டோக்கியோ, அக்.17 தான் மதிக்கத் தெரிந்த அதே விஷயத்தை, கேள்வி கேட்டு, அதை உடைக்கவும் தெரிந்த ஒரு மனிதர்தான் பெரியார். இதில் எந்தத் தயக்கமும் இருந்ததில்லை அவருக்கு, எதையும் உடைப்பதற்கு. அது வழிவழியாக வந்த சாத்திரங்களாக இருக்கட்டும்; கடவுளாக இருக்கட்டும், கடவுள் சிலைகளாக இருக்கட்டும், கோயில் பற்றிய ஒரு புனிதம் என்று நினைக்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கட்டும், சடங்குகளாக இருக்கட்டும், திருமணம் என்பதாக இருக்கட்டும், எதுவாக இருந்தாலும், அதைக் கேள்வி கேள்! அதை உடை, கட்டமை என்று சொன்ன, அதேபோல் செய்து காட்டிய ஒரு மனிதர் இருக்கிறார் என்றால், அது தந்தை பெரியார் அவர்கள்தான் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்கள்.
இரண்டாம் நாள் மாநாடு
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், கடந்த 11, 12 ஆகிய நாள்களில் நடைபெற்ற அய்ந்தாவது பன்னாட்டு பெரியார் மனிதநேய மாநாட்டின் இரண்டாம் நாளில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
மட்டற்ற மகிழ்ச்சியும்,
பெருமையும் அடைகிறேன்!
அய்ந்தாவது மாநாடாக நடைபெறக்கூடிய இந்த பெரியார் பன்னாட்டமைப்பின் மனிதநேய மாநாட்டில் பங்கேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், இம்மாநாட்டினை வெளிநாடுவாழ் தமிழர் இந்திய சங்கத்தினர் ஜப்பானில் மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், பொருளாளர் செந்தில்குமார் அவர்களே, கமலக்கண்ணன் அவர்களே, குன்றாளன் அவர்களே, கோவிந்தபாசம் அவர்களே!
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உரையாற்றி இருக்கக்கூடிய எங்களுடைய ஆசிரியர் அவர்களே! பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்வதற்காக, பல நாடுகளில் இருந்து வந்து, இங்கே மேடையிலே உரையாற்றி, பார்வையாளர்களாகவும் பங்கேற்றுக் கொண்டிருக்கக்கூடிய அத்தனை சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல இவ்வளவு பெரிய ஒரு நிகழ்ச்சி, இத்தனை பேர் கலந்து கொள்ளக்கூடிய ஒரு நிகழ்ச்சி யினை ஏற்பாடு செய்வது என்பது ஒரு மிகப்பெரிய சாதனை. அந்தச் சாதனையை செய்து இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும், அத்தனை வாலண்டியர்ஸ்க்கும் என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கி றேன்.
பெரியாரைப்பற்றி, இங்கே இருக்கக்கூடிய அத்தனை பெரியாரிஸ்டுகளிடமும் கிட்டத்தட்ட இரண்டு நாள்கள் எல்லோரும் உரையாற்றியுள்ள நிலையில், நேற்று பிரின்ஸ் என்னாரெசு பெரியார் பேசினார்.
மனிதத்திற்கு எதிரானதை அது எதுவாக இருந்தாலும், நான் கட்டுடைப்பேன் என்றவர் தந்தை பெரியார்!
