இந்நாள் – அந்நாள்

- Advertisement -

‘லட்சிய நடிகர்’ எஸ்.எஸ். ராஜேந்திரன் நினைவு நாள் இன்று (24-10-2014)

 

அறிஞர் அண்ணா போல் எம்.ஜி.ஆர். போல் ராஜேந்திரனும் எஸ்.எஸ்.ஆர். என்னும் மூன்றெழுத்துகளால்தான் அதிகமும் அறியப்பட்டார். பசும்பொன் முத்துராமலிங்கத்தால் பெயர் சூட்டப்பட்ட எஸ்.எஸ்.ஆரும் முன்னிருவரைப் போலவே கலை, அரசியல் இரண்டையும் தனது மூச்சாகக் கொண்டவர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சிறிய கிராமம் சேடப்பட்டி. அந்த ஊரைச் சேர்ந்தவர் கல்வித் துறையில் பணியாற்றிய சூரிய நாராயணன். 1928, ஜனவரி 1 அன்று அவருக்கும் ஆதி லட்சுமிக்கும் மகனாகப் பிறந்து தன் யதார்த்தமான நடிப்பால் தமிழ்நாடு மக்களின் மனங்களைத் தன்பால் ஈர்த்த கலைஞர் ஆவார்.

பச்சைப் பாலகனாக இருந்தபோதும் அவரது கணீர்க் குரலும், கன்னத்துக் குழியும், கச்சிதமான தமிழ்ப் பேச்சும், கலையார்வமும் கண்டவரைக் கவர்ந்திழுத்தன. எஸ்.எஸ்.ஆரின் அத்தனை திறமைகளையும் கண்டுகொண்ட அவரது பள்ளி ஆசிரியரான வார்டன் வாத்தியார் எஸ்.எஸ்.ஆர். நடிகராகலாம் என்னும் உத்வேகத்தைத் தந்துள்ளார். அதன் விளைவால் எஸ்.எஸ்.ஆர். படிப்பிலிருந்து விலகி நடிப்புக்கான பாதையில் பயணித்தார்.

தொடக்கத்தில் தர்பாரில் தடிபிடித்து நின்று கூட்டத்தில் ஒருவராக இருந்த அவர், தன் ஆர்வத்தாலும் திறமையாலும் படிப்படியாக நாடகக் குழுவின் முன்வரிசைக்கு வந்தார். எஸ்.எஸ்.ஆரின் நடிப்புலக ஆசான் அவ்வை சண்முகமே தனிப்பட்ட முறையில் பாராட்டும் அளவுக்கு உயர்ந்தார். ஒரு நாடகத்தில் அவரது நடிப்பைப் பார்த்து, அவருடைய தந்தையும் பாராட்டினார் – பிறகு பிறகென்ன எஸ்.எஸ்.ஆரின் ஒரே மனத்தடையும் அகன்றுவிட்டது.

ஈரோட்டில் 19.11.1943 அன்று ‘சந்திரோதயம்’ நாடகம் நடத்த வந்த அண்ணாவுடன் எஸ்.எஸ்.ஆருக்கு ஏற்பட்ட பரிச்சயம் அவரது அரசியல் வாழ்வுக்கு அஸ்திவாரமிட்டுள்ளது. மனம் சோர்வடைந்த காலங்களில் புத்துணர்ச்சி பெற எஸ்.எஸ்.ஆர் விரும்பினாரென்றால் அவர் சென்றது காஞ்சிக்குத் தான். அண்ணாவைப் பார்த்து அளவளாவி வந்தால், தனது துயரமெல்லாம் தூசாய்ப் பறந்துவிடும் என்ற நம்பிக்கை எஸ்.எஸ்.ஆருக்கு இருந்துள்ளது.

தமிழ்த் திரையில் யதார்த்தமாக நடித்த ரெங்காராவ், டி.எஸ்.பாலையா, எம்.ஆர். ராதா வரிசையில் தனக்கும் இடம் ஏற்படுத்திக்கொண்டார். எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட பிரதான நடிகர்கள் அனைவருடனும் நடித்தார். திரைப் படங்களில் பல்வேறு குணச்சித்திரப் பாத்திரங்களையும் ஏற்று நடித்திருந்த எஸ்.எஸ்.ஆர். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் திராவிடக் கொள்கைகளில் கொண்டிருந்த தீவிரப் பிடிப்பால் புராணப் படங்களில் நடிக்க மறுத்துவிட்டார். அதன் காரணமாக லட்சிய நடிகர் என்னும் அடையாளப் பெயர் அவருடன் நிலைத்துவிட்டது .

