சென்னை, அக். 12- திமுக மாற்றுத்திறனாளிகள் அணி செயலாளர் தீபக் நாதன் நேற்று (11.10.2026) வெளியிட்ட அறிக்கை: புதிய மெட்ரோ ரயில் திட்டத்தில் பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள், செவித்திறன் குறைபாடு உடையவர்கள், சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர் மற்றும் பிற மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் பயணிப்பதற்கான வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளனவா?.
மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல்தன்மை தொடர்பான விதிமுறைகளின்படி ஆய்வு செய்யப்பட்டுள்ளதா, அதற்கான உரிய இணக்கச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளனவா, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கும் முன், மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளக்கூடிய தடைகள் அடையாளம் காணப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளனவா என அரசு விளக்கமளிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையம் இத்திட்டத்தின் அணுகல் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளதா, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திட்டத்தை நேரில் ஆய்வு செய்து, குறைபாடுகள் குறித்து அரசுக்கு பரிந்துரைகள் அளித்துள்ளனரா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இவ்விவகாரத்தில் தனது கருத்துருவை அரசுக்கு அனுப்பியுள்ளதா என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் விஜய், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் அணுகல்தன்மை தொடர்பான முக்கியமான விவகாரங்களில் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பாரா அல்லது மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் மீண்டும் புறக்கணிக்கப்பட அனுமதிக்கப்படுமா?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு விழா மேடையில்
பிஜேபி தலைவரை அமர வைக்கலாமா?
இது ஒரு மோசமான முன் உதாரணமாகும் அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!
மதுரை. அக். 12- ஒன்றிய அரசு விழா மேடையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான, மோசமான முன்னுதாரணம் என அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து மதுரை விமான நிலைத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னையில் நடைபெற்ற ஒன்றிய அரசு விழாவில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எப்படி அமர வைக்கப்பட்டார்? இது ஒரு தவறான, மோசமான முன்னுதாரணம். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாதோரை விழா மேடையில் அமர வைக்கக்கூடாது. இனிமேல், நடைபெறும் விழாக்களில் இதைத் தவிர்க்க வேண்டும்.
தமிழ்நாட்டின் நலன்களைச் கருதியே ஒன்றிய அரசு விழாவில் முதலமைச்சர் பங்கேற்றார். முகத்தை மூடிக்கொண்டு யாரையும் எங்கள் முதலமைச்சர் பார்க்க மாட்டார். தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் உட்பட தமிழ்நாடு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஒன்றிய அரசையே நம்பி இருக்கிறோம்.
இதற்காக ஒன்றிய அரசு விழாக்களில் முதலமைச்சர் பங்கேற்பார், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடும்போது, தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சரும், அமைச்சரும் போஸ்ட் போட்டு வாழ்த்து தெரிவித்தனர். இது வழக்கமானதுதான். அங்கு யாருடைய மாப்பிள்ளையும், மகனின் நண்பர்களும் இல்லை.
கடந்த காலத்தில் திருப்பரங்குன்றத்தில் பிரச்சினை இன்றி அனைத்தும் அமைதியாக நடந்தன. பாஜக என்றைக்கு தலையிட்டதோ அன்றுமுதல் மக்களின் அமைதியைக் கெடுத்துவிட்டது. மலையில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் அமைதியாக வழிபாடு நடத்தினர். மக்களின் அமைதியை பாஜக கெடுக்க நினைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் போக்கை பாஜக மாற்றிக்கொள்ள வேண்டும். மின்சாரத் தட்டுப்பாடு இருக்கிறது. இதை சரி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
இரண்டு நாட்களில்
2,483 படிவங்கள் பெறப்பட்டன

சென்னை, அக். 12- சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக நடைபெற்ற இரண்டு நாள் சிறப்பு முகாம்களில் பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அக்டோபர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த முகாம்களின் விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
சிறப்பு முகாம் முக்கிய விவரங்கள்
வழங்கப்பட்ட படிவங்கள்: 3,364. பெறப்பட்ட நிரப்பப்பட்ட படிவங்கள்: 2,483. (சுமார் 74%)நிலுவை / மீதமுள்ளவை: 881 படிவங்கள் குறைவாகப் பெறப்பட்டுள்ளன. வெளிநாடுவாழ் இந்திய வாக்காளர் படிவம் (6ஏ): ஒன்று கூட வழங்கப்படவில்லை.