இவ்வளவு பேர் பேசிய பிறகு, பெரியாரை உங்களிடம், அதுவும் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவுத் தூக்கத்திலே இருக்கக்கூடிய உங்களிடையே பேசக்கூடிய ஒரு நிலை யிலே நான் நின்று கொண்டிருக்கிறேன். பெரியார் என்று சொல்லும்பொழுது, அவரே சொன்ன அவருடைய ஒரு கோட்ஸ். அதுதான் அவர். ‘‘ஒரு பெரிய நாடு, ஒரு சிறிய நாட்டை ஒடுக்கினால், நான் அந்தச் சிறிய நாட்டின் பக்கம் நிற்பேன். அந்தச் சிறிய நாட்டில் உள்ள பெரும்பான்மை மதம், சிறுபான்மை மதங்களை ஒடுக்கினால், நான் சிறுபான்மை மதங்களின் பக்கம் நிற்பேன். அந்தச் சிறுபான்மை மதத்தில், ஜாதி இருந்து, ஒரு ஜாதி, மற்றொரு ஜாதியை ஒடுக்கினால், நான் ஒடுக்கப்படும் ஜாதியின் பக்கம் நிற்பேன். ஒடுக்கப்படும் ஜாதியில் ஒரு முதலாளி, தன் தொழிலாளியை ஒடுக்கினால், நான் அந்தத் தொழிலாளியின் பக்கம் நிற்பேன். அந்தத் தொழிலாளி வீட்டிற்குச் சென்று, தன் மனைவியை ஒடுக்கினால், நான் அந்தப் பெண்ணின் பக்கம் நிற்பேன். மொத்தத்தில் ஒடுக்கும் முறை என் எதிரி.’’ இதுதான் பெரியார். ‘‘எந்த விதத்தில் மனிதர்கள், மனிதர்களை ஒடுக்குகிறார்கள்? அது மதமாக இருக்கட்டும், மொழியாக இருக்கட்டும், நாடு என்ற ஒரு பிம்பமாக இருக்கட்டும், அல்லது சாத்திரங்களாக இருக்கட்டும், ஜாதி என்ற கட்டமைப்பாக இருக்கட்டும். கடவுள் என்ற ஒரு பேரமைப்பாக இருக்கட்டும். எதுவாக இருந்தாலும், மனிதத்திற்கு எதிரான ஒன்றை, அது எதுவாக இருந்தாலும், நான் கட்டுடைப்பேன்’’ என்றவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.
மனித நேயத்திற்கு மேலே
வேறு எதுவுமே கிடையாது என்று சொன்ன ஒரு மாமனிதர் தந்தை பெரியார்!
மனிதத்திற்கு மேலே, மனித நேயத்திற்கு மேலே வேறு எதுவுமே கிடையாது என்று சொன்ன ஒரு மாமனிதர் தந்தை பெரியார் அவர்கள். இந்தக் கடவுள் மறுப்பு, சமூகத்தை எதிர்த்துக் கேள்வி கேட்க கூடியதை, இதற்கு முன்பு யாரும் செய்தது இல்லையா என்றால், நிறைய பேர் செய்திருக்கிறார்கள். எல்லா சமூகங்களிலும், மதம் என்று எடுத்துக்கொண்டீர்கள் என்றால், எல்லா மதங்களும் சொல்லக்கூடியது, ‘‘கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார்.’’ ஆனால், ஒரே கடவுள், இந்த உலகத்தைப் படைக்கவில்லை. ஆப்பிரிக்காவில், வேறு ஒரு கடவுள், இந்த உலகத்தைப் படைத்திருக்கிறார். இந்தியாவை வேறு கடவுள்கள் படைத்திருக்கிறார்கள். இன்னொரு ரீஜனில் இருக்கக்கூடியவர்கள். ‘Geography depends the God’’ அவர்கள் வாழ்க்கை முறை, அவர்களுடைய தட்பவெப்ப நிலை, அவர்கள் செவிவழி வந்த கதைகள், அவர்கள் கடந்து வந்திருக்கக்கூடிய சரித்திரங்கள், பின்புலங்கள் இவையெல்லாம்தான் அந்தக் கடவுளைக் கட்டி அமைக்கக்கூடிய ஒன்றாக அது எப்பொழுதுமே இருந்திருக்கிறது.
சார்வாகம் கேட்டதும்
இந்த நாட்டிலே இருந்திருக்கிறது!
