சென்னை, அக். 27- ஒன்றிய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக ஆண்டு தோறும் என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும்.
அதன்படி, நடப்புக் கல்வி ஆண்டுக்கான தேர்வு டிச.12ஆம் தேதி நடத்தப்படும். இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு நேற்று (26.10.2026) தொடங்கியது.
விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் தேர்வுத் துறை இணையதளத்தில் (dge.tn.gov.in) இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
அதை பூர்த்தி செய்து, ரூ.50 தேர்வுக் கட்டணத்தைச் சேர்த்து, தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் நவ.3ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை ஏரிகளில்
குடிநீர் இருப்பு பத்து நாள்களில்
906 மில்லியன் கன அடி அதிகரிப்பு!
திருவள்ளூர், அக். 27- வடகிழக்கு பருவமழையால், சென்னைக் குடிநீர் ஏரிகளில் 10 நாட்களில் நீர் இருப்பு 906 மில்லியன் கனஅடி அதிகரித்துள்ளதாக நீர்வள ஆதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவ மழை காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து இருந்து வருகிறது.
இதனால் 5 ஏரிகளிலும் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது. நேற்று (26.10.2026) காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு விநாடிக்கு 210 கனஅடி, பூண்டி ஏரிக்கு 490 கனஅடி, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிக்கு 50 கனஅடி, சோழவரம் ஏரிக்கு 10 கனஅடி நீர் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
ஆகவே நேற்று காலை நிலவரப்படி, 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,415 மில்லியன் கனஅடி, 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 565 மில்லியன் கனஅடி, 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 253 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
அதேபோல் 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 144 மில்லியன் கனஅடி மற்றும் 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1,488 மில்லியன் கனஅடி என நீர் இருப்பு உள்ளது.
இதனால் 11,757 மில்லியன் கனஅடி மொத்தக் கொள்ளளவு கொண்ட சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில், கடந்த 15ஆம் தேதி காலை நிலவரப்படி 3,959 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. இது நேற்று காலை நிலவரப்படி 4,865 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது.
அதாவது 10 நாட்களில் மொத்த நீர் இருப்பு 906 மில்லியன் கனஅடி அதிகரித்துள்ளது என, நீர்வள ஆதாரத் துறையினர் கூறினர்.
அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகளின் பெற்றோர் சாலை மறியல்!
மருத்துவ உதவிக்காக
தனி நிதியம் உருவாக்கக் கோரிக்கை!
சென்னை, அக். 27- அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகளின் பெற்றோர் நேற்று (26.10.2026) சென்னை வாலாஜா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மரபணு மாற்றம் காரணமாக குழந்தைகளுக்கு முதுகுத் தண்டுவட தசைச் சிதைவு என்ற தீவிரமான மரபணு நோய் ஏற்படுகிறது.
இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தசைகள் மற்றும் நரம்புகள் படிப்படியாக வலுவிழக்கும். இதை குணப்படுத்தும் மருந்து அமெரிக்காவில் உள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ.16 கோடி எனவும் கூறப்படுகிறது.
இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் பெற்றோர் தங்களின் சொந்த முயற்சி, தொண்டு நிறுவனங்களின் ஆதரவு மற்றும் திரள்நிதி வாயிலாக ரூ.16 கோடி மருந்தை பெற முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் நேற்று சென்னை வாலாஜா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் சமாதானம் செய்து, அதிகாரிகளிடம் பேச அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் கூறியதாவது: இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 2 வயதுக்குள் மருந்து செலுத்த வேண்டும். சிகிச்சைக்கு தாமதம் ஏற்பட்டால் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரை சந்தித்து மனு அளித்துள்ளோம். அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்த போது அரசால் மருந்தின் செலவை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர்.
சுகாதார அமைச்சர் அருண்ராஜை 3 மாதங்களாக சந்திக்க முயன்றோம். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. இந்த நோய்க்கான மருந்து செலவுக்காக தனி நிதியத்தை அரசு உருவாக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
