புதுடில்லி அக். 27- பெட்ரோல், டீசல் எரிபொருள் இறக்குமதி செலவைக் குறைக்க நாடு முழுவதும் பரவலாக எத்தனால் கலந்த இ–-20 பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 20 சதவீதம் எத்தனாலும், 80 சதவீதம் பெட்ரோலும் கலக்கப்பட்டிருக்கும். இதைத் தொடர்ந்து, 100 சதவீதம் தூய எத்தனால் எரிபொருளை புழக்கத்திற்கு கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக இ–-100 எரிபொருளில் இயங்கும் வாகனங்களை கார் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. அத்தகைய கார்கள் ‘பிளக்ஸ் ப்யூயல் கார்கள்’ என அழைக்கப்படுகிறது. இந்நிலையில், ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன விதிகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
இதன்படி இ-100 தூய எத்தனால் எரிபொருளில் இயக்கக் கூடிய பிளக்ஸ் பியூயல் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இ-20-க்கு மேல் மற்றும் இ-100 வரையிலான எரிபொருட்களை, அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு சான்றளிக்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். மற்ற வாகனங்களுக்கு இது பொருந்தாது. இ20 அல்லது சாதாரண எரிபொருளில் இயங்கும் வாகனங்களில் இ-85 அல்லது இ-100 எரிபொருளைப் பயன்படுத்த முடியாது’’ என்றார்.
