சென்னை, அக்.18 –தலைமைத் தேர்தல் ஆணை யர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நேற்று (17.10.2026) தி.மு. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
- உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
- எஸ்அய்ஆர்க்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க.!
- பீகார் தேர்தல் காங்கிரசுக்கு அறிவுறுத்தல்!
- கரப்பான் பூச்சி ஜனதாக்கட்சித் தலைவர்கள் கைதுக்குக் கண்டனம்!
- சென்னை ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி பங்கேற்பு!
- த.வெ.க.விடம் சுரண்டித் தின்னும் காங்கிரசில் சிலர்!
- த.வெ.க. திரைமறைவில் நடத்தும் திருட்டு அரசியல்!
- ஊரை ஏமாற்ற ஒற்றை மனிதராக வந்த அமைச்சர்!
சென்னை, அண்ணா அறிவாலயம், தி.மு.க. அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற “தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்” தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளரும், மக்களவைத் தி.மு.க. குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி ராஜாத்தி கருணாநிதி, மாநிலங்களவைக் குழுத் தலைவரும், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளருமான திருச்சி சிவா, துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா உள்ளிட்ட மக்களவை, மாநிலங்களவை உறுப்பி னர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
‘தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும்!’ என்ற முதல் தீர்மானத்தில்,
‘‘முதன் முதலில் எஸ்அய்ஆர் தொடங்கப்பட்ட பீகார் மாநிலத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, அங்குப் பெருமளவில் வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்படும் செய்திகள் வந்தபோதே, 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதனைக் கண்டித்துக் குரல் எழுப்பியவர் நம் கழகத் தலைவர் அவர்கள். மேலும், இதனைக் கண்டித்து பீகாரில் “Voter Adhikar Yatra” என்ற பெயரில் நடைபெற்ற வாக்காளர் அதிகாரப் பயணத்திலும் அன்றைய முதலமைச்சரும் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டார். தி.மு. கழகத் துணைப் பொதுச் செயலாளரும் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்களும் உடன் இருந்தார்.
இதனையடுத்து, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் “எஸ்அய்ஆர் – சிறப்பு தீவிரத்திருத்தம்” என 27.10.2025 அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் “சதி வலையைத்தமிழ்நாட்டிலும் விரிக்கத் தயாராகி விட்டது பா.ஜ.க.” எனச் சுட்டிக்காட்டி போர்க்கொடிஉயர்த்தியவர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்அவர்கள் என்பதை இக்கூட்டம் பெருமிதத்துடன் பதிவு செய்கிறது.
“பருவமழை மற்றும் பண்டிகைக் காலமான நவம்பர், டிசம்பரில் எஸ்அய்ஆர் பணிகளை மேற்கொள்வது சாத்தியமற்றது” என்பதோடு, “வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்; வாக்குத் திருட்டை முறியடிப்போம்” என வும், “இந்த ஜனநாயக படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்” எனவும் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளிலேயே மிகத் தீவிரமான ஆவேசக் குரல் எழுப்பியது திராவிட முன்னேற்றக் கழகம்தான். ஆளுங்கட்சியாக இருந்துகொண்டே, தேர்தல் ஆணையத்தை தட்டிக் கேட்ட அரசியல் கட்சித் தலைவரும், மாநிலத்தின் முதலமைச்சரும் நம் தலைவரே ஆவார். நாடாளுமன்றத்திலும் நமது உறுப்பினர்கள் எஸ்அய்ஆர் மூலம் வாக்குரிமையைப் பறிப்பதை எதிர்த்து தொடர்ந்து குரலெழுப்பி வந்தார்கள்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
“தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்” என இரண்டாவது கட்டமாக எஸ்அய்ஆர்-அய்த் தேர்தல் ஆணையம் அறிவித்த 6 நாட்களில், தமிழ்நாட்டில் 2.11.2025 அன்று கழகத் தலைவர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, “பீகாரில் நடைபெற்ற எஸ்அய்ஆர் குளறுபடிகளைக் களையாமல் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்.அய்.ஆர். கொண்டு வருவது மக்களின் வாக்குரிமையை பறிப்பதாகும்” எனவும், “தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்றிடத் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வது” எனவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றியதும் தி.மு.க.தான்!
