கேள்வி:- குழந்தைகளுக்கு உணவு உண்ண முடியாத பிரச்சினை எதனால் வருகிறது?
பதில்:- உணவு உண்ண முடியாத பிரச்சினை பெரும்பாலும் குழந்தைகளின் தொண்டைப் பகுதியில் ஏற்படும் கோளாறால் வருகிறது. மிகச் சில காரணங்கள் உணவுக் குழாய்களாலும் ஏற்படலாம்.
கேள்வி:- குழந்தைகள் சாப்பிட முடியாமல் இருப்பது டான்சிலால் ஏற்படுமா?
பதில்:- டான்சில் கிளாண்டில் ஏற்படும் தொற்றுக் காரணமாக தற்காலிக தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், நெடு நாட்களாக சாப்பிட முடியாமல் இருப்பது டான்சிலால் வர வாய்ப்பு இல்லை.
விருப்பமான உணவு
கேள்வி:- குழந்தைகள் நீண்ட நேரம் உணவை வாயில் வைத்துக் கொண்டு இருப்பது எதனால் ஏற்படுகிறது?
பதில்:- குழந்தைகளுக்குப் பிடிக்காத உணவை பசி இல்லாத நேரத்தில் கட்டாயப்படுத்தி ஊட்டும் போது அதனை எதிர்க்கும் விதமாக நீண்ட நேரம் வாயில் வைத்திருப்பார்கள்.
உணவு என்பது விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு விஷயம். எனவே, குழந்தைகள் விரும்பும் மாதிரியான விருப்பமான உணவைக் கொடுத்தால் சரியாக சாப்பிடுவார்கள்.
கேள்வி:- குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கும் போது வாந்தி ஏற்படுவது பிரச்சனையா?
பதில்:- 90 சதவீதம் குழந்தைகள் கட்டாயப்படுத்தி உணவு ஊட்டுவதலால் மட்டுமே வாந்தி வரும். வெகு சில காரணங்களால் மட்டுமே உணவுக் குழாய் பிரச்சினை மூலம் வாந்தி வரலாம்.
புரை ஏறுதல்
கேள்வி:- உணவு உண்ணும் போதோ, தண்ணீர் குடிக்கும் போதோ புரை ஏறுதல் இயல்பானதா?
பதில்:- எப்போதாவது புரை ஏறுவது நரம்புதசை ஒருங்கிணைப்புக் குறைபாடு (Neuromuscular incoordination)களால் ஏற்படலாம். ஆனால் தொடர்ச்சியாகப் புரை ஏறினால் உணவு மூச்சுக் குழாய்க்குள் சென்று நுரையீரல் தொற்றாக மாற வாய்ப்பு உள்ளது. எனவே தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சை அளிக்க வேண்டும். அதோடு புரை ஏறுதலும், மூச்சுத் திணறலும் குரல் மாறுபாடும் இணைந்து இருந்தால் உடனடியாக வாய் வழியாக உணவு அளிப்பதை நிறுத்தி சிகிச்சை பெற வேண்டும்.
கேள்வி:- நாக்கு ஒட்டி (TongueTie) பிறப்பதால் பால் குடிப்பதில் பிரச்சனை வருமா?
பதில்:- பச்சிளம் குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும் போதோ, அல்லது புட்டி பால் குடிக்கும் போதோ, முறையாக பால் அருந்துவதில் சிரமம் ஏற்படலாம். அப்படி இருந்தால் ஆரம்ப கட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
தாய்ப்பால்
கேள்வி:- தாய்ப்பால் குடிப்பதில் பச்சிளம் குழந்தைக்கு ஏற்படும் தயக்கத்தை நிவர்த்தி செய்வது எப்படி?
பதில்:- பச்சிளங் குழந்தைக்கு தாய்ப்பால் சிறந்த உணவு. சிறந்த மருந்து. எனவே குழந்தை பிறந்து சில மணித்துளிகளுக்குள்ளாகவே தாய்ப்பால் குடிக்க பழக்கப்படுத்த வேண்டும். அதில் தயக்கம் இருக்கும் குழந்தைகளுக்கு சரியான பொசிஷனில் அமர வைத்து சரியான அளவில் பால் கொடுப்பதை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். latching குறைபாடு இருந்தால் தாய்ப்பால் நிபுணர் (Iatational specialist) உதவியை நாடலாம்.
கேள்வி:-தாய்ப்பால், புட்டிப்பால் மற்றும் பாலாடை கொடுக்கும்போது ஒவ்வொரு முறையும் புரைக்கு ஏறி மூச்சு திணறல் (Chocking )ஏற்பட்டாலோ, உதடு கை கால்கள் ஊதா நிறத்தில் மாறினாலோ, வாய் வழியாக கொடுப்பதை உடனடியாக நிறுத்தி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்
உமிழ்நீர்
கேள்வி:- உமிழ்நீர் வடிந்து கொண்டே இருப்பது இயல்பானதா?
பதில்:- உமிழ்நீர் வடிவது நரம்புக் கோளாறு இருக்கும் குழந்தைகளுக்கு அல்லது உமிழ் நீர் சுரப்பி அதிகமாக சுரக்கும் குழந்தைகளுக்கு இருக்கலாம். அதற்கான காரணத்தை ஆராய்ந்து மருந்துகள் மூலமாகவோ, பயிற்சி (oro muscluur exercise) மூலமாகவோ அல்லது உமிழ் நீர் சுரப்பி யில் ஊசி செலுத்தியோ (Botox injection) சரிப்படுத்தலாம்.
கேள்வி:- உணவு உண்ணும் பிரச்சனைகளுக்கு Therapy செய்யலாமா?
பதில்:- உணவு மெல்லுவதிலோ விழுங்குவதிலோ பிரச்சனை இருக்கும் பட்சத்தில் swallow therapist உதவியை நாடி தொடர்பயிற்சியால் சரி செய்து கொள்ளலாம்.
