சென்னை, அக். 26- நீதித்துறை 95 சதவீதம் செயற்கை நுண்ணறிவு கையில் போய்விட்டது என்று உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பரபரப்பாக பேசினார்.
ஒரு மனதாக தேர்வு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் 23 உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் அண்மையில் நடந்தது. இதில், பி.எஸ்.அமல்ராஜ், செஞ்சி கே.கதிரவன், இ.பாலமுருகன் உள்பட 23 வழக்குரைஞர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாநில பார் கவுன்சிலுக்கு நியமன பெண் உறுப்பினர்களாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.எம்.வேலுமணி, வழக்குரைஞர் சுதர்சனா சுந்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த 25 உறுப்பினர்களில், செஞ்சி கே.கதிரவன் தலைவராகவும், இ.பாலமுருகன் துணைத் தலைவராகவும், பி.எஸ்.அமல்ராஜ் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராகவும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களது பதவி ஏற்பு விழா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று (25.10.2026) மாலை நடந்தது.
மிகப் பெரிய சவால்
உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் இவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, மூத்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அனிதா சுமந்த், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஜான் சத்யன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும்போது, “நாடு முழுவதும் சுமார் 4 கோடி வழக்குகள் தேங்கியுள்ளன என்று புள்ளிவிவரம் கூறுகின்றன. நீதித்துறை 95 சதவீதம் செயற்கை நுண்ணறிவு கையில் போய்விட்டது. நீதித்துறைக்கு செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய சவாலாக உள்ளது. முன்பு உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளை படித்து வழக்குரைஞர்கள் மனதில் பதிய வைத்த காலம் போய், கணினியைத் தட்டினால் அனைத்து தீர்ப்புகள் கொடுப்பது மட்டுமல்ல, வழக்கு ஆவணங்களைத் தயாரித்துக் கொடுக்கும் அளவுக்கு செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது. இதைவிட ஒருபடி மேலாக, வழக்கை விசாரிக்கும் நீதிபதி எப்படி, என்ன தீர்ப்பு வழங்குவார்? என்பதை யும் முன்கூட்டியே தருகிறது. எனவே, இதை எப்படி எதிர்கொள்வது என்பதை சிந்தித்து வழக்குரைஞர்கள் அதில் வெற்றி பெறவேண்டும்” என்றார்.
திறமையை பார்க்க வேண்டும்
இந்த நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, “முதல் தலைமுறை வழக்குரைஞர்களை களை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும். விவசாயி, கூலித் தொழிலாளியின் வாரிசுகள் என்று பார்க்காமல், வழக்குரைஞர் தொழிலில் அவர்களது திறமையை பார்க்கவேண்டும்” என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் நீதிபதி அனிதா சுமந்த், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பி.எஸ்.அமல்ராஜ் ஆகியோரும் பேசினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் பார் கவுன்சில் தலைவர் செஞ்சி கே.கதிரவன் வரவேற்றார். துணைத் தலைவர் இ.பாலமுருகன் நன்றியுரை ஆற்றினார்.
