சென்னை, அக். 12- தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு தர வேண்டிய கல்வி நிதி ரூ.5,110 கோடியை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு சார்பில் ரூ.13 ஆயிரம் கோடியில் புதிய திட்டங்கள் அடிக்கல் நாட்டுதல் மற்றும் நிறைவடைந்த திட்டங்களை திறந்து வைக்கும் விழா சென்னை அய்அய்டி வளாகத்தில் நேற்று (11.10.2026) நடைபெற்றது.
அப்போது, பிரதமர் மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய் பேசியதாவது:
ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும்போது அதன் பலன் நேரடியாக மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது அணுகுமுறை. தமிழ்நாட்டில் வளர்ச்சியின் பயன் சென்னையைத் தாண்டி மாநிலத்தின் அனைத்து மாவட்டங் களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறோம்.
வருங்காலத்தில் மேற்கு, தெற்குப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இரு மாநிலங்களின் நலனுக்காக, தமிழ்நாட்டில் உள்ள ஓசூரில் இருந்து கருநாடகாவில் உள்ள பொம்மசந்திரா வரை மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.
2026 ஒன்றிய பட்ஜெட்டில் பெங்களூரு, அய்தராபாத் மற்றும் சென்னை இடையே 2 அதிவேக ரயில் வழித்தடங்களை அறிவித்த பிரதமருக்கு நன்றி. சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில், சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் கோவை வரை அதிவேக ரயில் வழித்தடத்துக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான ஜிஎஸ்டி சாலை, தேசிய நெடுஞ்சாலை 81இன் திருச்சி, பஞ்சப்பூர், ஜெயபுரம், கரூர் பகுதிகள், கரூர்-கோவை பகுதி ஆகியவற்றை 6 வழிச் சாலைகளாக மாற்றுவது மற்றும் தேசிய நெடுஞ்சாலை 87இல் மாதவரம் – சோழவரம் வரை உயர்மட்டப் பாலம் அமைப்பது ஆகிய திட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை தேசியத் திட்டமாகச் செயல்படுத்த வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற நடவடிக்கைகளில் தமிழை முதன்மை மொழியாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சமக்ர சிக் ஷா அபியான் திட்டத்தின்கீழ், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.5,110 கோடியை எந்தவித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.
