மருத்துவ அறிவியலாளர் லூயி பாஸ்டர் நினைவு நாள் இன்று (28-09-1895)
போரில் மடிந்தவர்களைவிட நோயால் இறந்தவர்கள் அதிகம் என்கிறது வரலாறு. மருத்துவர்களும் மருந்து கண்டறிந்தவர்களும் மிக உயர்வாக வரலாற்றில் மதிக்கப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர் அறிவியலாளர் லூயி பாஸ்டர். 1822 டிசம்பர் 27 இல் பிரான்சு நாட்டில் பிறந்தார். மருத்துவர் அல்ல, ஆனால் வேதியியலாளராகவும் நுண்ணுயிரியலாளராகவும் மருத்துவத் துறைக்கு அவர் செய்த பங்களிப்பு ஏராளம்!
பாலைப் புளிக்க வைப்பது பாக்டீரியாதான் என்பதையும், குறிப்பிட்ட வெப்பநிலையில் பாலைக் கொதிக்க வைத்து, பின்னர் குளிர வைத்தால் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும் என்பதையும் கண்டறிந்தார். இதுதான் ‘பாஸ்ச்சரைசேஷன்’ (பாக்டீரியா நீக்கம்) என்று அழைக்கப்படுகிறது. இன்றுவரை இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மனித உடலில் நுண்ணுயிர்கள் நுழைவதைத் தடுக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீரா நோய் எனக் கருதப்பட்ட சின்னம்மை நோய் வருவதைத் தடுக்கவும் வந்த பிறகு குணப்படுத்தவும் மருந்துகள் கண்டறியப்பட்டன. வெப்பத்தால் காசநோய்க் கிருமிகளையும் அழிக்க முடியும் என்பதை ஆராய்ச்சிகள் மூலம் காசநோய்க்கு மருந்து கண்டறியப்பட்டது.
பிரான்சு நாட்டில் பட்டுப்புழுவை ஒருவித புதிய நோய் தாக்கியது. அய்ரோப்பா முழுவதும் அந்நோய் பரவியது. அதில் நோயை ஏற்படுத்தும் கிருமிகளை முதலில் அடையாளம் கண்டார். விலங்குகளின் கோமாரி நோய்க்கு தடுப்பு மருந்து கண்டறிந்தார். விலங்குகளிடையே சோதனை நடத்தியதில் தடுப்பூசி போடப்பட்ட விலங்குகள் உயிர் பிழைத்தன.
வெறிநாய்க் கடிக்கு மருந்து கண்டறியும் முயற்சியில் இறங்கினார். அதற்காகத் தன் உயிரைப் பொருட்படுத்தாமல் அதன் வாயில் குழாயைச் செருகி எச்சிலை எடுத்தார். மருந்தைக் கண்டறிந்தார். ’ஜோசப் மெய்ஸ்டர்’ என்கிற சிறுவனுக்கு முதலில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மிகப் பெரிய ரேபிஸ் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
1888 இல் ’பாஸ்டர் இன்ஸ்டிடியூட்’ என்கிற அமைப்பை பாரிஸில் தோற்றுவித்தார். லூயி பாஸ்டரின் அடிப்படைக் கொள்கைகளைப் பயன்படுத்தி பிற அறிவியலறிஞர்கள் ஜன்னி, இளம்பிள்ளைவாதம் போன்ற நோய்களுக்குத் தடுப்பூசிகளைக் கண்டறிந்தனர்.
இன்றைய மக்களின் ஆயுள்காலம் அதிகரித்திருப்பதில் லூயி பாஸ்டரின் பங்கு முக்கியமானது. தன் வாழ்நாள் முழுக்க மக்களின் நலனுக்காகவே உழைத்த லூயி பாஸ்டர், 1895ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் நாளில் தமது 73 ஆவது வயதில் மறைந்தார்.
புரட்சியாளர் பகத்சிங் பிறந்தநாள் இன்று (28-09-1907)

பஞ்சாப் மாநிலம் பங்கா என்ற கிராமத்தில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் நாளில் பிறந்தார். விடுதலைப் போராட்ட வீரர்கள் பலர் கொண்ட குடும்பம் அது. தந்தையும், இரு மாமாக்களும் சிறையில் இருந்து வெளிவந்த நாளில் பிறந்தார்.
