புதியதோர் உலகம் செய்வோம்!

3 Min Read
- Advertisement -

பெர்லினில் நடைபெற்ற உலகச் சுகாதார உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட புதிய அறிக்கை ஒன்றோடொன்று தொடர்புடைய 17 பேரழிவு அச்சுறுத்தல்களை அடையாளப் படுத்தியுள்ளது. மனித உடல்நலத்திற்கும் உயிர்வாழ்விற்கும் எதிரான அச்சுறுத்தல்களை உலக அளவில் மிகவும் விரிவான கண்ணோட்டத்தில் மதிப்பிட வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

‘லான்செட் கமிஷன்’ வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், 2100-ஆம் ஆண்டு வரை உலகளாவிய ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய ஒன்றோடொன்று தொடர்புடைய பேரழிவு அச்சுறுத்தல்களைப் பட்டியலிட்டுள்ளதுடன், இந்தச் சிக்கல்களைத் தனித்தனியாகக் கையாள்வதை நிறுத்திவிட்டு, அவற்றை பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் தேசிய பாதுகாப்பு சார்ந்த, ஆழமாக ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட சவால்களாகக் கருத வேண்டும் என்று உலகத் தலைவர்களை இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

தொற்றுநோய்கள், உடல் பருமன், நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன், அணு ஆயுத மோதல்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றை முக்கிய அச்சுறுத்தல்களாகக் கண்டறிந்துள்ளது. “இது வெறும் ஊகங்களின் அடிப்படையில் அமைந்ததல்ல; மாறாக, 2025 முதல் 2100-ஆம் ஆண்டு வரை ஏற்பட வாய்ப்பிருக்கும் ஒட்டுமொத்த நோய்ச் சுமையைக் கணக்கிட்டு, கொள்கை ரீதியான தலையீடுகள் மூலம் எந்த அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதன் அடிப்படையிலேயே இந்த அச்சுறுத்தல்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இதில் அணு ஆயுத மோதல்களும், செயற்கை நுண்ணறிவின் தீய பயன்பாடும் இரண்டு பேரழிவு அச்சுறுத்தல்கள், மனித இனத்தையே அழிக்கும் திறன் கொண்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளன” என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

காலநிலை மாற்றம், காற்று மாசுபாடு, குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு, வழக்கமான போர்கள், சுகாதாரத் துறைக்கான பன்னாட்டு உதவி குறைதல், அதிக மதுப் பயன்பாடு, உயர் இரத்த அழுத்தம், வருமான ஏற்றத்தாழ்வு, குறைந்த கல்வி நிலை, இயற்கையாகத் தோன்றும் பெருந் தொற்றுகள், மோசமான மனநலம், புகைப் பிடித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற முதுமை போன்றவை பிற அச்சுறுத்தல்களாகும்.

சுகாதாரம், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 37 நிபுணர்களைக் கொண்ட இந்த ஆணையம், தொலைநோக்குப் பார்வையுடன், மனித ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து, இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.

மேற்கண்டவை ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் தொடர்புடையவை தான் என்பதும், ஒன்றின் விளைவாக, மற்றொன்று உருவாகக் கூடியவை என்பதும் இவற்றை உற்று நோக்கும் அனைவரும் உணரக் கூடிய ஒன்று தான். அதிலும், முற்போக்குச் சிந்தனையுடனும், பகுத்தறிவுப் பார்வையுடனும் உலகின் பிரச்சினைகளைக் கவனிக்கக் கூடியவர்கள், இவற்றில் அரசுகளும், நிர்வாகமும் ஒருங்கிணைந்து கவனத்தைச் செலுத்தாமல், தனித்தனியாக இவற்றை அணுகுவதும், அவற்றுக்காகச் செலவு செய்வதும், காலத்தை வீணடிப்பதும் எத்தகைய முரண்பாடு என்பதையும், எத்தகைய போலித்தனம் மிகுந்த பேச்சுகள், நடத்தைகள் என்பதையும் தொடர்ந்து அம்பலப்படுத்தியே வருகின்றனர்.

அதிக வருமானம் கொண்ட நாடுகள், உடல் பருமனாலும், மோசமான மனநலம் போன்ற தொற்றாத நோய்களாலும் அதிக உடல்நலக் கேடுகளைச் சந்திக்கும் அதே சமயம், குறைந்த வருமானம் கொண்ட நாடுகள், குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும், பன்னாட்டு உதவிகள் நிறுத்தப்படுவதாலும் சந்திக்கும் பாதிப்புகளை மிகக் கடுமையாக எதிர்கொள்கின்றன. ஒருபுறம் மக்களுக்கு அத்தியாவசியமற்ற, சுற்றுச் சூழலுக்குக் கேடு பயக்கும் தொழில்துறையை விரைவுபடுத்திக் கொண்டே, இன்னொரு புறம் காலநிலை மாற்றம் குறித்துப் பேசுவதும், மாற்று எரிபொருளின் தேவையை விவாதித்துக் கொண்டே, எண்ணெய் வளத்துக்காகப் பெரும்போர்களை நிகழ்த்துவதுமாக இரட்டை நிலைப்பாடுகளை எடுக்கும் போலித் தனங்களும், ராஜதந்திரம் என்னும் பெயராலும், முன்னேற்றத்தில் போட்டி என்ற முனைப்பாலும் நிகழும் மனித குல அழிவுக்கான வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

இந்த அறிக்கை வெறும் அச்சுறுத்தல்களை மட்டும் வெளியிடவில்லை. இன்று உறுதியான கொள்கை முடிவுகளை எடுத்தால், எப்படி மீளமுடியும் என்பதற்கான வழிகாட்டுதலையும் இது வழங்குகிறது. இந்த ஆணையம் 204 நாடுகளிலும், பகுதிகளிலும் உள்ள நூற்றுக்கணக்கான அபாயங்களை ஆய்வு செய்துள்ளது.

இந்த அறிக்கை தரும் தீர்வுகளுள் ஒன்று, உலகளவில் கல்விக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதன் மூலம் பேரிழப்பைத் தவிர்க்க முடியும் என்பதாகும். ஆனால், இந்த ஆணையம், தற்போதைய புவிசார் அரசியல் நெருக்கடி, சகிப்புத்தன்மையற்ற அரசாங்கங்களின் போக்கையும், நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் சரிவதையும் பேசத் தவறிவிட்டது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இதுவே முழுமையானது அல்ல என்றாலும், இந்த அறிக்கை அடையாளப்படுத்தியுள்ள பிரச்சினைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை; மனிதர்களால் கட்டுப்படுத்தக் கூடியவை. மனித குலத்தின் அழிவை மனிதர்களே தேடக் கூடாது எனில், இவற்றையெல்லாம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வறிக்கை சொல்வதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில்,

“ஜாதிமத பேதங்கள், மூட வழக்கங்கள்

தாங்கிநடை பெற்றுவரும் சண்டை யுலகிதனை

ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம் பின்னர்

ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்!

பேதமிலா அறிவுடைய அவ்வுலகத் திற்குப்

பேசுசுய மரியாதை உலகுஎனப் பேர் வைப்போம்!” என்னும் புரட்சிக் கவிஞரின் வரிகளை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *