இன்னும் லட்சுமணக் கோடு என்று கதை கட்டுவதா? அழித்தே ஆக வேண்டும்!

- Advertisement -

கருநாடக அரசு அம் மாநில அரசுப் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் ஒடுக்கப்பட்ட, பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை உயர்த்திய 2022-ஆம் ஆண்டுச் சட்டத்துக்கு பெங்களூரு உயர்நீதிமன்றம் தடை விதித் துள்ளது. அச் சட்டத்தின்படி, 15 சதவிகிதமாக இருந்த ஒடுக்கப்பட்ட பட்டியல் ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டை 3 சதவிகிதம் அதிகமாக 18 சதவிகிதம் ஆக்கியும், பட்டியல் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை 3 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக உயர்த்தியும் சட்டமியற்றியது.   இதற்கு எதிராக  மகேந்திர குமார் மித்ரா மற்றும் பலர் தொடர்ந்த வழக்கில், அரசியலமைப்பின் 14, 15, 16 ஆகியவற்றை  இச் சட்டம் மீறுகிறது என்று கூறி அதனை ரத்து செய்துள்ளது கருநாடக உயர்நீதிமன்றம்.

எப்படி மீறுகிறது? ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 32 சதவிகிதமாக இருக்கிறது. ஒடுக்கப்பட்டோர் பழங்குடியினர் இடஒதுக்கீடு 18 சதவிகிதம் (15+3) இருக்கிறது. அதனை மேலும் 7 சதவிகிதம் உயர்த்துவது, உச்சநீதிமன்றம் கூறியுள்ளபடி, 50 சதவிகித உச்சவரம்பை விட அதிகமாகக் கூடாது என்று நீதிமன்றம் கூறுகிறது.

இன்னொரு புறம், ஆந்திராவின் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்னும் நோக்கில், அங்கு ஏற்கெனவே உள்ள இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்த அம் மாநில அரசு முடிவு செய்தது. அதற்கென அமைக்கப்பட்ட ஆர்.ஆர்.மிஸ்ரா என்ற ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான குழு வழங்கிய ஆய்வறிக்கையின்படி, 34% அளவு வரை ஒவ்வொரு உள்ளாட்சி நிர்வாகப் பதவிகளுக்கும், வெவ்வேறு சதவிகிதங் களை நிர்ணயித்துள்ள அந்த அறிக்கையினை ஆந்திர அரசு ஏற்றுள்ளது. அது உச்சநீதிமன்றம் விதித்துள்ள அளவுகளின் படி இருக்கும் என்றும் அவ் வரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதை லட்சுமணக் கோடு (லட்சுமணன் ரேகை) என்று பல நேரங்களில் குறிப்பிடுகிறார்கள்.

1962-ஆம் ஆண்டின் பாலாஜி வழக்கில் கருத்தாகச் சொல்லத் தொடங்கி, 1992-ஆம் ஆண்டு இந்திரா சஹானி வழக்கில் தீர்ப்பாக உறுதிப்படுத்திவிட்டார்கள். அதன் விளைவை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத ஓர் அளவுகோலை, உச்சநீதிமன்றம் திணித்ததுடன், அதை உறுதிப்படுத்தி மீண்டும் மீண்டும் தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. இதில் தமிழ்நாடு மட்டுமே, திராவிடர் கழகத்தின் முயற்சியால், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டு தலால், 69 சதவிகித இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றி, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று அரசியலமைப்புச் சட்டத்தின் 9-ஆம் அட்டவணைப் பாதுகாப்புடன் பயன்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் இந்த 50 சதவிகிதம் என்னும் எல்லையைத் தாண்ட பீகார், கருநாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன என்றாலும், நீதிமன்றங்கள் அதற்குத் தடையை விதித்துக் கொண்டேயுள்ளன. ஆனால், உயர்ஜாதிப் பார்ப்பனர்களுக்கான பொருளாதார அடிப்படையிலான  10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு மட்டும், தங்கள் ‘லட்சுமண ரேகை’யைத் தாண்டுவதற்குத் தயங்கவில்லை உச்சநீதிமன்றம். அவாள் கோடு தானே, வேண்டுமென்றால், அவாளுக்கு மட்டும் கொஞ்சம் தள்ளிப் போட்டுக் கொள்ளலாமே!

உச்சநீதிமன்றம் விதித்துள்ள எல்லையை மீறக் கூடாது என்று சொல்வதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அது எப்படி அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகள் 14, 15, 16-அய் மீறுகின்றன என்று சொல்ல முடியும்? அங்கே தான், சமூகநீதியின் தத்துவத்தை நமது நீதித்துறை புரிந்து கொண்டிருப்பதில் இருக்கும் சிக்கல் வெளிப்படுகிறது.

அனைவருக்குமான வாய்ப்புகளை சமத்துவப் பார்வையில் வழங்குவதற்குத் தான் மேற்சொன்ன அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் இருக்கின்றன. ஆனால், அதற்கான வியாக்கியானங்கள் எப்படி இருக்கின்றன என்றால், இடஒதுக் கீட்டுச் சமத்துவத்தை அடைவதற்கான அரசியலமைப்புச் சட்ட வழிமுறையாகக் கருதி, சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையைச் சரிசெய்வதற்கான வழிமுறையாகக் கருதாமல், இடஒதுக்கீட்டை அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் மேம்போக்கான சமத்துவத்திற்கான விதிவிலக்காகக் கருதுவதால் தான், விதிவிலக்குக்கு ஓர் எல்லை வேண்டும் என்று வரையறுக்கிறார்கள்.

சமத்துவத்தை அடைவதற்கான வழிமுறையாகச் சமூகநீதியைப் புரிந்துகொள்வதில், நீதித் துறைக்கும், உயர்ஜாதியினருக்கும் இருக்கும் பிரச்சினை தான், சமத்துவத்தை மீறி இடஒதுக்கீட்டை வழங்குவதான ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. இந்த அடிப்படைக் கோளாறு சரிசெய்யப்பட வேண்டும். சமத்துவத்தை ஏட்டளவில் எழுதி வைப்பதனால், எதையும் சாதிக்க முடியாது. சமத்துவம் நடைமுறையில் உண்மையாக வேண்டுமானால், அதற்குச் சமூகநீதிதான் சரியான பாதை. அதை அடைத்துவிட்டு, சமத்துவத்தை அடைவோம் என்று பேசுவது ஏமாற்று வேலையே தவிர வேறில்லை!

50 சதவிகிதம் என்னும் இந்த ‘கற்பனையான லட்சுமணக் கோட்டை’  நமக்கு மட்டும் காட்டி, ஏமாற்றும் வேலையை முறியடிக்க வேண்டுமானால், இந்தக் கற்பனைக் கோடு அழிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு வழிகாட்டுகிறது – தமிழர் தலைவர் வழிகாட்டுகிறார் – கையைப் பற்றிக் கொள்ளட்டும் பிற மாநில அரசுகள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *