சூத்திரப் பட்டமும், சிறுநீர்க் குடுவையும்! (5)

5 Min Read
- Advertisement -

மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி

“இன்றைக்குத் தமிழ்நாட்டில், நம் இயக்கத்திற்கு விரோதமாக ஏதாவது ஓர் அரசியல் கட்சி என்பதற்கு செல்வாக்கு கடுகளவாவது இருக்கின்றதா என்று யாராவது பரிட்ஷை செய்து பார்க்க விரும்பினால் இப்போது நாட்டில் நடந்து வரும் தேர்தல்களை கவனித்துப் பார்த்தாலே போதுமானதாக இருக்கும். உதாரணமாக அண்மையில் சென்னையில் நடந்த தேர்தல்கள் பெரிதும் “தேசியத்துக்கும், ஆஸ்திகத் துக்கும்” நல்ல தோல்வியைக் கொடுத்து, “தேசத் துரோகத்துக்கும், நாஸ்திகத்துக்கும் நல்ல வெற்றியைக் கொடுத்திருப்பதானது யாவரும் அறிந்ததாகும்” என்று தந்தை பெரியார் குறிப்பிடுகிறார்.காங்கிரஸ் கட்சி தேசிய இயக்கம் என்றும், நீதிக் கட்சி தேசத் துரோகக் கட்சி என்று காங்கிரஸால் கடும் பரப்புரை மேற்கொள்ளப்பட்ட காலம் அது. “இரட்டை ஆட்சி” அமலாக்கப்பட்டு, முதன்முதல் 1920இல் ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. அதன்பின் சுயேட்சை ஆட்சி நிறுவிய சுப்பராயன் அவர்கள் காலத்தில் தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட தலையங்கம் இது.

“அது மாத்திரமல்ல. தேசியத்தின் பேராலும், ஆஸ்திகத்தின் பேராலும் தேர்தல்களுக்கு நிற்க ஆள்களே கிடைக்காமற் போனது, “நாஸ்திகத்தின்” செல்வாக்குக்கும், வெற்றிக்கும் ஒரு பரிட்சையாகும். “காங்கிரசே பெரிது” என்ற காங்கிரஸ் தலைவர் திரு. அய்யங்கார், “தான் இனி தேர்தலைப் பற்றி ஒன்றும் கவனிக்கப் போவதில்லை” என்று சொல்லி விட்டார். “தேசமே பெரிது” என்ற கட்சித் தலைவர் வேலை போன திரு.வெங்கட்ராம சாஸ்திரியார், வேலை போன மந்திரிகள் ஆகியோர்கள் இருக்குமிடமே தெரியவில்லை” என்று தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைப் பற்றியும், அதன் தலைவர்கள் முக்காடு இட்டுக் கொண்டு அலைவதைப் பற்றியும் கிண்டல்களை? தன்
‘குடிஅரசு’ ஏட்டில் எழுதி கேலி செய்கிறார்.

“உத்தியோகமே பெரிது என்று பின்பற்றுவோர் இல்லாத குட்டி தேசியக் கட்சி ஸ்தாபகரும், தானே தலைவருமான திரு. வரதராஜுலு, காங்கிரஸ் தோல்வியுற்ற சந்தோஷத்திலும், அய்யங்கார் மூலையில் முடங்கிய சந்தோஷத்திலும் மூழ்கிக் கிடக்கின்றனரே அல்லாமல், தன்னைப் பற்றி நினைக்கவோ, உலகம் என்ன பேசிக் கொள்கின்றது என்று கேட்கவோ, நாட்டில் தனது நிலைமை என்ன என்பதைப் பார்க்கவோ, தனது கட்சியின் யோக்யதை என்னவென்று கவனிக்கவோ சிறிதும் நேரமில்லாமல் இருக்கின்றனர்” என்று தந்தை பெரியார் எழுதுகிறார். அவருக்கு நெருங்கிய நண்பரும், காங்கிரஸில் இருந்த பொழுது தந்தை பெரியாராடு சேர்ந்து சேரன் மகாதேவி குருகுல ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவருமான வரதராஜுலு பற்றி பெரியார் தலையங்கத்தில் எழுதிய செய்தி இது!

