பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 53ஆம் ஆண்டு விழா ஒரு மனிதனை முழுமையாக வெளிக்கொணர்வது கல்வியே! முன்னாள் மாணவியும், மருத்துவருமான சாவித்திரி சுதாகர் உரை

4 Min Read
- Advertisement -

திருச்சி, அக்.17 திருச்சி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 53ஆம் ஆண்டு விழா 16.10.2026 அன்று மாலை 03.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் உள்ள கலைவாணர்  என்.எஸ். கிருஷ்ணன் அரங்கத்தில் ‘‘சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் செயலர்  முனைவர் வீ.அன்புராஜ் அவர்கள் தலைமையேற்க, சிறப்பு விருந்தினராக  பள்ளியின் முன்னாள் மாணவியும், மருத்துவருமான  சாவித்திரி சுதாகர்  பங்கேற்றார்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் பள்ளி மாணவியர் வரவேற்பு நடனம் மூலம் அனைவரையும் வரவேற்றனர்.  பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவி  பா. ஆஃபிலா ஹசின்  அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.   பள்ளியின் செயலர் முனைவர். வீ.அன்புராஜ்  சிறப்பு விருந்தினருக்கு பயனாடை மற்றும் சிறப்பு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.  பள்ளியின் தலைமையாசிரியை சு.பாக்கியலெட்சுமி   2026ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்து, பள்ளியின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.

பெரியாரின் கொள்கைகளான ஆண் பெண் வேறுபாடு கூடாது, பெண்களுக்கு கல்வி அவசியம், எதையும் அறிவியல் நோக்கில் அணுக வேண்டும். பள்ளியில் பயிலும் மாணவிகளின் சாதனைகள் பகுத்தறிவு சிந்தனையோடு வாழ வேண்டும் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ் நாடகம், பெரியார் பார்வையில் கல்வி என்ற தலைப்பில் ஆங்கில நாடகம் மற்றும் மேற்கத்திய நடனம், பாரம்பரிய நடனம் ஆகியவற்றின் மூலம் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தளித்தனர்.

திராவிடர் கழகம்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளர்  கிருஷ்ணகுமார், பெரியார் கல்வி வளாகத்தின்  அனைத்து முதல்வர்கள்,  தலைமையாசிரியர்கள்  ஆகியோர் விழாவில் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர். 2025-2026ஆம் கல்வியாண்டில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 100 சதவீத வருகைப்பதிவு பெற்ற மாணவிகளுக்கும் விருது வழங்கி பாராட்டப்பட்டது.

2025-2026ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் இயற்பியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற எம். மஞ்சுசிறீ என்ற மாணவிக்கு சித்தார்த்தன் கணபதி நினைவாக ரொக்கப்பரிசும், மருத்துவர் தசரதன் திலகவதியால் வழங்கப் படும் பரிசுத்தொகை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் 12ஆம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற எ.ருத்ரவர்ஷினி என்ற மாணவிக்கும், 10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற ஆர். லாவண்யா என்ற மாணவிக்கும் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

2025-2026ஆம் கல்வியாண்டில் அரசுப் பொதுத்தேர்வில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சியை ஈட்டித் தந்த ஆசிரியர்களுக்கு, செயலர் வீ. அன்புராஜ் அவர்களால் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர் உரை

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் மாணவியும், மருத்துவருமான சாவித்திரி சுதாகர், M.B.B.S., D.A., FPPCM (மயக்கவியல், வலி நிவாரண மற்றும் நோய்துயர் தணிப்பு மருத்துவர்) தனது உரையில், ‘‘நான் எவ்வளவு தூரம் கல்வியில் உயர்ந்து நின்றாலும்; அதற்கு அடிப்படை இப்பள்ளியே என்பதை நான் பெருமையுடன் கூறுகிறேன். மரம் எவ்வளவு தூரம் வளர்ந்தாலும் அதற்கு அடிப்படையான வேரை எந்த நாளும் மறப்பதில்லை. அது போன்றே இப்பள்ளி எனக்கும் வேர் போன்றதே. தோல்வியை கண்டு அஞ்சாதீர்கள். முயற்சி செய்யுங்கள். “தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்” என்ற திருவள்ளுவரின் வாக்கை மெய்பிக்கும் வகையில் ஒவ்வொரு மாணவர்களும் முயற்சி செய்தால் அதன் பயன் கட்டாயம் கிடைக்கும். ஒரு மனிதனை முழுமையாக வெளிக்கொணர்வது கல்வியே என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்று மாணவர் களுக்கு அறிவுரை வழங்கினார். அலைபேசியின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும் அதையுமே சரியாக பயன்படுத்தவேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவரும் சாதனையாளர்களாக திகழ வேண்டும். இதுவே நம் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொடுக்கும் பரிசு. மாணவர்களுக்கு படிப்பு எப்படி முக்கியமோ, அதே போன்று தூக்கமும் அவசியம் என்பதை உணர்ந்து உடலையும் உள்ளத்தையும் பாதுகாக்க வேண்டும்’’ என்று கூறி தன்னுடைய உரையை நிறைவு செய்தார்.

பள்ளி செயலர் உரை

பெரியார் கொள்கையை ஏற்றவர்கள் மட்டுமே தன்னுடைய வாழ்விணையரையும் படிக்க வைத்து முன்னேற்றமடையச்  செய்வார்கள் என்பதை சிறப்பு விருந்தினர் டாக்டர். சாவித்திரி சுதாகர்  தன்னுடைய உரையில் கூறியதிலிருந்து புரிந்துகொண்டேன். படித்த பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக வருவது எனக்கு பெருமகிழ்ச்சி என தன்னுடைய உரையில் செயலர் அவர்கள் கூறினார். இப்பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவியர்களும் கல்வியில் உயர்ந்து நல்ல நிலையை அடைந்து இப்பள்ளிக்கே சிறப்பு விருந்தினர்களாக வரவேண்டும் என்பதே என விருப்பம் எனவும், இங்கு வருகை தந்திருக்கும் பெற்றோர்களை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு காரணம் இங்கு பணிபுரியக் கூடிய என்னுடைய ஆசிரியர்களே அவர்களுக்கு என்னுடைய சார்பாக நன்றிகள் என கூறி அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இறுதியாக 11ஆம் வகுப்பு  மாணவி பா. அன்னப்பூரணி நன்றி நவில நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *