சென்னை, அக்.21- 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கடந்த செப்டம்பர் மாதம் சர்க்கரை விலை உயர்வில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. அதிகபட்சமாக ஒரு கிலோ சர்க்கரை ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஒன்றிய புள்ளிஇயல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் ‘இ-சங்கிகி’ தரவுத்தளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகா, டில்லி, தெலுங்கானா, குஜராத், அரியானா, பஞ்சாப், மேற்கு வங்காளம், மராட்டியம், உத்தரப்பிரதேசம், கேரளம் ஆகிய 12 மாநிலங்களில் மேற்கொண்ட ஆய்வின்படி கடந்த செப்டம்பர் மாதம் சர்க்கரை விலை உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.
அகில இந்திய அளவில் ஜூலை மாதத்தில் 4.92 சதவீதமாக இருந்த சர்க்கரை விலை, ஆகஸ்டு மாதத்தில் 24 சதவீதத்தை தாண்டியது. இது செப்டம்பர் மாதத்தில் சுமார் 30 சதவீதத்தை எட்டியுள்ளது. 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொண்ட ஆய்வில், செப்டம்பர் மாதத்தில் சர்க்கரை விலை 25 முதல் 35 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
உணவு மற்றும் பொருள் விலை உயர்வின் காரணமாக செப்டம்பர் மாதத்தில் சில்லறை விலை உயர்வு சுமார் 2 ஆண்டுகளில் இல்லாத அளவாக 5.5 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் சர்க்கரை உற்பத்தி பல ஆண்டுகளாக குறைந்து உள்ளது, மாநில வர்த்தகர்கள் மராட்டிய மற்றும் மாநிலங்களில் இருந்து சர்க்கரையை வாங்க வேண்டியுள்ளது. போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் சேர்வதால், சர்க்கரை விலை உயர்ந்துள்ளது.
மறுபுறம், உத்தரப்பிரதேத்தில் சர்க்கரை ஆலைகள் மாநிலம் முழுவதும் பரவலாக இருப்பதால், சர்க்கரை தேவைக்காக பிற மாநிலங்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
கூட்டுறவு சர்க்கரை ஆலை விற்பனை மய்யங்கள் மூலம் பொதுமக்களுக்கு கிலோ ரூ.52-க்கு சர்க்கரை விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் அங்கு வெளிச்சந்தைகளில் சர்க்கரை விலை ரூ.60-க்கு மேல் உயர்வில்லை என்று கூறப்படுகிறது. இதேபோன்று கேரளத்தில் சர்க்கரையின் மொத்த விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.55-க்கும், சில்லறை விலையில் அதிகபட்சமாக ரூ.65 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சர்க்கரையின் மொத்த விலை செப்டம்பர் மாதம் அதிகபட்சமாக ரூ.75 வரையும், சில்லறை விலையில் அதிகபட்சமாக ரூ.80 முதல் ரூ.90 வரையும் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நேற்றைய (20.10.2026) சர்க்கரை மொத்த விலை ரூ.56 ஆக உள்ளது. சில்லறை விலையில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.65 வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு ரேசன் கடைகளில் கிலோ ரூ.25-க்கு சர்க்கரை விநியோகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உற்பத்தியாகும் சர்க்கரை மட்டுமே விற்பனைக்கு வருவதாகவும், தனியார் கரும்பு ஆலைகளில் சர்க்கரை உற்பத்தி செய்யப்படாமல் தமிழ்நாட்டில் உள்ள மதுபான ஆலைகளுக்கு ‘ரம்’ தயாரிப்பதற்கான மூலப்பொருளான கரும்பு பாகு அல்லது கரும்புச்சாறு வடிவில் வழங்கப்படுகிறது.
இதனால், தமிழ்நாட்டின் சர்க்கரை தேவைக்கு மற்றும் மராட்டிய மாநிலங்களை சார்ந்துள்ளோம். எனவே, போக்குவரத்து செலவும் சேர்ந்து சர்க்கரை விலை அதிகரித்து உள்ளதாக கோயம்பேடு மொத்த சர்க்கரை வியாபாரி அருண் தெரிவித்தார்.
முதல் கட்ட அறிக்கையைச் சமர்பித்தது
தமிழ்நாடு அரசின் எல்நினோ பாதிப்புகளைத் தடுக்க அமைக்கப்பட்ட வல்லுநர் குழு!
சென்னை, அக். 21- தமிழ்நாட்டில் எல்நினோ பாதிப்பால் ஏற்படும் மாற்றங்கள், அவற்றை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.
அக்குழு தற்போது முதல் கட்ட அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: எல்நினோ பாதிப்பு காரணமாக குடிநீர் பற்றாக்குறை, அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து அதனால் வறட்சி ஏற்படுதல், வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழைப் பொழிவால் நகர்ப்புறத்தில் வெள்ள பாதிப்பு, அடுத்தாண்டு வெயில் காலத்தில் அதிக வெப்ப அலை வீசுதல், பொதுமக்களின் உடல்நிலைபாதிப்பு, பருவகாலம் சார்ந்த நோய்கள் ஏற்படுதல், நீர்மின்சக்தி மற்றும் எரிசக்தி பாதி்ப்புகள், நீண்டகால பருவநிலை மற்றும் பேரிடர் பாதிப்புகள் ஏற்படலாம்.
நீர்வளத்துறையானது, தற்போதைய பருவமழை காலத்தில், முக்கியமான ஆறுகள், கால்வாய்கள், குளங்கள் போன்றவற்றில் உள்ள மதகுகளை சரியாக பராமரிக்க வேண்டும், ஆறுகள்,கால்வாய்கள் முக்கியமான நீர் போக்கிகளை தூர்வார வேண்டும், நீண்டகால முயற்சியாக, வெள்ள பாதிப்பை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
மழைநீர் கால்வாயில் கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவுகள், திடக்கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். குடிநீர் விநியோகத்தை முறையாக மேற்கொள்வதுடன், மழைநீர் சேகரிப்பு, மறுபயன்பாடு ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும்.
மேலும், வேளாண் துறையில், வேளாண்- பருவகால எச்சரிக்கையை விவசாயிகளுககு வழங்க வேண்டும், பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் போன்ற அமைப்புகளுக்கு தேவையான மின்சாரத்தை மின்துறை வழங்க வேண்டும்.
வெள்ள அபாயம் மற்றும் கடற்கரையோரங்களில் உள்ள மின்நிலையங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வெயில் காலத்துக்கு ஏற்ற மின்சார மேலாண்மையை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பரி்ந்துரைகளை பொதுப் பணித்துறை, பள்ளிக்கல்வித்துறை, இந்திய வானிலை ஆய்வு மய்யம், தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் வாரியாக வல்லுநர் குழு அளித்துள்ளது.
