சென்னை, அக். 26- நாட்டின் மின் தேவையை முன்கூட்டியே கணிப்பதிலும், மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தைத் திட்டமிடுவதிலும் ஒன்றிய அரசு முழுமையாகத் தவறிவிட்டதாகத் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது ‘எக்ஸ்’ (ட்விட்டர்) தளப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46.09 என்ற மிக அதிக விலைக்குக் கொள்முதல் செய்யப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி, நாடு தழுவிய அளவிலான மின் தேவை கணிப்பு மற்றும் மின்சார வளங்களைத் திட்டமிடுதல் ஆகியவற்றின் லட்சணத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
தேசிய அளவிலான மின் தேவை மற்றும் உற்பத்தி வளங்களின் தற்போதைய நிலை குறித்து, ஒன்றிய மின்சாரத் துறை அமைப்புகளிடம் உள்ள அளவிலான தகவல்கள் மாநில அரசுகளிடம் இல்லை. மின் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே இத்தகைய மிகப்பெரிய இடைவெளி ஏன் ஏற்பட்டது என்பதையும், திட்டமிடுவதில் நிகழ்ந்த குறைபாடுகளையும் ஒன்றிய மின்சாரத் துறை அமைச்சகம் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
எதிர்காலத்தில் மாநிலங்கள் இதுபோன்று மிக அதிக விலை கொடுத்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்யும் நிலையைத் தவிர்க்க வேண்டும். அதற்கு, நாடு முழுவதுமான மின் தேவையைத் துல்லியமாகக் கணித்து, சீரான விநியோகத்தைத் திட்டமிட மாநில அரசுகளுடன் ஒன்றிய மின்துறை அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வலியுறுத்தியுள்ளார்.
