மலைவாழ் மக்களுக்கான முதல் மருத்துவ முகாமினை
தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., – லட்சுமணன் – மேனாள் எம்.எல்.ஏ., பங்கேற்பு
தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., – லட்சுமணன் – மேனாள் எம்.எல்.ஏ., பங்கேற்பு
குரங்கனி, அக்.25–- ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அடித்தட்டு மக்களின் நலனையும், அவர்களின் முன்னேற்றத்தையும் குறிக்கோளாய், திராவிடர் இயக்கத்தின் பண்பட்ட கொள்கைகளோடு சற்றொப்ப ஒரு நூற்றாண்டு காலமாய் வெற்றித் தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல், தடைபடாமல் செயல்பட்டுவரும் அரசியல் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
ஆட்சி, அதிகாரத்தில் வீற்றிருந்த போதும், எண்ணற்ற மருத்துவ நலன் சார்ந்த முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி, அய்.நா. போன்ற மிக உயர்ந்த அமைப்புகளால் பாராட்டப் பட்டு, நாட்டிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே முன்மாதிரியாக நின்றது தி.மு.க. தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்.
மேனாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 5ஆம் நாள் கிருஷ்ணகிரி மாவட்டம், சாமணப்பள்ளியில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டதுதான் மக்களைத் தேடி மருத்துவத் திட்டம், மருத்துவ சேவையை மக்களிருக்கும் இல்லங்களுக்கேத் தேடி சென்று அவர்களின் உடலில் உள்ள நோய்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு, ஏழை, எளிய மக்களின் நலனில் மிகப்பெரிய அக்கறையும், பொறுப்பும் கொண்ட ஒரு முன்மாதிரியான அரசாக செயல்பட்டது. அதில் மருத்துவமே கிடைக்கப்பெறாத மலைவாழ் மக்களின் வாழ்வில் மருத்துவத்திற்காக ஒரு புது வெளிச்சம் பாய்ச்சப்பட்டது என்றால் அதில் மிகையில்லை.
குறிஞ்சி நலம்
தற்போது மேனாள் மருத்துவத் துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியனின் சிறப்பான முயற்சியால் மலைவாழ் மக்களுக்கு மருத்துவச் சேவையை தொடர்ந்து வழங்குவதற்காக “குறிஞ்சி நலம்” என்ற தன்னார்வ மருத்துவத் தொண்டு நிறுவனத்தை கடந்த வாரம் தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த மருத்துவத் தொண்டின் முதல் நிகழ்வு இன்று (25-10-2026) தேனி மாவட்டம், குரங்கனி மலைப்பகுதியில் இந்த மலைபகுதியில் வசிக்கும் மக்கள் பயனடையும் வகையில் மலைவாழ் மக்களைத்தேடி சிறப்பு மருத்துவர்களின் மாபெரும் அணிவகுப்பு எனும் பொருளில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்மருத்துவ முகாமில் பல்துறைகளைச் சேர்ந்த அதாவது, பொது மருத்துவம், சிறப்பு அறுவை சிகிச்சை, உடற்பயிற்சி (யோகா) மற்றும் இயற்கை மருத்துவம், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பிறவிசார் இதயக் கட்டமைப்பு, குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவம், முதுநிலை மகளிர் மகப்பேறு மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், நரம்பியல் மருத்துவம், நுரையீரல் சிறப்பு மருத்துவம், எலும்பு முறிவு சிறப்பு மருத்துவம், மூத்த குழந்தைகள் நல மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம் மற்றும் தோல் மருத்துவம் சேர்ந்த மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று இந்த மலைப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் தங்களுக்கான மருத்துவத்தை தாங்கள் வசிக்கும் மலைப் பகுதியிலேயே பெற்றது மிகுந்த மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தி மிகப்பெரிய அளவுக்கு மருத்துவப் பயனை பெற்றனர் என்று இம்மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் தெரிவித்தனர். இது போன்ற மக்கள் நலன் பயக்கும் பணிகளை இடைவிடாது மேற்கொள்ளும் மேனாள் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு நன்றித் தெரிவித்து இலவசமாக மருந்து, மாத்திரைகளை பெற்றுச்சென்றனர்.