இவர் எந்த மதத்தையும் சாராமல், கடவுள் நம்பிக்கையை மறுத்து, பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளில் உறுதியாக இருந்தார். சிறையில் இருந்தபோது “நான் ஏன் நாத்திகன்” (Why I am an Atheist) என்ற கட்டுரையை எழுதினார். இதனை ப.ஜீவானந்தம் தமிழில் மொழி பெயர்க்க, தந்தை பெரியார் அவர்கள் “குடிஅரசு” இதழில் வெளியிட்டார்.
இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு (Hindustan Socialist Republican Association – HSRA) இந்தப் புரட்சிகர அமைப்பில் முக்கியத் தலைவராகச் செயல்பட்டார்.
“இன்குலாப் ஜிந்தாபாத்” (புரட்சி ஓங்குக) என்ற முழக்கத்தை இவர் பிரபலப்படுத்தினார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த போது அவருக்கு 12 வயது. சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அங்கு சென்றவர், அப்பாவி மக்களின் ரத்தம் தோய்ந்த மண்ணை புட்டியில் போட்டு எடுத்து வந்தார்.
சைமன் குழு 1928 இல் இந்தியா வருவதை எதிர்த்து லாலா லஜபதிராய் அமைதிப் பேரணி நடத்தினார். அதில் ஏவிவிடப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்து லஜபதிராய் மரணமடைந்தார். இதற்குப் பழிவாங்கத் துடித்த பகத்சிங் தன் குழுவினருடன் இணைந்து, இதற்கு முக்கியக் காரணமான காவல் அதிகாரியைச் சுட்டுக்கொன்றார்.
1929 இல் தன் நண்பர்களுடன் இணைந்து, ஆங்கிலேயரின் அடக்குமுறைச் சட்டங் களுக்கு எதிராக, “கேளாத செவிகள் கேட் கட்டும்” என்ற முழக்கத்துடன் டில்லியில் இருந்த மத்திய சட்டசபையில் (Central Assembly) குண்டு வீசினார். அப்போது ‘‘குண்டு எறிந்தது மக்களைக் கொல்ல அல்ல, மாறாகப் புரட்சியின் செய்தியைப் பரப்பவே’’ என்று முழக்கமிட்டு சரணடைந்தார். பிரிட்டிஷ் அரசு இவர் மீதும், இவரது நண்பர்கள் சுக்தேவ், ராஜகுரு மீதும் வழக்குத் தொடர்ந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
துப்பாக்கியும் புத்தகங்களும் இவரது நெருங்கிய நண்பர்கள். சிறையில் இருந்தபோது ஏராளமான நூல்களைப் படித்தார். ‘தி டோர் டு டெத்’, ‘அய்டியல் ஆப் சோஷலிசம்’ போன்ற நூல்களை எழுதினார். சிறையில் இந்தியக் கைதிகளுக்கும் அய்ரோப்பியக் கைதிகளுக் கும் சம உரிமை வழங்க வலியுறுத்தி 116 நாட்கள் உண்ணா நிலையில் இருந்தார்.
ஏராளமான இளைஞர் களுக்கு உத்வேகம் அளித்து விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பங்குபெறச் செய்த புரட்சியாளரான ‘மாவீரன்’ பகத்சிங் 24 ஆவது வயதில் 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் நாளில் ஆங்கில அரசால் தூக்கி லிடப்பட்டார்.
அதுபற்றி தந்தை பெரியார் எழுதிய தலையங்கத்தில் பகத்சிங்கின் தியாகத்தைப் போற்றி அவரை மனமார, வாயார, கையாரப் பாராட்டுகின்றோம்! பாராட்டுகின்றோம்!! பாராட்டுகின்றோம்!!! என்று எழுதினார்.
*அறிவியலாளர் அலெக்சாண்டர் பிளெமிங் அவா்கள் பெனிசிலின் மருந்தைக் கண்டுபிடித்த நாள் இன்று (28.09.1928).
* தந்தை பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி பிறந்தநாள்
இன்று (28.09.1877)
* அறிவியலாளர் அலெக்சாண்டர் பிளெமிங் அவா்கள் பெனிசிலின் மருந்தைக் கண்டுபிடித்த நாள் இன்று (28.09.1928).
* தந்தை பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி பிறந்தநாள்
இன்று (28.09.1877)
