சென்னை, அக். 24- தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால், டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடிஸ் – எஜிப்டை’ வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நடப்பாண்டில் இதுவரை 25,500-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22.10.2026 அன்று மட்டும் சென்னையில் 70 பேர் உட்பட தமிழ்நாடு முழுவதும் 332 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 6 பேரும், உண்ணி காய்ச்சலுக்கு ஒருவரும், எலி காய்ச்சலுக்கு சிறுமியும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள், தெருக்கள் மற்றும் தேவையற்ற பொருட்களில் தேங்கும் மழைநீரில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும். ஆரம்பத்திலேயே தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படும் இடங்கள் குறித்து உடனடியாகத் தகவல் அளிக்கவும், போதிய அளவு மருந்துகள் கையிருப்பில் வைத்திருக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் டெங்குவுக்குச் சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
போதிய மருந்துகளை இருப்பில் வைத்திருக்குமாறு அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. திறந்தவெளியில் சிமெண்ட் தொட்டிகள், தண்ணீர் தொட்டிகள், ஆட்டுக்கல், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், தேங்காய் ஓடுகள், வாளி, டயர்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குடியிருப்பு வளாகங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கடைகள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், குடியிருப்பு பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அங்கு டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தியாகும் சூழல் இருந்தால், அதை அகற்றி சரி செய்யும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளிகளை
அரசு புறக்கணிப்பது ஏன்?
தி.மு.க. மாற்றுத்திறனாளிகள் அணிச் செயலாளர் பேராசிரியர் தீபக்நாதன் கேள்வி!

சென்னை, அக். 24- பொதுமக்களுக்கும், திருநங்கைகளுக்கும் சிறப்புச் சலுகைகள் வழங்குவதை வரவேற்பதாகவும், அதேவேளையில் மாற்றுத்திறனாளிகளைச் சலுகைகளில் உள்ளடக்காமல் புறக்கணிப்பது ஏன் என்றும் திமுக மாற்றுத்திறனாளிகள் அணிச் செயலாளர் பேராசிரியர் தீபக்நாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“பொதுவான சமூகத்தினருக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்குவதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதேபோல், திருநங்கைகளுக்கும் இத்தகைய சலுகைகளை வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதன்மூலம் சமூகம் வளர்ச்சியடையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், மாற்றுத்திறனாளிகளை மட்டும் ஏன் இந்தச் சலுகைகளில் உள்ளடக்க மறுக்கிறீர்கள்? எங்களை ஏன் மறந்துவிட்டீர்கள்? ஏன் புறக்கணிக்கிறீர்கள்? இது எதன் வெளிப்பாடு? தனிமைப்படுத்துதல், வெளியேற்றுதல், நிராகரித்தல் ஆகியவற்றுக்குப் பெயர்தான் பாகுபாடு.
மாற்றுத்திறனாளிகள் சமூகம் நாள்தோறும் சாலைக்கு வந்து போராடிக்கொண்டே இருக்க வேண்டுமா? இதுதான் நல்லரசா? மாற்றுத்திறனாளிகளை மறந்துவிட்ட இந்த ஆட்சி, மிக விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும்.” இவ்வாறு தனது அறிக்கையில் பேராசிரியர் தீபக்நாதன் கடுமையாகச் சாடியுள்ளார்.
