தமிழ்நாட்டில் மின்வெட்டைப் பற்றி பேசாத நாட்களே இல்லை! செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்

- Advertisement -

சென்னை, அக். 14- ‘தமிழ்நாட்டில் நாளுக்குநாள் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. தலைமைச் செயலகத்தில்கூட மின்தடை ஏற்படும் அளவுக்கு மின் நிர்வாகம் சீரழிந்துவிட்டது’ என, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் மின்வெட்டைப் பற்றி பேசாத நாட்களே இல்லை. அரசு விழாக்களிலும், சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாக்களிலும், உச்சபட்சமாகத் தலைமைச் செயலகத்தில்கூட மின்தடை ஏற்படுகிறது.

முந்தைய திமுக ஆட்சியில், எவ்விதத் தடையும் இன்றி சீரான மின் விநியோகம் செய்யப்பட்டது. டான்ஜெட்கோவின் சொந்த மின் உற்பத்தி 29 ஆயிரம் மில்லியன் யூனிட்டாக உயர்த்தப்பட்டது. ஆனால், தற்போதைய ஆட்சியில் பிளான்ட் உற்பத்தி 34 சதவீதம் முதல் 35 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

வடசென்னை ஸ்டேஜ் 3 மற்றும் உடன்குடி போன்ற புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் முழுமையாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை. கடந்த காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது ரூ.20-க்கு மின்சாரம் வாங்குவதைக் கண்டித்தவர்கள், இன்று வெளிச்சந்தையில் யூனிட் ஒன்றுக்கு ரூ.35 வரை அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்கின்றனர்.

வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களிலேயே டெண்டர் கோரப்பட்டு பொங்கலுக்கு முன்பே இறுதி செய்யப்படும். ஆனால் தற்போது, வெறும் 5 நாள் அவகாசத்தில் 2,500 மெகா வாட்டுக்கு அவசரக்கதியாக டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்படுவதில் கடுமையான முறைகேடுகளும், ஊழலும் நடந்துள்ளன.

இதனால் மின்வாரியத்தின் கடன் சுமை மேலும் அதிகரித்து, அது மக்கள் மீது மின் கட்டணச் சுமையாக வந்து சேரும். எனவே, கடந்த கால திராவிட மாடல் ஆட்சியின் முறைகளைப் பின்பற்றி தமிழகத்தில் தடையற்ற சீரான மின் விநியோகத்தை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

மருத்துவமனைகளில்

அனைத்து சிகிச்சைகளுக்கான கட்டணங்களை காட்சிப்படுத்த ஒன்றிய அரசு உத்தரவு!

சென்னை, அக். 14- மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டணங்களை வெளிப்படையாக காட்சிப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை செயலர் புன்ய சலிலா சிறீவஸ்தவா, அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மருத்துவமனைகளில் வெளிப்படைத் தன்மை கொண்டு வந்தால், மருத்துவப் பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிகிச்சைக்கான செலவை முன்கூடியே திட்டமிடுவார்கள்.

கட்டணம் தொடர்பான தேவையற்ற குழப்பங்ளை தவிர்க்க முடியும். மருத்துவ சேவைகள் மீது பொது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். அதனால், மருத்துவ நிறுவனங்கள் சட்டம் அமலில் உள்ள மாநிலங்களில், ஒவ்வொரு சேவைக்கான கட்டண விபரங்கள் ஆங்கிலம் மற்றும் அந்தந்த உள்ளூர் மொழியில் பொதுமக்கள் எளிதில் பார்க்கும் இடத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.

மாநில பட்டியலில் சுகாதாரம் இருப்பதால், இவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை தலைமைச் செயலர்கள் தனிப்பட்ட முறையில் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். அதேபோல், மருத்துவ சுற்றுலாவாக வரும் வெளிநாட்டு மருத்துவப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை கட்டணங்களையும் வெளிப்படையாக காட்சிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

ஒரு கார்டுக்கு 50 கிராம் வெங்காயமாம்!

ஆயிரம் ரேசன் அட்டைகளுக்கு
50 கிலோ வெங்காயம் மட்டுமே விநியோகம்!

ஊழியர்கள் திணறல்!

மதுரை, அக். 14- கூட்டுறவுத்துறை சார்பில் நடத்தப்படும் ரேசன் கடைகளுக்கு 1,000 அட்டை தாரர்களுக்கு 50 கிலோ வெங்காயம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு அட்டைக்கு 50 கிராம் அளவே இருப்பதால், சமாளிக்க முடியாமல் ஊழியர்கள் திணறுகின்றனர்.

வெங்காயம் உற்பத்தி குறைந்ததால் சந்தைகளுக்கு வரத்தும் குறைந்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110இல் ருந்து ரூ.120 வரை விற்கப்படுகிறது. இதனால் பெரிய வெங்காயத்தை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் அதன் தேவையும் அதிகரித்துள்ளது.

இதனால் வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ரேசன் கடைகளில் வெங்காயம் விநியோகிக்கப்படுகிறது. ஆனால குறைந்த அளவு ரேசன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுவதால், அதை சரியாக மக்களுக்கு விநியோகிக்க முடியாமல் ஊழியர்கள் திணறி வருகிறார்கள்.

இதுகுறித்து குடும்ப அட்டைதாரர்கள் கூறுகையில், “வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.65க்கு விற்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் ரூ.35-க்கு விற்கின்றனர். 1,000 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெறும் 50 கிலோ மட்டும் வழங்குகின்றனர். ஒரு அட்டைக்கு 50 கிராம் என்ற அளவில்தான் உள்ளது. அட்டைக்கு ஒரு கிலோ வழங்கும்போது, மீதமுள்ள 950 பேருக்கு கிடைக்கவில்லை. எனவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கிடைக்கும் வகையில் தரமான வெங்காயம் வழங்க வேண்டும்’ என்று கூறினர்.

இதுகுறித்து கூட்டுறவுத் துறையினர் கூறுகையில், ‘மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் கிராமங்கள், நகர் பகுதிகளில் 1,409 ரேசன் கடைகள் உள்ளன. இதில் நகர் பகுதியிலுள்ள 481 கடைகளுக்கு மட்டும் மாதத்துக்கு 30 டன் வெங்காயம் வழங்கி உள்ளோம். கடந்த செப்டம்பரில் மாவட்டம் முழுவதும் 120 டன் வெங்காயம் வழங்கினோம். அரசு எவ்வளவு தருகிறதோ, அதனை கடைகள் வாரியாக பிரித்து அனுப்புகிறோம்.

தேவை அதிகரித்துள்ளதால் சில நாள்களில், கிராமப் புறங்களிலுள்ள கடைகளுக்கும் வழங்க உள்ளோம். குறைந்த அளவிலேயே வழங்கப்படுவதால், ஊழியர்கள் மிகுந்த சிமரத்திற்குள்ளாகின்றனர்’ என்று கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *