சென்னை, அக். 27– ‘நாள்தோறும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ தளப் பதிவில், ‘‘சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது. மதுரையில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான். காணாமல்போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இன்னும் தெரியாமலே இருக்கிறது.
அன்றாடம் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. சட்டம்-ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்?. சட்டம் – ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?” என தெரிவித் துள்ளார்.
உதயநிதி, கனிமொழி கண்டனம்
உதயநிதி ஸ்டாலின்: அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் மே 4ஆம் தேதிக்குப் பிறகு சட்டம் – ஒழுங்கு என்பது சாம்பிளுக்குக்கூட இல்லை. இன்றைய கொலைப் பட்டியல் என்று நாளிதழ்களில் தனி பகுதி போடும் அளவுக்கு தினந்தோறும் கொலைகள் எல்லை மீறி நடக்கின்றன.
சேலத்தில் ரவுடி டேவிட், சாத்தான் குளத்தில் ஒரு பெண், சிறீவைகுண்டத்தில் கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட தவெக பெண் நிர்வாகி ஒருவர், கணவனை கொன்றதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள ஒரே தொகுதியில் 40 இடங்களுக்குப் போய் டிராக்டர் ஓட்டி, டீ குடித்து, முருங்கை பறித்த முதலமைச்சர், சட்டம் – ஒழுங்கை காப்பாற்ற ஒரே ஒரு ஆய்வுக் கூட்டமாவது நடத்துவாரா? அவரது ஆசியோடுதான் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா?
கனிமொழி எம்.பி: மதுரை மேலூர் அருகே காணாமல் போன 7 வயது சிறுவன் பிணமாக மீட்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை.
‘விஜய் மாமா’ என்று அழைத்து உங்களுக்கு வாக்கு கேட்ட குழந்தை களுக்குக்கூட பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றால், காவல் துறையை முதலமைச்சர் கையில் வைத்திருந்து என்ன பயன்? இதேபோல் சிறீவைகுண்டம் அருகே கல்லூரி மாணவர் இசக்கி ராஜா வெட்டிக் கொல்லப்பட்ட நிகழ்வும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த வாரத்தில் மட்டும் 5 படுகொலைகளுக்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்திருக்கின் றன. எனவே, மக்களின் பாதுகாப்போடு விளையாடுவதை நிறுத்திவிட்டு, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