“மற்றபடி ஆஸ்திகக் கூலிகளோ, வாங்கிய பணம் சரிவர ஜீரணமாயிற்றா, இல்லையா என்பதைக் கூட கவனிக்காமல் இனியும் பணம், பணம் என்று கூவிக் கொண்டு கொடுக்கின்றாயா அல்லது எதிர்கட்சியில் சேர்ந்து கொள்ளட்டுமா என்று திரு அய்யங்காரை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இன்றைய இந்த நிலையில் சுயமரியாதை இயக்கமும், அதன் எதிர்ப்புகளும் இந்நிலையில் இருந்து வருவது ஒரு புறமிருந்தாலும், அவ்வியக்கத்தின் உண்மையான கொள்கைதான் என்ன என்பதனைப் பற்றி சிறிது கவனிப்போம்” என்று தந்தை பெரியார் கூறுகிறார்.

“மற்றும் சைவ சமயமே பிரதானம், சமய ஆச்சாரிகளே தனது உயிர் என்ற திரு.கல்யாண சுந்தர முதலியார் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களிடம் சென்று “சுயமரியாதைக் கட்சியில் சேர்ந்தால் உங்களுக்கு ஓட்டு கிடைக்காது” என்று மிரட்டுவதும், ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாய் ஓட்டர்கள் வீட்டுக்கு இரகசியமாய் நடந்து “நாஸ்திகக் கட்சிக்கு ஒட்டு செய்யாதீர்கள்” என்று சொல்லி பார்ப்பனர்களுக்கு சில ஓட்டுக்களை வாங்கிக் கொடுத்து விட்டதுடன் அவர் வேலை முடிந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்” என்று தந்தை பெரியார் தன் உற்ற நண்பரான திரு.வி.க.வைப் பற்றியும், அவர் தன் இயக்கம், நீதிக்கட்சிக்கு எதிராக செயல்படுவதைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

தன்னோடு காங்கிரசில் இருந்த பார்ப்பனரல்லாத தலைவர்கள், தன் சுயமரியாதை இயக்கத்தை ஒழித்துக் கட்ட பார்ப்பனர்களுக்கு எப்படி கையாட்களாக மாறிப் போனார்கள் என்பதை தன் தலையங்கம் மூலம் விளக்குகிறார். சுயமரியாதை இயக்கம் அரசியலில் பிற்போக்காக இருக்கின்றது. மற்றபடி சமூக சீர்த்திருத்தத் துறையில் எல்லாம் சரி என்று பார்ப்பனரல்லாத தேசியவாதிகள் என்பவர்கள் பலர் நமக்கு எழுதியிருக்கிறார்கள். அதாவது அரசியலில் சைமன் கமிஷனை பகிஷ்கரிக்காததும், சட்டசபையில் ஒத்துழைப்பதும் அரசியலுக்கு விரோதம் என்பது அவர்கள் கருத்து. ஆனால், இப்போது சைமன் கமிஷனைப் பகிஷ்கரித்தது பைத்தியக்காரத்தனம் என்று அவர்களுக்குத் தோன்றி விட்டதைப் பார்த்தால் சுயமரியாதை இயக்கம் எவ்வளவு தீர்க்க தரிசனம் உள்ளது என்பது விளங்கும்”என்கிறார் தந்தை பெரியார்.

“அதாவது காங்கிரஸைச் சேர்ந்த திரு.ஆர்.கே.சண்முகம் எம்.எல்.ஏ. அவர்களும், சுயாட்சி சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்.பெசண்ட் அம்மையார் அவர்களும் நமது குறைகளைப் பார்லிமெண்ட் முன்பாக எடுத்துச் செல்ல வேண்டுமென்றும், பார்லிமெண்டை நம்ப வேண்டுமென்றும் அதை பகிஷ்கரிக்கக் கூடாதென்றும் சொல்லி விட்டார்கள். இதை எந்த காங்கிரஸ்வாதியும், சுயாட்சிவாதியும், தேசியவாதியும் நாளது வரை ஆட்சேபிக்கவில்லை. தவிர, காங்கிரஸ்காரர்களும் இவ்வருஷத்திய காங்கிரஸ் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் சீமைக்குப் போய் பார்லிமெண்டாரிடம் நமது குறைகளை எடுத்துச் சொல்லி, வாதம் செய்து அவர்களிடம் சுயராஜ்யம் பெறத் தகுதியுடையவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டுமென்று பேசி இருக்கிறார்கள்.

