2021 முதல் 2026 வரையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முத்திரைத் திட்டங்களுள் ஒன்று ‘நான் முதல்வன்’. ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் இளைஞர் களுக்குத் திறன் பயிற்சி அளித்து, அவர்களை உலகளாவிய வேலைவாய்ப்புகளுக்குத் தயார்படுத்தும் நோக்கத்துடன், ‘நான் மட்டுமல்ல, எல்லோருமே முதல்வராகலாம்’ என்னும் கருத்தை விதைக்கும் வகையில் அன்றைய முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களால் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1-ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளில், இத் திட்டத்தின் கீழ், 41,38,833 மாணவர்களுக்கும், 1,00,960 நிறுவனங்களுக்கும் பயிற்சியும் திறன் மேம்பாட்டுச் சேவைகளும் வழங்கப் பட்டன. (ஜூலை 2025)
2,59,072 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய பயிற்சிகள் வழங்கப்பட்டன. பொறியியல் கல்லூரிகளிலும், தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் பயின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
குறிப்பிட்ட பயிற்சிகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள், தொழில்துறை வாய்ப்புகள் மூலம் பணியில் சேர்வதற்கான வழிகள் ஏற்படுத்தப்பட்டன. பள்ளிக் கல்வியை முடித்த மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்லும் வாய்ப்புகளை மேம்படுத்துதல், தொழில்நுட்பக் கல்வியில் சேர்வதற்கான வழிகாட்டுதல் வழங்குதல், உயர்கல்விக்குப் பிறகு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான திறன்களை வளர்த்தல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருந்தன.
இந்தத் திட்டம் நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக ஊரகப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் திறன்களையும் உயர்த்துவதற்கு மைக்ரோசாஃப்ட், கூகுள், அய்.பி.எம், சிஸ்கோ போன்ற உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து தொழில்துறை சார்ந்த திறன் பயிற்சிகளை வழங்கியது.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தொழில்முறைப் பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்புகளும், மாணவர்களின் திறன்களைப் பன்னாட்டு அளவில் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, குடிமைப் பணிக்காகத் தயாராகும் மாணவர்களுக்குச் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. ஒன்றிய அரசுப் பணிகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கான தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை மற்றும் உறைவிடப் பயிற்சித் திட்டங்களின் கீழ் 1,000 குடிமைப் பணித் தேர்வு விண்ணப்பதாரர்கள் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அக்டோபர் 2023 முதல், 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்பட்டது. இதுவரை, 1,288 மாணவர்கள் 2024ஆம் ஆண்டு குடிமைப் பணி முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றனர். இந்த மாணவர்களுக்கு இறுதித் தேர்வுக்கான ஊக்கத்தொகையாக தலா ரூ.25,000 வழங்கப்பட்டது. குடிமைப்பணித் தேர்வில் 2022ஆம் ஆண்டில் தமிழ் நாட்டிலிருந்து 36 இளைஞர்களும், 2023ஆம் ஆண்டில் 47 இனைஞர்களும் தேர்ச்சி பெற்றனர். ஆனால், 2024ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து 57 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று வெற்றி கண்டவர்கள் என்பது ‘நான் முதல்வன்’ திட்டத்திற்குக் கிடைத்த தனிப்பெருமையாகும்.
இத்தகைய திட்டத்தைச் சீர்குலைக்கும் வகையில், புதிய ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்ததிலிருந்து காட்சிகள் மாறிவருகின்றன். எந்த அரசியல் சார்பும், தலைவர்களின் அடையாளமும் இல்லாமல் ‘நான் முதல்வன்’ என்று பெயரிடப்பட்டிருந்த திட்டத்திற்கு ‘திறன் தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றியதுடன், முந்தைய திட்டத்தின் அடையாளத்தையும் வெற்றியையும் மறைக்கும் வகையில், அதன் இணையதளம், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மாற்றினார்கள்.
தற்போது, குடிமைப் பணித் தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்களுக்கான உதவித் தொகை வழங்கும் தேர்வுகளிலும் ஆங்காங்கே குழப்பம் என்றும், முறைகேடு செய்த மாணவர்கள் சிலருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சில மாணவர்கள் இது தொடர்பாக இணையதளங்களில் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். ஏழை, எளிய மாணவர்களுக்கும், கல்வி வாய்ப்பு பெரிதும் மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த மாணவர்களுக்குமான அரிய வாய்ப்பை வழங்கும் இத் திட்டத்திற்கான மாணவர் தேர்வில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் இருக்கக் கூடாது; யாருக்கும் முறைகேடான முன்னுரிமை கூடாது என்று கோருவது நம்முடைய மாணவர்களின் உரிமை ஆகும். உயர்கல்விக்கான பொற்காலமாகத் திகழ்ந்த ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளை விஞ்ச முடியாவிட்டாலும், பயனுறு புதிய திட்டங்களைக் கொண்டுவராவிட்டாலும், இருக்கும் திட்டங்களைக் குளறுபடி இல்லாமல் முழுமையாக செயல்படுத்த வேண்டியது யார் ஆட்சி என்றாலும் அவை முக்கியமானதாகும்.
