சென்னை, செப்.19- தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்த நாள் 17.9.2026 அன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில் பெரியார் படத்துக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய், மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் முதலமைச்சர் தலைமையில் சட்டப் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள், தலைமைச் செயலர் சாய்குமார், அரசு துறைச் செயலர்கள், காவல் துறை மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு அரசு சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் பிரபாகர், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வெங்கடரமணன், ராஜ்மோகன், வன்னி அரசு, மரிய வில்சன், குமார் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
“சுயமரியாதை, சமூகநீதி, பகுத்தறிவு நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்து, ஜாதி, மத வேறுபாடுகளைக் களையவும், மக்களின் உரிமைகளை மீட்கவும் வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகள், கொள்கைகளை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்தநாள்: முதலமைச்சர் ஜோசப் விஜய் மரியாதை! தலைமைச் செயலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!
Leave a Comment