“இதையும் எந்தப் பகிஷ்காரவாதியும் இதுவரை ஆட்சேபிக்கவே இல்லை. எனவே, பார்லிமெண்டிடம் நமது கட்சியையோ, குறைகளையோ சொல்லிக் கொள்ள நமக்கு இஷ்டம் இருக்கும்போது, சீமைக்குச் சென்று பார்லிமெண்டிடம் போக சக்தியும், சவுகரியமும் இல்லாத ஜனங்கள், பார்லிமெண்டாரால் நியமிக்கப்பட்டு இவ்விடத்துக்கு அனுப்பி இருக்கும் பார்லிமென்ட் பிரதிநிதிகளிடம் நமது கட்சியையோ, குறைகளையோ எடுத்துச் சொன்னதில் தேசியத்திற்கோ, தேசிய சுயமரியாதைக்கோ என்ன கெடுதி நேர்ந்து விட்டது என்று கேட்கிறோம்”என்று தந்தை பெரியார் கேட்கிறார்.

அடுத்தாற்போல் சர்க்காரோடு ஒத்துழைப்பதாய் சொல்லுவதில் ஏதாவது அரத்தம் இருக்கிறதா என்று பார்ப்போம். முதலாவது ஒத்துழையாமை என்பது எவ்விதத் தேசிய திட்டத்திலும் இல்லவே இல்லை. சட்டசபையில் ஏதாவது செய்வதற்கு இடமிருப்பதாகச் சொன்னாலும் அதுவும் ஒட்டர்களை ஏமாற்றுவதற்கு மாத்திரம்தான் சொல்லிக் கொள்ள முடியுமே ஒழிய மற்றபடி சட்டசபைக்குள் புகுந்துவிட்டால் எந்த விதத்திலும் ஒத்துழையாமையையோ, முட்டுக் கட்டைகள் சிறுதும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம்.

“ஏனெனில் சட்டசபைக்குப் போனவர்களுக்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. அந்நிபந்தனையின் படி அவர்கள் கண்டிப்பாய் இருக்க வேண்டியவர் களாயிருக்கும்போது அங்கு எவ்விதத்தில் ஒத்துழையாமை செய்ய முடியும்? நமக்கு வேண்டிய எவ்வித அரசியல் சட்டங்களும்,சமூக சீர்திருத்த சட்டங்களும், சமத்துவ சட்டங்களும், சட்டசபையின் மூலம்தான் செய்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டியிருக்கின்றது. அப்போது சர்க்காரிடம் போகாவிட்டால் சர்க்கார் சம்மதமில்லாவிட்டால் எப்படி சட்டங்கள் செய்து அவற்றை அமலுக்குக் கொண்டு வர முடியும்? அன்றியும் சர்க்காரால் செய்யப்பட்டிருக்கும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு சர்க்கார் தயவை எதிர்பார்ப்பதற்கு தகுந்தபடி நடந்து கொள்ளாமல் இருக்க சட்டசபையில் எப்பேர்ப்பட்ட தேசிய அமிதவாதிக்கும் முற்றும் இடமே இல்லை” என்று தந்தை பெரியார் எழுதுகிறார்.சட்டசபையில் இடம் பெற்று தங்களுக்கு வேண்டிய சட்டங்களை நிறைவேற்ற சர்க்கார் தயவு வேண்டும்.அப்படி இருக்கும்போது பகிஷ்கரிப்பு என்று கூறி ஒதுங்கினால் இவர்களால் என்ன சாதிக்க முடியும்? என்பதே தந்தை பெரியார் கேட்கும் கேள்வி!

(வரலாறு வளரும்…)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *