நவம்பர் 4 – கோவை நமக்கு மட்டுமே உரியதாகட்டும்! வாரீர்! வாரீர்! கவிஞர் கலி. பூங்குன்றன்

3 Min Read
- Advertisement -

தோழர்களே,

ஒரு முக்கியமான தகவல்! வரும் 4ஆம் தேதி புதன்கிழமை கோவையில் நடக்கும் இரு விழாக்களைப் பற்றிய தகவல் அது.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா,  சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மானமிகு மு.க. ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா என்றால் சாதாரணமா?

அதிலும் குறிப்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் அந்த விழாவில்  பங்கு கொள்ள இருக்கின்றனர் என்றால் எத்தனை மடங்கு மகிழ்ச்சிக்குரிய மாபெரும் விழா அது என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

பாராட்டை நோக்கி பறந்து செல்லும் இயல்பு நமக்கு இல்லை.

சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் என்றால் சொல்லடியும், கல்லடியும் பட்டு வளர்ந்த இயக்கமாயிற்றே!

அதே நேரத்தில் தி.க., தி.மு.க. ஆகிய இயக்கங்களின்  சாதனைகள் என்பவை சரித்திரத் திருப்பங்களை உள்ளடக்கியவை.

என்றென்றும் நிலைத்து நிற்கும் வகையில் கல்வெட்டுச் சாசனங்களைப் பொறித்து வைக்க வேண்டியது நமது கடமையல்லவா!

தி.மு.க.வைப் பொறுத்தவரை – அது வெறும் அரசியல் கட்சியல்ல.

கவிஞர் கலி.பூங்குன்றன்

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் ஓர் உண்மையை அழுத்தமாகப் பதிவு செய்யத் தவறியதில்லை.

தி.மு.க. வெறும் அரசியல் கட்சியல்ல; சமுதாயக் கொள்கையை உயிரோட்டமாகக் கொண்ட அரசியல் கட்சி என்று மார்தட்டிப் பதிவு செய்து வந்திருக்கிறார்.

தி.மு.க. அரசியலில் நுழைந்து 1967இல் ஆட்சியில் அமர்ந்த காலமுதல், இதுவரை ஆற்றி வந்துள்ள செயல்பாடுகளை ஒரு கணம் எண்ணிப் பார்ப்போம்!

சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்டவடிவம், சென்னை மாநிலத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம், ஹிந்திக்கு இடமில்லை; தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் இடமுண்டு என்ற சட்டம், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரம், பெண்களுக்குச் சொத்துரிமை, பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள் என்று அறிவித்து உறுதிமொழி ஏற்கச் செய்தல், அண்ணல் அம்பேத்கர், வடலூர் அடிகளார் போன்ற சீர்திருத்தக் கொள்கையாளர்களை நினைவூட்டும் வகையில் அவர்களின் பிறந்த நாளை அரசு சார்பாக பதிவு செய்து போற்றச் செய்தல், பெண்ணுரிமைத் திசையில் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சர் காலை உணவுத் திட்டம், தோழி விடுதிகள், பெண் தொழில் முனைவோர் திட்டம்,  அரசுப் பணிகளில் 40 விழுக்காடு மகளிர்க்கு இடஒதுக்கீடு – இவை எல்லாம், வழக்கமாக எந்தக் கட்சி ஆட்சிக்குவந்தாலும் சிந்தனை ரீதியாக நினைத்துப் பார்க்க முடியாத – சமூக மாற்றத்திற்கான அரும் பெருந் திட்டங்கள்!   இவற்றை திராவிட இயக்கக் கொள்கை உடைய ஆட்சிகளால் தான் சிந்திக்கவும், செயல்படுத்தவும் முடியும்.

தந்தை பெரியார் பெயரில் ‘தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மய்யம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், காமராசர் அறிவுலகம், ‘முதல்வரின் படைப்பகம்’ மற்றும் நவீன கிளை நூலகங்கள் (கலைஞர் ஆட்சிக் காலத்தில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம்), திராவிட  நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் என்றென்றும் சுடர் வீசும் கருத்துக் கருவூலங்கள் இவை அல்லவா!

‘நூலகம் ஒன்றைத் திறப்பது – பல சிறைச் சாலைகளை மூடுவதற்குச் சமம்’ என்று அறிவுலகம் கூறும்.

அத்தகைய அரும் பெரும் வரலாற்றுக் கருவூலத்தை திறந்து வைத்த சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை உச்சி மோந்து பாராட்டுவது தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் கடமையல்லவா!

அத்தகைய நன்றி பாராட்டு விழா தான் வரும் 4ஆம் தேதி மாலை கோவையில் திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் நாடு போற்றும் திருவிழா!

தாய்க் கழகத்தின் தலைவரே பங்கேற்றுப் பாராட்டுகிறார் என்றால் அத்தகைய விழாவில் பங்கேற்காமல் வீட்டிலே நாம் முடங்கிக் கிடக்க முடியுமா?

மூடப் பண்டிகைகளை முற்றாகத் தூக்கி எறியும் நமக்கு இதுபோன்ற அறிவுத் திருவிழா தானே நாம் கொண்டாடும் கொள்கைத் திருவிழா!

கோவை குலுங்கட்டும் – சுற்றம் – நட்பு சூழ வாரீர்! வாரீர்!! ‘வங்கக்கடல் பெருக்கெடுத்ததோ’ என்று வியக்கும் வண்ணம் கூடிக் களிப்போம் – 4ஆம் தேதி என்பது கோவை நமக்கே என்று கூறும் நாளாக அைமயட்டும் அமையட்டும்!!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *