அரசுப் பணியில் சேர வயது வரம்பு மேலும் 5 ஆண்டுகள் அதிகரிப்பு!

- Advertisement -

சென்னை, அக். 31- அரசுப் பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை, மேலும் 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், வயது வரம்பு முடியும் நிலையில் இருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (30.10.2026) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்சவரம்பைத் தற்போதைய விதிகளில் இருப்பதை விட 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வயது வரம்பு உயர்வானது, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, டிஎன்சி, எஸ்சி, எஸ்சி-அருந்ததியர், எஸ்டி, ஆதரவற்ற கணவனை இழந்தவர்கள்) ஏற்கெனவே உள்ள வயது சலுகைகளுடன் கூடுதலாக அமையும். குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உட்பட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் இந்த வயது வரம்பு உயர்வு பொருந்தும்.

குரூப்-1 தேர்வில் பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 32இல் இருந்து 37 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37இல் இருந்து 42 ஆகவும் உயரும். குரூப்-2, 2ஏ தேர்வில் பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 30இல் இருந்து 35 ஆக அதிகரிக்கும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஏற்கெனவே இருந்து வருவதைப் போல் வயது உச்ச வரம்பு இல்லை.

குரூப்-4 தேர்வில் பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 30இல் இருந்து 35 ஆக உயரும். இடஒதுக்கீட்டு பிரிவினரில் பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, டிஎன்சி வகுப்பினருக்கு 32இல் இருந்து 37 ஆக அதிகரிக்கும். எஸ்சி, எஸ்சி-அருந்ததியர், எஸ்டி வகுப்பினர் மற்றும் ஆதரவற்ற கணவனை இழந்தவர்களுக்கு 35இல் இருந்து 40 ஆகவும் உயரும். இடஒதுக்கீட்டுப் பிரிவினர் கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருந்தால் வயது வரம்பு கிடையாது.

மாற்றுத் திறனாளிகளுக்குத் தற்போதைய விதிமுறையின்படி, கூடுதலாக 10 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு. இந்த வயது உச்ச வரம்பு இந்த ஆண்டு அக்டோபர் 30 முதல் 5 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும். தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவு மூலம் வயது வரம்பு முடியும் நிலையில் இருக்கும் ஆயிரக்கணக்கான போட்டித் தேர்வர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கரோனா காலக்கட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படாததால் கடந்த 2021ஆம் ஆண்டு 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு சலுகை அளிக்கப்பட்டிருந்தது. அதுவும் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டு அதற்கான காலக்கெடு 2026 செப்டம்பர் 12ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

காலியிடங்களை நிரப்புவது குறித்து

அரசுப் பணியாளர்கள்

கோரிக்கை!

அரசுப் பணியில் சேருவதற் கான வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிக்கப் பட்டிருப்பதை அரசு ஊழியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன. அதே நேரத்தில் அரசு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் த.அமிர்தகுமார் கூறும்போது, ‘‘வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி இருப்பதை வரவேற்கிறோம். வயது வரம்பு விளிம்பில் இருப்பவர்களுக்கு இது பலன் அளிக்கும். இதனால் பெரிய அளவில் மாற்றம் வந்துவிடாது. அரசு துறைகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கின்றன. ஆனால், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலம் வெறும் 5 ஆயிரம், 10 ஆயிரம் என்ற அளவில்தான் காலி இடங்கள் நிரப்பப்படுகின்றன. அதிகப்படியான காலி இடங்களை நிரப்ப அரசு முன்வர வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன் கூறுகையில், ‘‘வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் அதிகரித்திருப்பதை வரவேற்கலாம். அதே நேரத்தில், அரசுத் துறைகளில் 5 லட்சம் காலிப் பணியிடங்கள் இருக்கும் போது அவற்றை நிரப்பாமல் வெறுமனே வயது வரம்பை அதிகரிப்பதால் என்ன பயன்? குரூப்-சி, குரூப்-டி பணி இடங்களை அவுட் சோர்சிங் முறையில் நியமிக்க அரசு முயற்சி செய்வது எந்த வகையில் நியாயம்?’’ என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *