டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஜந்தர் மந்தரில் சி.ஜே.பி. தலைவர்கள் போராட்டம் – காவல்துறையின் தடையை மீறினர்! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தில், சி.ஜே.பி. தலைவர்கள் தடுப்புகளைத் தாண்டி ஜந்தர் மந்தரை அடைந்தனர்; தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
* ஊடகங்கள் மீதான காவல்துறை அடக்குமுறைக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, கருத்துச் சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கக் கோரின.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* டில்லியில் போராட்டங்கள் தொடர்வதால் அக்டோபர் 20 வரை கூடுதல் காவல் படை! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடையும் எனக் கருதி, டில்லியில் 273 CAPF கம்பெனிகளின் பாதுகாப்புப் பணியை அக்டோபர் 20 வரை ஒன்றிய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது.
* ஜனநாயகம் மீட்கப்படும் வரை போராட்டம் தொடரும் – ராகுல் காந்தி! வாக்குத் திருட்டுக்கு எதிராகவும் ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் எதிர்க்கட்சிகளும் குடிமைச் சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து போராடும் என ராகுல் காந்தி உறுதியளித்தார். 2029 தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் தயாராக வேண்டும் என அமித்ஷா கூறிய நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) தொடர்பான அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தேர்தல் நடுவர் பாரபட்சமாக தெரிந்தால் வெற்றியையே மக்கள் கேள்விக்குள்ளாக்குவர் – முன்னாள் தேர்தல் ஆணையர் லவாசா! தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்திய லவாசா, கூட்டக் குறிப்புகள் வெளியிடப்படாவிட்டால் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டதா அல்லது பெரும்பான்மை அடிப் படையிலா என்பதை எவ்வாறு அறிய முடியும் எனக் கேள்வி.
* கருநாடக அரசின் எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீடு உயர்வை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது! எஸ்.சி. இடஒதுக்கீட்டை 15%-லிருந்து 17%-ஆகவும், எஸ்.டி. இடஒதுக்கீட்டை 3%-லிருந்து 7%-ஆகவும் உயர்த்திய சட்டப்பிரிவுகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது; ஓபிசி இடஒதுக்கீடு 32%-ஆகத் தொடர்ந்தாலும், மொத்த இட ஒதுக்கீடு 50%-அய் தாண்டியது காரணம்.
தி இந்து:
* நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்க படிவம் 6 பயன்படுத்துவது முரண்பாடு – உச்சநீதிமன்றத்தில் மனு! சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது பெயர் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்க்கப்படுவதற்கு படிவம் 6 நிரப்ப வேண்டும் என்பது அடிப்படை முரண்பாடு என மனுதாரர் தெரிவித்துள்ளார். முதல் முறையாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிப்பதாகவே படிவம் 6-இல் உறுதியளிக்க வேண்டியுள்ளது என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மனுவை சமூக ஆர்வலர்களான அஞ்சலி பரத்வாஜ் மற்றும் அம்ரிதா ஜோஹ்ரி ஆகியோர் தாக்கல் செய்தனர்.
* ஓன்றிய அமைச்சர் எல். முருகனின் பதவி விலகல் – அமைச்சரவை மாற்றம் குறித்த ஊகங்கள் தீவிரம்!: ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன், தனது அமைச்சர் பதவி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் நேற்று (அக். 13) விலகினார். இதனால், விரைவில் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஜந்தர் மந்தர் போராட்டத் தள அங்கீகாரம் ரத்து, பழிவாங்கும் நடவடிக்கை – போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சிகள் உறுதி! ஜந்தர் மந்தரைப் போராட்டத் தளப் பட்டியலிலிருந்து நீக்கிய மோடி அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், போராட்டங்களை டில்லியின் புறநகர்ப் பகுதிகளுக்குத் தள்ளும் சதி எனக் குற்றம் சாட்டின. “ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டம் தொடரும்” என ராகுல் காந்தி அறிவித்ததுடன், விவசாயிகள் மற்றும் தொழிலாளர் அமைப்புகளும் விரைவில் போராட்டத்தில் இணையும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
– குடந்தை கருணா
