சென்னை, அக். 12- சென்னையில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்ெகாடி ஏந்தி பேரணியில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் 30-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் ஒன்று இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றன. சென்னையிலும் நேற்று முன்தினம் (10.10.2026) பல்வேறு மாணவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். இதற்கிடையே, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று (11.10.2026) சென்னை வந்தார்.
அப்போது, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரியும், பிரதமர் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சைதாப்பேட்டை திறந்தவெளி பல்கலைக்கழகம் அருகில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தியும், கோரிக்கை அட்டை அணிந்தவாறும் முழக்கமிடப்பட்டு பேரணியாக சென்றனர். மேலும், 13 கோடி வாக்காளர்களை நீக்கிய தலைமைடா தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகவேண்டும். டில்லியில் நடைபெறும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஊர்வலமாக வந்தபோது அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் பேரணியாக வந்தவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 30-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் குண்டுக் கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதில், அஜய், விக்னேஷ், ஆண்டோ ஆகிய மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக, ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஞானேஷ்குமார் பதவியில் நீடிக்க கூடாது என்று டில்லியில் போராடியவர்களை காவல் துறை கைது செய்துள்ளது. எனவே, பிரதமரின் சென்னை வருகையை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் நடத்துகிறோம். வாக்காளர் பட்டியலிற் சிறப்பு திருத்தம் குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் பேச வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமையான வாக்குரிமை பறிப்பை ஒருபோதும் ஏற்கமுடியாது. இதற்க எதிரான போராட்டம் தொடரும்’ என்றார்.
