டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நீட்டிப்பு: மகளிர் இடஒதுக்கீட்டுடன் தொகுதி மறுவரையறையை இணைக்கும் மசோதாவை நிறைவேற்ற, நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மீண்டும் கூட்ட அரசு திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மசோதாவை நிறைவேற்றத் தேவையான பெரும்பான்மை மக்களவையில் கிடைக்காததால், அடுத்த கூட்டத்தொடர் வரை காத்திருக்காமல் அவசர நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
* உத்தரப் பிரதேச வாக்காளர் பட்டியலில் விசித்திரமான பதிவுகள்: அப்பா பெயர் பி.காம்: உத்தரப் பிரதேசத்தின் வாக்காளர் பட்டியலில் “ராம் நே யாதவ் கோ மாரா”, “டக்கர் மர்னா”, “முர்க் காளி தேவி” போன்ற விசித்திரமான பெயர்கள் இடம்பெற்றுள்ளன; பிரயாக்ராஜ் மற்றும் பிலிபித் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பதிவுகளில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. பிலிபித்தில் கணினி இயக்குநர் முறைகேடாகப் பதிவுகளை மாற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது; 10,470 படிவங்கள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், 3,309 நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக அக்டோபர் 28இல் மாதிரி பதவி நீக்கத் தீர்மான நடவடிக்கை – இந்தியா கூட்டணி திட்டம்! இதற்கான பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது; ராம்லீலா மைதானம் நிராகரிக்கப்பட்ட நிலையில், தல்கடோரா அரங்கமும் கிடைக்கவில்லை.
* தொகுதி மறுவரையறைக்காகக் காத்திருக்காமல் மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தலாம் – மல்லிகார் ஜுன கார்கே! மக்களவையில் 33% மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த, அவையின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய சட்டம் தேவையில்லை என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.
தி இந்து:
* கோவை மாணவி கவுசல்யாதேவி தற்கொலை: ஜாதி, உணவுப் பழக்கங்களை கூறி துன்புறுத்தியதாக குடும்பத்தினர் புகார்! பட்டியலினத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவியை, சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவரின் துன்புறுத்தலால் உயிரை மாய்த்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது; உரிய நடவடிக்கை எடுக்கக் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தி டெலிகிராப்:
* பாஜக ஆளும் மாநிலங்களில் போதைப்பொருள் பழக்கம் ஏன் ஒழிக்கப்படவில்லை? – அமித் ஷாவிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி! பீகார், குஜராத், ராஜஸ்தான், கோவா ஆகிய மாநிலங்களில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்ந்து நீடிப்பது ஏன் எனக் கெஜ்ரிவால் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* தமிழ்நாட்டில் நரிக்குறவர் சமூகத்திற்கு எஸ்.டி. பழங்குடி இனத்தவர் தகுதி: கல்வி மற்றும் முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்புகள்! காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தின் சக்திவேல் குடிமைப் பணித் தேர்வில் வென்று வனத்துறை அதிகாரியானதுடன், 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடு மற்றும் கல்வி வாய்ப்புகள் கிடைக்க உதவியுள்ளார். (முந்தைய திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர் முயற்சிகளுக்குப் பின்னர், ஒன்றிய அரசு மற்றும் நாடாளுமன்றத்தின் சட்ட நடவடிக்கையால் 2023இல் இச்சமூகத்திற்கு பழங்குடி இனத்தவர் தகுதி கிடைத்தது குறிப்பிடத்தக்கது)
– குடந்தை கருணா