வழக்கு தொடுத்ததோடல்லாமல், “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என மாமல்லபுரத்தில் பிரமாண்டமானபயிற்சிக் கூட்டத்தை தி.மு.க. நிர்வாகிகளுக்கு நடத்தி, தேர்தல் ஆணையத்தின் அத்து மீறல்களால் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமை பறிபோய் விடக் கூடாது எனத் தி.மு.க.வை முழு வீச்சில் களத்தில் இறக்கி விட்டுச் செயல்பட வைத்ததையும் யாரும் மறுக்கவோ முடியாது. மறைக்கவோ முடியாது.
எஸ்அய்ஆர்க்கு எதிராகக்
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க.!
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க.!
“ஏன் எஸ்அய்ஆர்-அய் எதிர்க்கிறோம்?” என 9.11.2025 அன்று காணொலி மூலம் கழகத் தலைவர் அவர்கள் விரிவாக விளக்கி, இந்த ஜனநாயக விரோதச் செயலுக்கு எதிராக அனைவரையும் ஒருமுகமாகத் திரட்டி, களத்தில் நிற்க வைத்து, 11.11.2025 அன்று மாநிலம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது தி.மு.க.!
பீகார் தேர்தல் காங்கிரசுக்கு அறிவுறுத்தல்!
மாநிலத்தில் 2025 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு, நவம்பர் 15 அன்று மிக ஆழமான ஒரு கருத்தினை தி.மு.க. கழகத் தலைவர் அவர்கள் பதிவிட்டார். காங்கிரஸ் கட்சியின் பிடிவாதத்தால் அங்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் நிகழ்ந்த பிரச்சினைகள், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியை விட்டே வெளியேறித் தனியாகப் போட்டியிட்டது, பல தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் – இடதுசாரிகள் என ஒரே கூட்டணியைச் சேர்ந்தோர் ஒருவரை ஒருவர் எதிர்த்துக் களம் கண்டது ஆகியவற்றைக் குறிப்பாலுணர்த்தி, காங்கிரஸ் இவற்றைச் சரிசெய்துகொள்ள வேண்டுமென அதில் அறிவுறுத்தி இருந்தார்.
ஆனால், இவை எதுவுமே தேர்தல் ஆணை யம் செய்த தவறுகளை நியாயப்படுத்தி விட முடியாது எனவும், தேர்தல் ஆணையத்தின் மீதான மதிப்பு இதுவரை இல்லாத அளவு சரிந்துபோய் உள்ளதாகவும் கழகத் தலைவர் அவர்கள் அதே பதிவில் மிகக் கடுமையாகத் தேர்தல் ஆணையத்தைச் சாடியிருந்ததை நினைவூட்டுவது தற்போதைய அரசியல் சூழலில் அவசியமாகிறது.
பீகாரில் நடந்தது தமிழ்நாட்டில் நடந்துவிடக் கூடாதெனக் கழகச் செயல்வீரர்கள் இயன்றவரை உழைத்தும், பல பேரின் வாக்குரிமை பறி போனது. இவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல. பல ஆண்டுகளாக ஒரே முகவரியில் வசித்து வருபவர்களின் பெயர்களே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. இதுவே தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலித்தது.
எனவே, மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பையும் மீறி, இத்தகைய அநீதியை முன்னின்று நடத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவிநீக்கம் செய்யப்பட்டு, உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.
மாணவர் இயக்கங்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அடுத்த தீர்மானத்தில்,
‘‘தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்கள் மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் மாறுபட்ட கருத்துகளைப் புறந்தள்ளி, அவர்களுக்கு விவரங்களைத் தெரி விக்காமலும் தன்னிச்சையாகவும் ஒத்திசைவு இல்லா முடிவுகளைப் பல நேர்வுகளில் எடுத்தது குறித்து ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு 23 செப்டம்பர் 2026 அன்று விரிவான புலனாய்வுக் கட்டுரையை முதற்பக்கத்தில் வெளியிட்டது. அதையடுத்து, தமிழ்நாட்டில் இருந்து முதல் கண்டன அறிக்கை கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இருந்துதான் வந்தது. அரசியல் சட்டத்தை மதிக்காமல் தனியாவர்த்தனம் செய்து, அதிகார வரம்பு மீறல் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு. கழகத் தலைவர் அவர்கள் உறுதிபட அவ்வறிக்கையில் தெரி வித்திருந்தார். தொடர்ந்து தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரைகளிலும் இதுகுறித்து வெளிப்படையாகக் கண்டனத்தை வெளிப்படுத்தினார்.
‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் வெளியான கட்டுரையைத் தொடர்ந்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் பிற மாணவர் இயக்கங்களும் அக்டோபர் 10 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர். அவர்களின் போராட்டத்தை ஒடுக்க ஒன்றிய அரசு டில்லி மாநிலத்தின் அனைத்து வாயில்களையும் பூட்டி வைத்ததையும், மாணவர்களின் மீது காவல்துறையின் அடக்குமுறையை ஏவி விட்டதையும் தி.மு. கழகத் தலைவர் அவர்கள்தான் உடனடியாகக் கண்டித்தார்.
கரப்பான் பூச்சி ஜனதாக்கட்சித் தலைவர்கள் கைதுக்குக் கண்டனம்!
மேலும், அதே நாளில், முன்னாள் முதலமைச்சர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன், மமதா பானர்ஜி, மாணிக் சர்க்கார் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கும், “இது என்ன அறிவிக்கப்படாத நெருக்கடிநிலையா” எனக் கண்டனம் தெரிவித்தார். சென்னையிலும், போராடிய மாணவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்து அடைத்து வைத்தபோது, தி.மு. கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. இராசா மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மாணவர்களை விடுவிக்கக் கோரிப் போராட்டம் நடத்தினர். இதனையடுத்தே காவல்துறையினர் இளைஞர்களை விடுவித்தனர்.
சென்னை ஆர்ப்பாட்டத்தில்
கனிமொழி ராஜாத்தி கருணாநிதி பங்கேற்பு!
கனிமொழி ராஜாத்தி கருணாநிதி பங்கேற்பு!
அக்டோபர் 14 அன்று, கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதற்கும் தனது கண்டனத்தைக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பதிவுசெய்தார். இதற்கு, அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., டெரெக் ஓபிரையன், உள்ளிட்ட பலரும் நன்றி தெரிவித்துப் பதிவிட்டனர். நேற்று (17.10.2026) கூட, சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
எனவே, எஸ்அய்ஆர் இரத்து செய்யப்பட வேண்டுமென்பதிலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டுமென்பதிலும் கழகத்தின் நிலைப்பாடு தெளிவானது; உறுதியானது; நிலையானது. இதற்காக ஜனநாயகச் சக்திகள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்குக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ள தி.மு.க., அதேவேளையில், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகம் எந்த நடவடிக்கையிலும் பங்கேற்க இயலாது என்பதையும் மீண்டும் தெரிவித்துள்ளது.
‘‘தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் அதிகார வரம்பு மீறலுக்கு எதிராகவும், மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் S.I.R.-க்கும் எதிராகவும் மாணவர்கள், இளைஞர்கள் நடத்தும் போராட்டம் மாபெரும் எழுச்சியை இந்திய அளவில் ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசால் இத்தனை ஆண்டுகளாகச் செய்ய முடியாத ஒன்றை இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்திக் காட்டியுள்ள தைக் கண்டு அரண்டுபோயுள்ள காங்கிரஸ் கட்சி, முதலில் விலகி நின்று வேடிக்கை பார்த்ததை நாடறியும். பின்பு, அதற்குப் பெருகும் ஆதரவினால் வேறு வழியில்லாமல் அவர்களது போராட்டத்தில் இணைந்து ஆதரிப்பதாகத் தற்போது காட்டிக் கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
அடுத்தவர் உழைப்பைத் திருடித் தின்பதும், பிறர் முதுகில் சவாரி செய்துவிட்டு முதுகில் குத்துவதும் காங்கிரஸ் கட்சியின் பிறவிக் குணம் என்பதைக் கடந்தகால அரசியல் வரலாற்றை அறிந்தவர்கள் உணர்வார்கள். எனவே, இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஆனால், இந்திய அளவில் எஸ்அய்ஆர்-அய் எதிர்ப்பதாக நாடகமாடும் காங்கிரஸ் கட்சி, கேரளம் மற்றும் தமிழ்நாடு குறித்துப் பேச மறுப்பது இரட்டை நிலைப்பாடு ஆகும். எஸ்அய்ஆர்-இல் தவறுகள் நடந்திருக்கின்றன என்றால் அது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். மாநிலத்துக்கு ஒரு நிலைப்பாடு என மாற்றுவது இரட்டை வேடமே.
த.வெ.க.விடம் சுரண்டித் தின்னும்
காங்கிரசில் சிலர்!
காங்கிரசில் சிலர்!
குறிப்பாகத் தமிழ்நாட்டில், அதிகமாக வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் எல்லாம் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளதை ‘பிசினஸ் லைன்’ நாளேடு புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டிச் செய்தி வெளியிட்ட பின்னரும், தமிழ்நாட்டில் எல்லாம் சரியாக நடைபெற்றுள்ளது என அவர்கள் கூறி வருவது பச்சையான, அருவருப்பான சந்தர்ப்பவாதம் ஆகும்’’ என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
த.வெ.க. திரைமறைவில் நடத்தும்
திருட்டு அரசியல்!
திருட்டு அரசியல்!
‘‘ஒருபுறம், த.வெ.க.வைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் “எஸ்அய்ஆர்-அய் எதிர்க்கிறோம் என்றும், எஸ்அய்ஆர் இல்லாமல் இருந்திருந்தால் 170 தொகுதிகளை வென்றிருப்போம்” என்றும் பேசி வருகின்றனர். நேற்று முன்தினம் த.வெ.க.வுடன் ஒரே மேடையில் நின்று போராட்டம் நடத்திய ஜனநாயக சக்திகள், அக்கட்சித் தலைவர் விஜய் இதுவரை எஸ்அய்ஆர் குறித்தோ ஞானேஷ் குமாரைப் பதவிநீக்குவது குறித்தோ பேச மறுப்பது, தேர்தல் ஆணையம் நியமித்த தலைமைச் செயலாளருக்குத் த.வெ.க. அரசில் பணி நீட்டிப்பு வழங்கப்படுவது, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, ஒன்றிய பா.ஜ.க. அரசால் தமிழ்நாட்டுக்குப் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது ஆகிய அனைத்தும் திரைமறைவில் நடைபெறும் நேர்மையற்ற ‘திருட்டு அரசியல்’ என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூட்டாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், விஜய் ஏன் இணையவில்லை என காங்கிரஸ் ஏன் கேட்கவில்லை என்று கேள்வி எழுப்புள்ள தி.மு.க., காங்கிரசின் ஆதரவை வாங்கிக் கொண்டு, பா.ஜ.க.வுடன் இரகசிய உறவில் இருக்கும் த.வெ.க.வைக் கண்டிக்காத காங்கிரஸ் கட்சி தி.மு.க. மீது குற்றம் சுமத்துவது நகைப்புக்குரியது என்றும் கூறியுள்ளது.
ஊரை ஏமாற்ற
ஒற்றை மனிதராக வந்த அமைச்சர்!
ஒற்றை மனிதராக வந்த அமைச்சர்!
S.I.R. குறித்து தேர்தலுக்குப் பிறகு எதையும் பேசாத விஜய் அவர்கள் இந்தியா கூட்டணியின் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்திலும் போராட்டத்திலும் எங்கேயும் பங்கேற்கவில்லை என்றும், அந்தக் கூட்டத்தில் த.வெ.க.வில் இருந்து, ஊரை ஏமாற்ற ‘ஒற்றை மனிதராய்’ கண்துடைப்புக்காக வந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகனின் வாயில் இருந்தும் ‘பா.ஜ.க.’ என்றோ, ‘தேர்தல் ஆணையம்’ என்றோ, ‘ஞானேஷ் குமார்’ என்றோ தப்பித் தவறியும் வரவில்லை என்பதையும், காங்கிரசும், த.வெ.க.வும் இரட்டை வேடம் போடுவதையும் குற்றம் சாட்டியுள்ளது.
