பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்திற்கும் நன்றி கலந்த பாராட்டு! பெரியார் உலக மயமாகிறார் என்பதில் இன்னும் அய்யமுண்டோ!

5 Min Read
- Advertisement -

*யுனெஸ்கோ மன்றத்தின் விருது– ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில், அன்றைய முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலினால் தந்தை பெரியார் படத் திறப்பு!
* தந்தை பெரியார் ஏவிய அம்பு இலக்கை நோக்கிச் சென்று வென்றே தீரும் என்ற அண்ணாவின் பாராட்டு!
* புரட்சிக்கவிஞர் பாடிய ‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்ற கணிப்பு நாளும் வெற்றி பெற்றே வருகிறது!
* இப்பொழுது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற மேலவையில் தந்தை பெரியாரின் சிந்தனைக்கும், தொண்டுக்கும் பாராட்டு!
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற மேலவைக்கும் –

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற மேலவையில், தந்தை பெரியார் சிந்தனை, தொண்டின் வளம் இவற்றைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு மகிழ்ச்சி, உவகையும்,  நன்றியும் கலந்த பாராட்டினைத் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

நேற்றைய ‘விடுதலை’ (22.10.2026) படித்தோம்!

முதற்பக்கத்தில்,

‘‘மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது!’’ (பின்பற்று கிறது)

‘‘ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்துக்குப் பாராட்டு’’ என்ற செய்தியும், படமும் நம் செவிகளுக்கும், கண்களுக்கும், உள்ளத்திற்கும் மகிழ்ச்சி, மகிழ்ச்சி, கொள்கை மகிழ்ச்சி!

உவகை! உவகை! உள்ளம் எல்லாம் உவகை!

தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் ஓர் உலகத் திருநாளாகவே திகழ்ந்து வருவதைவிட, பெரியார் தொண்டர்களுக்கு வேறென்ன கைம்மாறு வேண்டும்?

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ்
சட்ட மேலவையில் தந்தை பெரியாருக்கும், அவரது கொள்கைக்கும் பாராட்டு!

‘‘ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் சட்ட மேலவையில் – தந்தை பெரியார் அவர்களுக்கும், சமூக சீர்திருத்தத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கும் புகழாரம் சூட்டியும். பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம், ஆஸ்திரேலியா (‘‘PATCA’’) அமைப்பைப் பாராட்டியும் தீர்மானம் ஒன்றை கடந்த அக்டோபர் 13 ஆம் தேதியன்று நிறைவேறியுள்ளது.

 

கிரீன்ஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கேட் ஃபேர்மன் முன்மொழிந்த இந்தத் தீர்மானம், ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான தந்தை பெரியாரின் போராட்டம், பெண்களின் விடுதலைக்கான அவரது குரல், மற்றும் சமத்துவம், பகுத்தறிவு, மனித கண்ணி யம் ஆகியவற்றின் மீதான அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டி அங்கீகரித்துள்ளது.

மேலும், ஆஸ்திரேலியாவில் விளிம்புநிலைச் சமூகங்களுக்காக ஆஸ்திரேலிய பெரியார்  அம்பேத்கர் சிந்தனை வட்டம் ஆற்றி வரும் பணிகளையும் இது பாராட்டியுள்ளது!

என்னே சிறப்பு – மக்கள் நாயகத்தின் மகத்தான அரிய செயல் அல்லவா?

இது எவ்வளவு முறையாக, ஜனநாயக ரீதியான தகுதிகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது கூர்ந்து கவனிக்கப்படுவதோடு, வியந்து பாராட்டிட வேண்டிய அருமையான செய்தியாகும்!

தீர்மானம் முன்மொழியப்பட்ட நாள்!

2026 செப்டம்பர் 24 அன்று காலை கேட்ஃபேர்மன் அம்மையார் தீர்மானத்தை முன்மொழிந்து, அவையில் கொண்டு வரவிருப்பதாகக் கூறி, பெரியார்   அம்பேத்கர் சிந்தனை வட்டத் தோழர்கள், பொதுவான பெரியார் பற்றாளர்களின் மனதைக் குளிர வைத்தார்.

எனது ஆஸ்திரேலிய பயணத்தின்போது, இம்முயற்சி யினைச் சிட்னியில் மேடையில் பகிர்ந்து கொண்டதாக நினைவு!

அந்தக் காட்சி – மனக்கண்முன்.

அவையின் கவனத்திற்குத் தீர்மானம் கொண்டு (இந்தத் தனி நபர் தீர்மான எண்.3721) செல்லப்படுகிறது. அப்போது அவைத் தலைவர், பென்பிராங்கிளின், “திருமதி ஃபேர்மேன் முன்மொழிந்த இத்தீர்மானம், பரிசீலனைக்கு வருகிறது. இதற்கு ஏதேனும் ஆட்சே பனை உள்ளதா?” என்று கேட்கிறார்.

அவையின் அதிர்ந்த குரல் என்ன தெரியுமா?

‘‘எந்த மறுப்பும் இல்லை, ஆதரவு அதிகம்’’ என்று கூறி, திருமதி ஃபேர்மனைப் பேச அழைக்கிறார்.

