சென்னை, மே 7 நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 16 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அதிமுக கட்சி மட்டும் 167 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த 167 தொகுதிகளில் 16 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.அதன்படி திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்ட சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் குறைந்த வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராம் டெபாசிட் இழந்துள்ளார். இவர் 16,507 வாக்குகள் மட்டும் பெற்று டெபாசிட் இழந்தார். ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெறும் 18,420 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். எழும்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அபிஷேக் ரங்கசாமி 18,191 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.
சென்னையில் அனைவரின் கவனத்தை பெற்ற ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி திரு.வி.க. நகரில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். அவர் 23,304 வாக்குகள் மட்டுமே வாங்கி டெபாசிட் இழந்தார். வில்லிவாக்கத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் 19,338 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் 26,892 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி 59,290 வாக்குகளை பெற்றும் மாதவரம் தொகுதியில் டெபாசிட் இழந்தார். தூத்துக்குடியில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சித செல்லபாண்டியன் 26,213 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார். திருச்சுழியில் திமுக அமைச்சர் தங்கம் தென்னரசை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் 25,581 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். மதுரை வடக்கில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன் 24,982 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பி.சந்தானகிருஷ்ணன் 18,430 வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்துள்ளார். பாளையங்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சி.வி.சேகர் 49,575 வாக்குகள், கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் 27,307 வாக்குகள், மதுரை கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.மகேந்திரன் 31,016 வாக்குகள், திருவொற்றியூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.குப்பன் 28,320 வாக்குகள் என 16 அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 16 தொகுதிகளில் டெபாசிட் இழந்த அ.தி.மு.க.
Leave a Comment
