பாரிஸ், அக். 25- பிரான்சில் பள்ளிகளில் மோசமான அடிப்படை வசதி மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகளுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வன்முறை வெடித்தது. பாரிஸ் மற்றும் பிற நகர மய்யங்களில் உள்ள வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்றும் (24.10.2026) மாணவர்கள், தொழிலாளர்கள் சார்பில் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. சுமார் 70ஆயிரம் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். பாஸ்டில் இருந்து பேரணி திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் காவல்துறையினர் போர்ட் டி இத்தாலி மற்றும் போர்ட் டி வின்சென்ஸ் இடையே பேரணி நடத்த புதிய பாதைக்கு அனுமதி அளித்திருந்தனர். பாரிஸ் மற்றும் மார்சேய் நகரங்களில் போராட்ட பேரணிக்கு திட்டமிடப்பட்டு இருந்தாலும், லியோன், நைஸ் மற்றும் மான்ட்பெல்லியர் உள்ளிட்ட பிற நகரங்களில் போராட்டங்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் தடை விதித்தனர்.
பேரணியையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லூவர், ஓர்சே அருங்காட்சியகம், பிக்காசோ அருங்காட்சியகம் மற்றும் கிராண்ட் பேலஸ் உள்ளிட்ட முக்கிய அருங்காட்சியகங்கள் மூடப்பட்டு இருந்தன. இந்த சூழலில் திட்டமிட்டபடி நேற்று நாடு முழுவதும் மாணவர்களின் பேரணி, போராட்டங்கள் நடந்தன. அதில் ‘நாங்கள் வெறுத்து விட்டோம், அதிபர் மேக்ரான் பதவி விலக வேண்டும்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பேனர்களை மாணவர்கள் ஏந்திச் சென்றனர். பாரிசில் நகரின் தென்கிழக்கு முனையிலயே போராட்டங்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி நகரின் மய்யப்பகுதிக்குள் நுழைவதை தடுத்து பலரை கைது செய்தனர்.
1.10 லட்சம் பேர் பங்கேற்பு
பேரணியில் மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் பங்கேற்றதாக பிரான்ஸ் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிக்குள் பேரணி செல்ல முயன்றதால் பல இடங்களில் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.
