதா கட்சி தொடக்கம், அமித்ஷாவின் மற்றொரு நடவடிக்கை? “கட்சித் தாவுபவர்களின் புகலிடம்” – அருணாச்சல ஜனதா கட்சி உருவாக்கம் குறித்து அமித்ஷா மீது காங்கிரஸ் விமர்சனம். ஏற்கெனவே, திரிணாமூல் காங்கிரஸிலிருந்து கட்சி மாறியவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் வகையில், அறியப்படாத தேசியவாத குடிமக்கள் கட்சியை (NATIONALIST CITIZENS PARTY OF INDIA) அமித்ஷா மீண்டும் உயிர்ப்பித்ததை போன்றதே இந்த நடவடிக்கையும் என ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா
