சிறிய சிறுநீரகத்தின் பெரிய பணி

3 Min Read

உங்கள் சிறுநீரகத்தின் ஆரோக்கிய நிலையை உறுதி படுத்திக் கொள்ள சில கேள்விகள்!

ஒருவரது உடல்நலனில் இதயம்தான் முக்கியம் என்று கருதுகிறோம். ஆனால், சிறுநீரகம் முதல் கல்லீரல் வரை ஒவ்வொரு சின்ன சின்ன உறுப்புகளுமே, உடல் நலனில் முக்கியத்துவம் பெறுகின்றன.

பெரும்பாலானோருக்கு சிறுநீரகம் நன்றாக இருக்கிறதா? இல்லையா என்பதை உறுதி செய்வதிலேயே மிகப்பெரிய சிக்கல் ஏற்படலாம்.

மேலும், சிறுநீரகப் பிரச்சினைகள் முதற் கட்டத்திலேயே தெரிவதில்லை. நிலைமை மோசமடைந்த பிறகுதான் அறிய முடிகிறது. ஆனால், சில அறிகுறிகளை ஆரம்பகட்டத்தில் காட்டும் என்றும் அதனை அறிந்து கொண்டு முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டால் சிறுநீரகத்தை நலமாக வைத்துக் கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானவை. இதயம் துடித்துக் கொண்டே நமக்கு அதன் இருப்பைக் காட்டிக்கொண்டிருக்கும். வயிறோ நேரத்துக்கு மணி அடித்து, அதன் வேலையை செய்துவிடும். ஆனால் சிறுநீரகமோ சப்தமே இல்லாமல் 24 மணி நேரமும் அதன் வேலையை செய்து கொண்டிருக்கும்.

கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 200 லிட்டர் ரத்தத்தை சுத்திகரிப்பு செய்து சுழற்சியில் விடுகிறது. ஆனால், அது வேலையை மெல்ல நிறுத்தும்போது ஆரம்பத்திலேயே தெரிந்து கொள்ளாவிட்டால், நிலைமை மோசமடையலாம்.

சரி, சிறுநீரகத்தின் மொழியை அறிந்து கொண்டால் முன்கூட்டியே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரலாமா?

அதாவது, ஒரு சிறுநீரகம், எந்த அறிகுறியும் இல்லாமலேயே 40 சதவீத வேலையை நிறுத்திவிடும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, அது வேலையை நிறுத்தத் தொடங்கும்முன் செய்யும் அறிகுறிகளை அறிந்து கொள்வதுதான் நல்லது.

சிலரோ, சிறுநீரகம் சொல்லும் அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிட்டு, வயதாகிறது, சத்துக் குறைவு என சப்பைக் கட்டுகளை கட்டினால் ஒருநாள் சிறுநீரகம் முழுதும் வேலையை நிறுத்திவிடலாம்.

எனவே, இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்து சிறுநீரகம் நலமா என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.

  1. இரவில் வழக்கத்தை விட அதிக முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு.
  2. சிறுநீர் நுரையுடன் வருவது.
  3. சிறுநீரின் நிறத்தில் மாற்றம் ஏற்படுவது போன்றவை அறிகுறிகளாக இருக்கலாம்.

பொதுவாக நுரையுடன் சிறுநீர் வருவத புரதம் அதிகம் கலந்திருப்பதைக் காட்டுகிறது என்று அர்த்தம்.

ஆரோக்கியமான சிறுநீரகங்கள் புரதத்தை வடிகட்டி ரத்தத்தில் சேர்த்துவிடும். சிறுநீரக வடிப்பான்கள் செயலிழக்கும்போது அதன் வழியே புரதம் வெளியேறி சிறுநீரில் கலந்து விடுகிறது என்பதை அறிய வேண்டும்.

காலையில் எழுந்ததும் கண்களுக்குக் கீழே அல்லது கால் முட்டிகளில் வீக்கம் ஏற்பட்டால் கவனம் செலுத்த வேண்டும். உடலில் இருக்கும் அதிகப்படியான நீரை மற்றும் சோடியத்தை சிறுநீரகம் வெளியேற்றுவதில்லை என்பதையே இது காட்டுகிறது.  சிலர் அதிக நேரம் நிற்பதால் இப்படி நேரிடுகிறது என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால், தூங்கி எழுந்ததும் இப்படி ஆகிறது என்றால் அது சிறுநீரகத்தைக் கவனிக்க வேண்டிய நேரம் என்பதைத்தான் காட்டுகிறது என அர்த்தமாம்.

இதையெல்லாம் விட, மக்கள் எப்போதும் ரத்த அழுத்தத்தை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். சிறுநீரகம்தான் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. சிறுநீரகம் அதிக அழுத்தத்துக்கு உள்ளாகும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதனை சீராக்க சிறுநீரகம் அதிகம் வேலை செய்யும்போது அதன் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.

நமது நாட்டில் 65 சதவீத சிறுநீரகப் பிரச்சினைகள், வாழ்முறை மாற்றங்களால்தான் நேரிடுகின்றனவாம்.

உடல் பருமன் மற்றும் வயிறுப் பகுதியைச் சுற்றியிருக்கும் கொழுப்பு, சிறுநீரகத்தின் செயல்பாடுகளைப் பாதிக்கும் காரணிகளாக உள்ளனவாம். எனவே, சிறுநீரகத்தைக் காக்க உடல் பருமனைக் குறைக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதிப்பது போன்றவையும் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *