மும்பை, அக். 18- எதிர்வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தங்களது கே.ஒய்.சி தரவுகளில் உள்ள பயனரின் பெயரை இன்கம்மிங் கைப்பேசி அழைப்பின் போது அந்த அழைப்பை பெறுபவரின் கைப்பேசித் திரையில் கட்டாயம் தெரியுமாறு (டிஸ்பிளே) செய்ய வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
‘உங்களுக்கு கடன் வேணுமா?’, ‘கிரெடிட் கார்டு அப்ரூவ் ஆகி இருக்கிறது’, ‘நிதி உதவி வேணுமா?’ என தொலைபேசி வழியே பயனர்கள் அறியாத புதிய எண்களில் இருந்து தொல்லை கொடுக்கும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் வேண்டாத நபர்களும் புதிய எண்களில் இருந்து கைப்பேசி பயனர்களை தொடர்பு கொண்டு இம்சிப்பார்கள்.
இருப்பினும் ட்ரூ காலர் போன்ற செயலி மூலம் பயனர்கள் தங்களுக்கு வேண்டாத அல்லது ஸ்பேம் அழைப்புகளை எளிதில் அடையாளம் காண முடியும். இத்தகைய சூழலில் இந்த ‘காலர் அய்டி’-யை வரும் நவ.1 முதல் இந்தியாவில் உள்ள அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் பயனர்களுக்கு தவறாமல் தெரியுமாறு செய்ய வேண்டும் என தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
‘காலர் நேம் பிரசென்டேஷன்’ (CNAP) என அறியப்படும் இந்த அம்சம் சார்ந்து கடந்த சில ஆண்டு களாகவே கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக ஒரே டெலிகாம் நிறுவனத்தை சேர்ந்த சந்தாதாரர்கள் அழைப்பு மேற்கொள்ளும் போது அவர்களின் பெயரை திரையில் தெரியுமாறு செய்கின்றன சம்பந்தப்பட்ட அந்தந்த நிறுவனங்கள்.
இத்தகைய சூழலில் வரும் நவ.1 முதல் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் சிஎன்ஏபி அம்சத்தை மற்ற டெலிகாம் நிறுவன பயனர்களுக்கு தெரியுமாறு செய்ய வேண்டும் என்ற உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் வேறு கைப்பேசியிலிருந்து வரும் (இன்கம்மிங்) அழைப்பை பெறுகின்ற பயனர், அழைப்பது யார் என்பதை அறிய முடியும். இந்த அம்சம் அழைப்பை பெறும் பயனரின் தொடர்பில் சேமிக்காத எண்களுக்கு மட்டுமே பொருந்தும் என தகவல்.
மேலும், 18 வயதுக்கு கீழ் உள்ள மைனர்கள் பயன்படுத்தும் சிம் கார்டுகள் என்றால் அவர்களது பெற்றோரின் பெயர் திரையில் தெரியும் என தகவல். இந்த அம்சம் காலர் அய்டி-யை மறைக்கும் ‘சிஎல்அய்ஆர்’ அம்சம் பெற்றுள்ள பயனர்களுக்கு பொருந்தாது.
இந்த சிஎல்அய்ஆர் பட்டியலின் கீழ் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மூத்த அதிகாரிகள் மற்றும் உளவு அமைப்புகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