அதனால், அந்தக் கடவுள் நம்பிக்கையையும், மதம் என்ற நிறுவனத்தையும் (Institution of Religion) கேள்விக்குட்படுத்தி, அவற்றுக்கு எதிரான கருத்து களைச் சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் தொடர்ந்து முன்வைத்து வந்திருக்கிறார்கள். ஏன்? இந்தியாவில்கூட சார்வாகம் போன்ற கடவுள் மறுப்பு மற்றும் பொருள்முதல்வாதச் சிந்தனை மரபுகள் இருந்திருக்கின்றன. மதத்தைக் கேள்வி கேட்கக்கூடிய ஒன்றானவை. யாகங்கள் செய்யும் பொழுது, கடவுளுக்கு நாங்கள் யாகத்தின் வழியாக, அந்த யாகத்தில் போடுகிற, அந்த நெருப்பில் போடுகிற விஷயங்களை, நாங்கள் நேராகக் கடவுளுக்கு அனுப்புகிறோம் என்று அந்த யாகம் செய்யும் புரோகிதர்கள் சொன்ன பொழுது, சார்வாகம், கேட்டது, ‘‘சரி கடவுளுக்கே உன்னால் அனுப்ப முடிகிறது என்றால், நீ பக்கத்து ஊருக்கோ, வெளியூருக்கோ போகும்போது, ஏன் சாப்பாட்டைப் பேக் பண்ணி எடுத்துக் கொண்டு போகிறீர்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்களை, யாகம் ஒன்றை வளர்த்து, அந்த நெருப்பில் சாப்பாட்டைப் போடச் சொன்னீர்கள் என்றால், நீங்கள் எடுத்துக் கொள்ளலாமோ? ‘‘இதை நான் கேட்கவில்லை, கனிமொழி கேட்டால், நிறைய பிரச்சினைகள் வரும்.’’ சார்வாகம் கேட்டதும் இந்த நாட்டிலே இருந்திருக்கிறது.
அதேபோல, சித்தர்கள் வாழ்ந்த மண், இந்த மண். அவர்கள் ‘‘இறைச்சி தோல் எலும்பினுள் இலக்கமிட்டு இருக்குதோ’’ என்று, ஜாதியைப் பற்றிக் கேள்வி கேட்டார்கள். இறைச்சியில், தோலில் உங்கள் ஜாதி, அந்த டிஎன்ஏ முத்திரைக் குத்தியிருக்கிறதா? என்று கேட்ட சிவவாக்கியர், ஒரு சித்தர்தான்.
அதேபோல, ‘‘சாத்திரங்கள் பேசுகின்ற சட்டநாத பட்டரே! வேர்த்து, இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ? டாக்டர் தான் வந்து உதவ வேண்டும், வேதம் வந்து உதவாது’’ என்று கேட்ட சிவவாக்கியரும், இந்த மண்ணில் தான் பிறந்தார். நான் கேட்டால், தவறு; அருள்மொழி கேட்டால் தவறு. சிவவாக்கியர் கேட்டிருக்கிறார். இத்தனை எதிர்வினைகள். கவுதம புத்தர், அவர் அந்த ஆர்கனைஸ் ரிலிஜனுக்கு எதிராக, ஒரு சிந்தனையை நிறுவியவர்தான். ஆனால், இவர்கள் எல்லாமே எழுப்பிய, இதுபோன்ற நிறைய கேள்விகள் இருந்திருக்கின்றன. இவர்கள் எல்லாமே, ‘‘It was from Individual – நான், என்னை என்னுடைய பயணத்தை, என்னுடைய வழியை, அதைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்காக, அதை ஒரு தெளிவான ஒன்றாக மாற்றிக் கொள்வதற்காகக் கேட்கப்பட்ட கேள்விகள். எனக்குள் ஒரு தேடலை, எனக்குள் ஒரு தெளிவை நான் தேடிக்கொண்டு, கண்டுபிடிப்பதற்காக கேட்கப்பட்ட கேள்விகள் தான் இவையெல்லாம்’’ என்கின்ற நிலை.
நம் எல்லோருக்குமான
கேள்விகளைக் கேட்ட ஒருவர் பெரியார்!
ஆனால், இந்த சமூகத்திற்கான கேள்வியை கேட்டவர் பெரியார் மட்டும்தான். நம் எல்லோ ருக்குமான கேள்விகளைக் கேட்ட ஒருவர் பெரியார். It was total iconoclast – அவருக்குப் ‘புனிதம்’ என்று எதுவுமே கிடையாது. ‘புனிதம்’ என்ற ஒரு சொல் என்னவென்றே தெரியாத ஒரு மனிதன் வாழ்ந்தார் என்றால், இங்கே உரையாற்றும்போதுகூட சொன்னார்கள், He respected people. ஒவ்வொருவருடைய நம்பிக்கைகளை மதிக்கத் தெரிந்த ஒருவராக இருந்திருக்கிறார். ஆனால், தான் மதிக்க தெரிந்த அதே விஷயத்தை, கேள்வி கேட்டு, அதை உடைக்கவும் தெரிந்த ஒரு மனிதர்தான் பெரியார். இதில் எந்தத் தயக்கமும் இருந்ததில்லை அவருக்கு, எதையும் உடைப்பதற்கு. அது வழிவழியாக வந்த சாத்திரங்களாக இருக்கட்டும்; கடவுளாக இருக்கட்டும், கடவுள் சிலைகளாக இருக்கட்டும், கோயில் பற்றிய ஒரு புனிதம் என்று நினைக்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கட்டும், சடங்குகளாக இருக்கட்டும், திருமணம் என்பதாக இருக்கட்டும், எதுவாக இருந்தாலும், அதைக் கேள்வி கேள்! அதை உடை, கட்டமை என்று சொன்ன, அதேபோல் செய்து காட்டிய ஒரு மனிதர் இருக்கிறார் என்றால், அது தந்தை பெரியார் அவர்கள்தான். அதே நேரத்தில், என்னையும் கேள்வி கேள்! என்று சொல்வதற்கு ஒரு மனிதனுக்குத் தைரியம் வேண்டும். ‘‘நான் சொல்வது எதுவாக இருந்தாலும், அதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. என்னையும் கேள்வி கேள்!’’ என்றவர் பெரியார்.
பெரியார் எதுவோ,
அதுதான் பெரியார்!
தலைவன் என்று ஒருவர் உருவான பிறகு, அவர்க ளிடம் கேள்வி கேட்கக் கூடாது; அவர்களோடு ஆர்க்யூமெண்ட் இருக்கக்கூடாது. அவர்களோடு விவாதம் செய்யக்கூடாது. நிறைய தலைவர்கள் செய்தியாளர்களையே சந்திப்பதில்லை. அது இப்பொழுது வாழையடி வாழையாக வர ஆரம்பித்துவிட்டது. இந்தியாவில், நிறைய தலைவர்கள், புதிய தலைவர்கள், பழைய தலைவர்கள் யாருமே செய்தியாளர்களைச் சந்திப்பது இல்லை. ஏனென்றால், அவர்களைக் கேள்வி கேட்டால், அவர்களுக்குப் பிடிப்பதில்லை. இதில் இரண்டு விதம் இருக்கிறது. அவர்கள், அவர்களைப்பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்தப் பிம்பம் உடைந்துவிடாமல் பார்த்துக் கொண்டால்தான், அதைக் கொண்டு செலுத்த முடியும். பெரியாருக்குப் பிம்பம் எல்லாம் கிடையாது. அதனால், தான் கொண்டு செலுத்த வேண்டிய எதுவும் கிடையாது. பெரியார் எதுவோ, அதுதான் பெரியார்.
(தொடரும்)
