ஜப்பானில் பெரியார் பன்னாட்டு மனிதநேய மாநாடு-வி.சி.வில்வம்

4 Min Read
- Advertisement -

அனைவருக்குமான தலைவர் பெரியார்!

ஜப்பான் மாநாட்டை நடத்தியவர்கள் நேரடியாகக் கடவுள் மறுப்புச் சிந்தனையாளர்கள் மட்டுமல்ல! இனவுணர்வு, மொழியுணர்வு, இடஒதுக்கீடு, சமத்துவம், சுயமரியாதை எனத் தனித்தனி உணர்வுகளைக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் நெற்றியில் திருநீறு இருந்திருக்கலாம், கையில் கயிறு கட்டியிருக்கலாம், அவையெல்லாம் பிரச்சினையில்லை. எனினும் ஏதோ ஒரு வகையில் தந்தை பெரியார் தங்களுக்கு உதவி இருக்கலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். கடவுளும், மதமும், ஜாதியும் கவலைப்படாத தம் முன்னேற்றத்திற்கு, திராவிட கொள்கைகள் உதவியதாக அவர்கள் கருதலாம். இதைப் பிரித்துப் பார்க்கும் பகுத்தறிவுச் சிந்தனை இல்லாததால் தான், ஆன்மிகவாதிகளுக்குப் பெரியார் எப்படித் தலைவராக இருக்க முடியும்? மதத்தை ஏற்றுக் கொண்டவர்கள், எப்படி பெரியாரையும் ஏற்றுக் கொள்கிறார்கள்? எனப் புரியாமல் தவிக்கிறார்கள்.‌

சிறப்புக் கட்டுரை, திராவிடர் கழகம்

உலகம் முழுவதும் தமிழ் இளைஞர்கள் பொதுச் சேவைகளில் ஈடுபடுகிறார் கள்.‌ அவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது, பணமும் செலவழிக்கிறார்கள். ஆனால்  நோக்கம் என்ன என்பதில் தான் வேறுபாடுகள் இருக்கிறது. பலர் திரைத்துறை சார்ந்தும், பட்டிமன்றம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் மூலமும் விழா எடுக்கிறார்கள். மிகச் சிலரே கல்வி, தமிழின உயர்வு, மேம்பட்ட மனித வாழ்வு எனும் பார்வையில் சமூகக் கடமையாற்றுகிறார்கள். சென்ற தலைமுறையில் சிலர் இப்படி செயல்பட்டதால் தான் இன்றைக்கு ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நார்வே என உலகம் முழுவதும் தமிழர்கள் பெருமைமிகு வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.‌

தமிழ், ஆங்கிலத்தில்
உருவாகும் மலர்!

அந்த வகையில், தங்களுக்குக் கிடைத்த மனித வளத்தைக் கொண்டு, உலகம் முழுவதும் உள்ள அறிஞர் பெருமக்களை அழைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதநேய மாநாட்டை ஜப்பான் தோழர்கள் நடத்தியுள்ளனர். இம்மாநாட்டின் தொடக்கமாகவும், மய்யப் புள்ளியாகவும் இருந்தவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்! சற்று உடல்நலக் குறைவு காரணமாக அவர்களால் மாநாட்டில் கலந்து கொள்ள இயலவில்லை என்றாலும், ஜப்பான் தோழர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 18.10.2026 அன்று உடனடியாகக் காணொலிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு நாள் மாநாட்டையும் தம் வீட்டில் இருந்தவாறே கவனித்த ஆசிரியர், மிகச் சிறந்த எண்ணத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்கள். அதுமட்டுமின்றி ஜப்பான் மாநாடு தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் சிறப்பு மலராக வெளிவர வேண்டும் என்றும், தோழர்களின் உழைப்பு ஆவணப்படுத்தப்பட வேண்டும்  என்றும் கூறியிருக்கிறார்கள்.

மாநாடு முடிந்து தோழர்களுக்குச் சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மூன்றரை நாட்கள் இந்தச் சுற்றுப் பயணம் அமைந்தது. ஒடைபா (Odaiba), டீம்-லேப்ஸ் (Teamlabs), ஊமீஹோடாரூ (Umihotaru), மினாடோமிரை (Minatomirai), ஹக்கோனே (Hakone), மவுண்ட் ஃபுஜி (Mt.Fuji), ஸ்கைட்ரீ (Skytree), டோக்கியோவின் (Tokyo) பல இடங்களுக்கும் மற்றும் பூங்காவிற்கும் சென்று வந்தனர். இதுதவிர ஜப்பானின் “புல்லட்” ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்தார்கள். இறுதி நாளில் குறைவான மற்றும் கூடுதல் விலைகளில் பொருட்கள் வாங்கும் வகையில் (Purchase) கடைகளுக்கு அழைத்துச் சென்றனர். நிறைவான பயணமாகத் தோழர்களுக்கு இது அமைந்துவிட்டது!