தேனி சட்டமன்றத் தொகுதியில் 1962 ஆம் ஆண்டு போட்டியிட்டு அதே வேட்பாளரை 12,794 வாக்குகள் வித்தியா சத்தில் வென்று சட்டமன்றத்தில் நுழைந்தார்.

அரசியலிலோ திரைத் துறையிலோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவராக இல்லாத போதும் எஸ்.எஸ்.ஆர். தனக்கான பாதையைத் தானே வகுத்துக்கொண்டு அதில் திறம்படச் செயல்பட்டவர். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பல பரிமாணங்களை எடுத்திருந்தார் எஸ்.எஸ்.ஆர்.

2014 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் நாளில் தமது 86 ஆவது வயதில் மறைவுற்றார் எஸ்.எஸ்.ராஜேந்திரன். திராவிடக் கலைஞர்களில் தனித்துவம் பெற்றிருந்த அவரை இந்நாளில் நினைவு கூர்வோம்!

‘உலக போலியோ ஒழிப்பு நாள்’ இன்று (24.10.2026)

 

இந்நாள் - அந்நாள்

 

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24 ஆம் தேதி உலக போலியோ ஒழிப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நாளில் போலியோ சொட்டு மருந்தின் முக்கியத் துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. போலியோவை ஒழிக்க உலகம் முழுவதும் போலி யோவுக்கு எதிரான பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன. ரோட்டரி இன்டர்நேஷனல் நிறுவனத்தால் இந்த நாள் தொடங்கப்பட்டது.

போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோய்க்கு தடுப்பூசியை கண்டுபிடித்த முதல் குழுவை டாக்டர் ஜோனாஸ் சால்க் வழிநடத்தினார். இந்த குழுவினரால் 1955 இல் போலியோவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அது வெற்றிகரமாக செயல்பட்டதாக அறிவிக்கப்பட்டது. முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசி பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதாலும், போலியோ தடுப்பூசி போடுவதனால் கடுமையான காய்ச்சல் வருவதாலும் அதற்கு மாற்று மருந்து கண்டு பிடிக்கப்பட வேண்டும் என்று கடுமையாக ஆராய்ச்சி செய்து ஆல்பர்ட் ப்ரூஸ் சாபின், வாய்வழியாக சொட்டுமருந்து போடப்படும் முறையை கண்டுபிடித்தார்.

உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் போலியோவை அகற்றும் பணியை 1988 ஆம் ஆண்டில் உலக சுகாதார மன்றம் தொடங்கியது. இந்தப் பணியின் மூலம், போலியோ நோயிலிருந்து பாதுகாக்க அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்து வழங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக உலக போலியோ ஒழிப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இளம்பிள்ளை வாத நோயை ஏற்படுத்தும் போலியோ வைரஸ் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. முதுகுத் தண்டின் நரம்புகளை போலியோ வைரஸ் பாதிக்கிறது. இதனால் பக்கவாதம் அல்லது மரணம் கூட ஏற்படலாம். போலியோ வைரஸ் முதலில் தொண்டையையும் பின்னர் குடலையும் பாதிக்கிறது. இதன் காரணமாக, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. அதற்குப் பிறகு, மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தை தொற்று பாதிக்கிறது. இந்த தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது.

நோய் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்

தெண்டை வலி, காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்பேக்கு, சேர்வு, கழுத்து மற்றும் முதுகு வலி, தசை வலி, கால்கள் அல்லது கைகளை நகர்த்துவதில் சிக்கல் போன்றவை போலியோ பாதிப்பின் அறிகுறிகளாகும். உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.

கழிப்பறைக்குச் சென்ற பிறகு கைகளை சரியாகக் கழுவாமல் இருப்பது, சுகாதாரமற்ற நீரைக் குடிப்பது அல்லது அந்த நீரில் சமையல் செய்வது, அழுக்கு நீரில் நீந்துவது, ஆரோக்கியமற்ற உணவு, போலியோ தொற்றினால் பாதிக்கப்பட்ட நபரின் உமிழ்நீர் போன்றவற்றால் தொற்று பரவுகிறது.

போலியோவை தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசிதான். இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. தொடர்ந்து இப்பணியை செயல்படுத்துவதாலும், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்வதாலும் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப் பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் போலியோ இல்லாத நாடாக இந்தியா திகழ்கிறது.

இதேபோல் பல்வேறு நாடுகளில் போலியோ நோய் முழுவதுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒருசில ஆண்டுகளில் உலக அளவில் போலியோ நோய் அறவே ஒழியக்கூடியதாக உள்ளது.

தகவல் :  பாணாவரம் பெ.வீரமணி

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *