சென்னை, நவ.01 அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2026 முதல் 63 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து, ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.07.2026 முதல் அகவிலைப்படி 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் இதனைக் கனிவுடன் பரிசீலித்து, 01.07.2026 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.
கூடுதல் நிதி ஒதுக்கீடு
இதனால், 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 01.07.2026 முதல் 63 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 1,858 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
அரசின் இந்த நடவடிக்கை, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் எதிர்வரும் விழாக் காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு முகாம்
காஞ்சிபுரம், நவ.01 காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மய்ய கூட்டரங்கில் நடை பெற்ற விழிப்புணர்வு முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கே.ரா.திவ்யசிறீ தலைமை தாங்கினார்.
அக்டோபர் மாதம் உலகளவில் மார்பகப் புற்றுநோய் விழிப் புணர்வு மாதமாகக் கடைபி டிக்கப்படுகிறது. இதையொட்டி, தேசிய சுகாதார இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி, 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடம் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகை யில் ‘பிங்க் அக்டோபர் 2026 முகாம்கள் நடத்தப்பட்டு வரு கின்றன.
அதனடிப்படையில் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் இந்த முகாம் நடத்தப்பட் டது. முகாமில் பங்கேற்ற பெண்களுக்கு மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் மார்பகங்களைச் சுயமாகப் பரிசோதனை செய்து கொள்ளும் முறைகள் குறித்து விளக்கினர். தொடர்ந்து, ரத் தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் ஆகியவை பரிசோதிக்கப்பட்டன.
நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் மேம்மோகிராம் ஸ்கேன் பரிசோதனை மற்றும் கர்பப்பை பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசும்போது, பெண்கள் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வைப் பெறு வதுடன், சுய பரிசோதனை முறைகளைக் கற்றுக்கொண்டு மற்ற பெண்களுக்கும் விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆரம்ப நிலையிலேயே புற்று நோயைக் கண்டறிந்தால் உரிய சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்றார். மேலும், 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு கர்பப்பை வாய் புற்று நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாகச் செலுத்தப்படுகிறது. இதனை பெற்றோர் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்து வமனை இயக்குநர் சரவணன், மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில், மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் ரம்யா, வினிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