தோள் கொடுத்த தோழர்கள்!

இந்த மாநாடு சிறக்க தத்தம் துறைகளில் இருந்து பல்வேறு நண்பர்களும் ஒத்துழைப்பு நல்கி இருக்கிறார்கள். வணிக அடிப்படையில் மட்டுமின்றி, கூடுதல் முனைப்புடன் ஒரு வாரமும் தனது பங்களிப்பைச் செய்தவர் சிறீபாலாஜி தென்னிந்திய உணவக உரிமையாளர் கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு குறிஞ்சிசெல்வன். தமிழ்நாட்டில் இருந்து சென்ற 30 தோழர்களுக்கும் மூன்று நாட்கள் மதிய உணவு, அவரின் மூன்று வெவ்வேறு கிளைகளில் இருந்து வழங்கப்பட்டன. நேரடியாக அவர்கள் உணவகத்திற்கே செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை என, அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டார் குறிஞ்சி செல்வன். இதுதவிர மாநாடு முடிந்த ஒரு இரவில் வெளியில் சென்று உணவருந்த இயலாத சூழலில் பிரியாணி, சப்பாத்தி எனத் தனித்தனியாகப் “பார்சல்” செய்து கொடுத்ததோடு, தமிழ்நாடு திரும்பிய கடைசி நாளின் மாலையிலும் சிற்றுண்டி ஏற்பாடு செய்து மனநிறைவை உண்டாக்கினார். சற்றொப்ப 18 ஆண்டுகளுக்கு மேலாக உணவகம் நடத்தி வரும் குறிஞ்சிசெல்வன், ஜப்பான் தமிழர்களுக்கும், அவர்கள் நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் உறுதுணையாய் இருப்பவர். மட்டுமின்றி ஜப்பானில் ஏற்படும் இயற்கைச் சீற்றங்கள் மற்றும் தேவையான சூழல்களில் பொதுக் காரியங்களில் ஈடுபடுவதோடு, உணவு மற்றும் பொருள் உதவியும் செய்து வருகிறார்.

சிறப்புக் கட்டுரை, திராவிடர் கழகம்

ஜப்பானியர் பார்வையில் பெரியார்!

பெரியாரின் வாழ்க்கைக் குறிப்புகள் மற்றும் வைக்கம் போராட்டம் ஆகிய இரண்டு நூல்களையும் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தவர்கள்

தோழர்கள் ரா.செந்தில்குமார், ச.கமலக்கண்ணன். மேலும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜப்பானிய ஆசிரியர் “யுதகா நகானோ” எனும் ஜப்பானியரிடம் கொடுத்து வாசிக்கக் கூறியுள்ளனர். இரண்டு நூல்களையும் படித்த அவர், “இப்படி ஒரு மனிதர் இந்தியாவில் இருந்துள்ளாரா? தனி மனிதராக இவ்வளவு செயல்கள் செய்தது வியப்பாக இருக்கிறது. அவரால் விளைந்த சமூக மாற்றமும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியதோடு,  மிகச் சிறந்த தலைவர் உங்களுக்குக் கிடைத்துள்ளார்”, என்றும்  பாராட்டியுள்ளார்.

சிறப்புக் கட்டுரை, திராவிடர் கழகம்

ஆக தந்தை பெரியார் அவர்கள் தமிழர்களுக்கான தலைவர் மட்டுமல்ல; உலகம் முழுவதும் பாதிக்கப்படும் மக்களுக்கான தலைவர். ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்த மாநாடுகளில் தமிழர்கள் மட்டும் பங்கேற்கவில்லை. பல நாடுகளைச் சேர்ந்த, பல மொழிகளைச் சார்ந்த அறிஞர் பெருமக்கள் பங்கேற்றனர். தந்தை பெரியாரை உலகத் தலைவர் என்று அழைப்பது மிகையல்ல; அதற்கு மேலும் ஒரு மகுடம் சூட்டியிருக்கிறது ஜப்பான் நாடு! தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெரியாரை உலகமயமாக்க வேண்டுமென 1990 முதலே கூறி வருகிறார். தொடக்கத்தில் இது வேடிக்கையாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் அய்ந்து நாடுகளில் மாநாடுகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதுதவிர ஆண்டு முழுவதும் உலகின் பல நாடுகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. இந்த உலகத்தை, இந்த மக்களைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் சூழல்கள் பல இருந்தாலும், தந்தை பெரியாரை மையப்படுத்தி மனித வளத்தை, மனிதநேயத்தைக் காப்பாற்றும் இளைஞர்களும் உலகம் முழுவதும் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். நன்றி!

(நிறைவு)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *