செங்கல்பட்டு, அக். 14- செங்கல் பட்டின் நெடுஞ்சாலையில், கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக பல்வேறு கடைகள் மற்றும் பொழுது போக்கு அம்சங்களுக்கான ஏலம் விடப்படுவதும் வழக்கமாம்.
இந்த ஆண்டுக்கான தசரா விழா தொடங்கியுள்ள நிலையில், விழா நடைபெறும் நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுப் போக்குவரத்து முழுவதுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியான சூழலில், சாலையையொட்டி அமைந்துள்ள அறிஞர் அண்ணா அரசுப் பள்ளி வளாகத்தின் இருபக்கச் சுவர்களை இடித்துவிட்டு, அங்குப் பெரிய ராட்சத ராட்டினம் அனுமதியின்றி அமைக்கப் பட்டுள்ளது. தசரா விழா தொடங்கி கடந்த 2 நாட்களாக இந்த ராட்டினம் இயக்கப்படவில்லை என்றாலும், அனுமதி கிடைத்தவுடன் அதனை இயக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
பள்ளி வளாகத்தையொட்டி மாணவர்களின் பயன்பாட்டில் இருந்த கழிவறையின் சுவரையும் சேர்த்து இடித்துள்ளதால், அங்கிருந்து கழிவுநீர் முழுவதும் வெளியேறி அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதி மாணவர்களின் சுகாதாரமும் பாதுகாப்பும் கேள்விக் குறியாகியுள்ளது.
அனுமதியின்றி பள்ளிச் சுவரை இடித்து ராட்டினம் அமைத்த செயலுக்குச் சமூக ஆர்வலர்கள், ஊர் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பியபோது, “திருவிழா முடிந்தவுடன் சுவரை மீண்டும் கட்டித் தருகிறோம்” என்று அலட்சியமான பதில் அளித்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பள்ளி வளாகத்தின் பாதுகாப்புச் சுவரையும், கழிப்பறை சுவரையும் உடனடியாகச் சீரமைத்துத் தர வேண்டும். மாணவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக் பாதிக்கச் செய்யும் அனுமதியற்ற செயல்கள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