பாராட்டத்தக்க அந்தத் தீர்மான கர்த்தாவான அந்த அம்மையார், ‘தந்தை பெரியார் எப்படி தொண்டு செய்து பழுத்த பழம்? ஏன் அவரது அறிவினை, செயலினைப் போற்றிப் பாராட்டிட வேண்டும்?’ என்று அடுக்கடுக்கான காரணங்களை அள்ளி அள்ளி வைக்கிறார்!

1970 இல் யுனெஸ்கோ மன்றம் அளித்த பாராட்டு – விருது!

1925 இல், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய தந்தை பெரியார்,  ‘இது உலக இயக்கமாக ஆகும்’ என்று எவ்வளவு முன்னோக்கத்தோடு எழுதினார் – வியப்பல்லவா!  அவரது முன்னோக்கு, துணிவு, செயலில், தாம் வெற்றி பெற்றே தீருவோம் என்ற அவரது அழுத்தமான நம்பிக்கை, இன்று எவ்வளவு அருமையாக ஆஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற சட்ட மேலவையில் நிரூபணம் ஆகியிருக்கிறது!

27.6.1970 அன்று, சென்னையில் யுனெஸ்கோ மன்றம் தொடக்கவிழாவில், அறிவாசானுக்குத் தனிப் பெரும் விருது அளித்துப் பெருமைப்படுத்தியது!

ஒன்றிய கல்வி அமைச்சராக இருந்த மேற்கு வங்கா ளத்தைச் சார்ந்த டாக்டர் திரிகுண சென் அவர்களும், தந்தை பெரியார் அவர்களால் செதுக்கப்பட்ட ஒப்பற்ற திராவிட அரசியல் கட்டமைப்பாளரான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்நாட்டு முதலமைச்சர் என்ற தகுதியிலும் நின்று, தனது ஈரோட்டுக் குருகுல ஆசானுக்கு  விருது வழங்கி, பெருமை பெற்றார்.

பெரியார் –

‘‘புது உலகின் தொலைநோக்காளர்

தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்

சமூக சீர்திருத்த இயக்கத் தந்தை

அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற

பழக்கவழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள்

ஆகியவற்றின் கடும் எதிரி!” என்று பெரியாரைப் போற்றியது யுனெஸ்கோ மன்றம்.

இதனை இப்போது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றச் சட்ட மேலவை வழிமொழிந்து வாழ்த்துவதுபோல் இல்லையா?

ஆஸ்திரேலியத் தோழர்களின் ஒருங்கிணைந்த உழைப்புக்கும், பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் கருத்தியலாளர்களுக்கும் கிடைத்த ஒரு தனி அங்கீகாரம் என்று மகிழ்ந்து, அவர்களை உச்சிமேல் வைத்து மெச்சிக் கொள்கிறோம்.

இலண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட
தந்தை பெரியார் உருவப் படம்!

அதற்கு முந்தைய பெரியார் 147 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவின்போது, செப்டம்பரில், இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில், புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக வளாகத்தில், திராவிடப் பற்றாளர்களும், பெரியாரை விரும்பிய அய்ரோப்பியர்களும் கலந்துகொண்ட ஒரு பெரும் கருத்தரங்கத்தினைத் தொடங்கி வைத்து, தந்தை பெரியார் படத்தைத் தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் நமது சகோதரர் மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து வரலாறு படைத்தார்!

தந்தை பெரியார்பற்றி அண்ணாவின் கணிப்பு!

பேரறிஞர் அண்ணா, திருச்சி பெரியார் மாளிகையில், அதுவும் 18 ஆண்டு இடைவெளிக்குப் பின் கூடிக் கலந்து மகிழ்ந்து, நெகிழ்ந்து, அய்யாவின் பிறந்த நாள் விழாவான செப்.17 (1967) அன்று வழங்கிய பாசம் கொப்பளிக்கும் அந்த ஆய்வுரையில்,

‘‘பெரியார் எய்திடும் அம்பு, வில்லின் கணைகளி லிருந்து விடுபட்டவுடன், அதே வேகத்துடன் (இடை நிற்காமல்) இலக்கை நோக்கிச் செல்வதும், வெல்வதும் உறுதி!

இதற்குக் கால நிர்ணயம், கணக்கீடு தேவையில்லை’’ என்று அழகாகக் குறிப்பிட்டார்.

புரட்சிக்கவிஞரோ, ‘‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்!’’ (பின்பற்றும்) என்றார்!

நன்றி கலந்த பாராட்டு!

நாம், பழனியில், 1998 இல் நடைபெற்ற பொதுக்குழு வில், ‘‘இனிவரும் நூற்றாண்டு, பெரியார் நூற்றாண்டே! காரிருளோ, கிரகண மறைப்புகளோ சூரியனை இல்லாது செய்துவிட முடியுமா? அப்படி நினைத்தால் அதைவிடப் பேதமை வேறு உண்டா?’’ என்று கூறியதை இப்போது நினைவுகூர்கிறோம்.

பெரியார் உலக மயமாகிறார் என்பதில் இனியும் அய்யம் உண்டோ?

நன்றி கலந்த பாராட்டுகளைக் ‘கிரீன்ஸ்’ கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கேட் ஃபேர்மன் அம்மையார் அவர்களுக்கும், ஆஸ்திரேலிய பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத் தோழர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை         

23.10.2026   

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *