கரூர், ஆக. 6- கரூர் அருகே தாயின் ‘அஸ்தி’ யைக் கரைக்கச் சென்றபோது, காவிரி ஆற்றில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.
கரூர் நரசிம்மபுரத்தைச் சேர்ந்தவர் குப்புசாமியின் மனைவி தேவகி. இவரது மகன்கள் சுரேஷ் (65), அருணன் (60). இருவரும் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்கள். வயது மூப்பு காரணமாக தேவகி அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது அஸ்தியை காவிரி ஆற்றில் கரைப்பதற்காக மகன்கள் சுரேஷ், அருணன் ஆகியோர் உறவினர்களுடன் கடந்த 4.8.2026 அன்று நெரூர் காவிரி ஆற்றுக்குச் சென்றனர்.
‘அஸ்தி’யைக் கரைத்துவிட்டு சுரேஷ், அருணன், உறவினர் சீனிவாசன் (64) உள்ளிட்ட 7 பேர் ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது, மூவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினர். இதைப் பார்த்த மற்றவர்கள் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு, தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வாங்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
